Published : 22 Jan 2014 03:54 PM
Last Updated : 22 Jan 2014 03:54 PM

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆதரவை கேட்க மாட்டோம்: திமுக தலைவர் கருணாநிதி பேட்டி

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரசின் ஆதரவை கேட்க மாட்டோம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தூக்குத் தண்டனை கைதி களின் தண்டனையைக் குறைத்து உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து?

தூக்குத் தண்டனை கூடவே கூடாது என்று இன்று நேற்றல்ல, நீண்டகாலமாக கூறி வருகிறேன். அது இன்றைக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதுகுறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது கருணை மனு தாக்கல் செய் துள்ள நிலையில், சிறையிலே இருக்கும் மூன்று பேருக்கும் இந்த தீர்ப்பு பொருந்துமா?

அவர்களுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் வகையில் முடிவு வெளிவந்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்.

சொத்துக் குவிப்பு வழக்கிலே சிக்கியுள்ள அதிமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளலாமா என்று ஸ்டாலின் கேட்டுள்ளாரே அதுபற்றி உங்கள் கருத்து?

பொதுவாக மக்களிடம் பிரதிபலிக்கும் கருத்தை அவர் தெரிவித்திருக்கிறார்.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவு கேட்கும் உத்தேசம் உள்ளதா?

இல்லை.

தேமுதிகவிடம் ஆதரவு கேட்கப்படுமா?

பொறுத்திருந்து பாருங்கள்.

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தேமுதிகவுக்கு விட்டுக் கொடுத்தால், மக்களவைத் தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி உருவாக வாய்ப்பாக இருக்கும் என்று அந்தக் கட்சியின் சார்பில் கருத்து சொல்லப்படுகிறதே?

விஜயகாந்த் தலைமையிலே உள்ள தேமுதிகவுக்கும் திமுகவுக்கும் இடையே கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அந்தப் பேச்சுவார்த்தை நடந்தால், அப்போது நீங்கள் தெரிவித்த கருத்தும் பரிசீலிக்கப்படும்.

மனிதநேய மக்கள் கட்சி சார்பிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பிலும் விஜயகாந்தைச் சந்தித்து, திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்களே?

அவர்களுடைய நல்லெண் ணத்தை பாராட்டுகிறேன்.

தேமுதிகவுக்கு நீங்களே நேரடியாக அழைப்பு விடுக்கலாமே?

எங்களுடைய அழைப்பை தெரிவிக்க வேண்டிய முறையில் தெரிவித்திருக்கிறோம். இவ்வாறு கருணாநிதி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x