Published : 18 Mar 2014 07:52 PM
Last Updated : 18 Mar 2014 07:52 PM
நீலகிரி மாவட்டம் உதகையைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி, ஓய்வூதியம் கோரி 7 ஆண்டுகளாக ஆட்சியர் அலுவலகத்துக்கு நடையாய் நடந்தும் பயன் இல்லாததால், தேர்தல் காலத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியை நம்பி தனது மனுவை அதில் போட்டுச் சென்றார்.
பிங்கர்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் தேவகி (70); இவரது கணவர் உதகை நகராட்சி அலுவலகத்தில் சுகாதாரப் பிரிவில் கடை நிலை ஊழியராக பணிபுரிந்து, 1992-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். பின்னர் 2007-ம் ஆண்டு அவர் இறந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினர் நலனுக்காக வழங்கப்படும் ஓய்வூதியம், 7 ஆண்டுகளாகியும் தேவகிக்கு கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நகராட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு நடையாய் நடந்தும் எந்தவித பயனும் இல்லை. மேலும் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் குறைதீர் கூட்டத்திலும் தவறாமல் மனு அளித்து வந்தார்.
இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், கணவர் இருந்த வரை பணிக்கொடை, சரண்டர் விடுப்பு, சம்பள கமிஷன் நிலுவைத் தொகை உள்ளிட்ட எந்தவித பலன்களையும் பெறவில்லை. அவர் இறந்த பின்பு குடும்ப ஓய்வூதியம் அளிக்கக் கோரி விண்ணப்பித்தேன். ஆனால் 7 ஆண்டுகளாகியும் பல முறை விண்ணப்பித்தும் பயன் இல்லை.
உதகை நகராட்சியில் கேட்டால், கணவரின் பதிவேட்டினை நகராட்சியில் பணிபுரிந்த வேறு ஒருவரின் பெயரில் தவறுதலாக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். எனது உடல் நிலையை கருத்தில்கொண்டு, குடும்ப ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT