Published : 28 Jun 2017 12:21 PM
Last Updated : 28 Jun 2017 12:21 PM

அப்படி என்னதான் இருக்கு ‘எய்ம்ஸ்’மருத்துவமனையில்? - மதுரை மக்களிடம் நாளுக்குநாள் எதிர்பார்ப்பு அதிகரிப்பு

தென் தமிழகத்தில் தனியார் மருத்துவ மனைகள் புற்றீசல்போல அதிகரித்தாலும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் இன்னமும் சிகிச்சைபெறச் செல்லும் இடமாக இருப்பது அரசு மருத்துவமனைகள்தான். உயர் சிகிச்சைகளுக்கு சென்னை, கோவை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களுக்குச் செல்லவேண்டிய நிலையில் தென் மாவட்ட மக்கள் இருக்கிறார்கள்.

அதனால் ‘எய்ம்ஸ்’ போன்ற உலகத் தரமான மருத்துவமனை தென் தமிழகத் தின் மருத்துவத் தலைநகரான மதுரையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்டகாலமாகவே இருந்தது. தற்போது ‘எய்ம்ஸ்’ மதுரையில் அமையும் வாய்ப்பு கைகூடி வந்த நேரத்தில், தேவையற்ற அரசியல் தலையீடுகளால் கைநழுவி போகக் கூடுமோ என்ற அச்சம், தென் மாவட்ட மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அதனால், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தொடர்ச்சியாக பல்வேறு பொதுநல அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் மதுரையில் நடத்தப்படுகின்றன. மதுரையைப் போல, தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட மற்ற 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களும் ‘எய்ம்ஸ்’க்காக போராட்டக் குரல் எழுப்புகின்றனர்.

உலக தரம் வாய்ந்த சிகிச்சை

அனைவரும் எங்களுக்குத்தான் வேண்டும் என்று வற்புறுத்தும் அளவுக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மருத் துவமனை அமையப் பெற்றால் அரசு மருத்துவமனைகளைப் போல, சாமானியர்களுக்கும் உலகத் தரமான சிகிச்சை எளிதாகக் கிடைக்குமா? என்ற விவாதங்களும் மற்றொருபுறம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளன.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்கப் புற்றுநோய்த் துறை பேராசிரியர் டாக்டர் சக்கரவர்த்தி கூறியதாவது: அனைத்து மருத்துவ வசதிகளையும், மருத்துவக் கல்வியையும் ஒரே இடத்தில் வழங்க டெல்லியில் 1956-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் ‘எய்ம்ஸ்’ (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம்) மருத்துவமனை. எதிர்காலத்தில் நோய் வராமல் நிரந்தரமாகத் தடுக்கவும், இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக் கூடியது.

இந்தியாவிலேயே ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை உலகத் தரம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு சாமானியனும், பெரும் பணக்காரர்களும் சிகிச்சை பெறக்கூ டிய வகையில் இலவச சிகிச்சையும், மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட சலுகைக் கட்டண அடிப்படையிலான சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளுக்கு பணிபுரிய செல்லக்கூடாது.

இவர்களுக்கான வீடு கள் மருத்துவமனை வளாகத்திலேயே அனைத்து நவீன வசதிகளுடன் அமைக் கப்படும். நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவருக்குக் கூட ஏதாவது உடல்நலக் குறைபாடு என்றால் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில்தான் சிகிச்சை வழங்கப்படுகிறது. அப்படியொரு மருத்துவமனை மதுரையில் அமைவது சிறப்பு. அந்த மருத்துவ நிறுவனத்தில் படிப்பது, பணிபுரிய வாய்ப்பு கிடைப்பது தென் தமிழகத்தின் மருத்துவர்களுக்கு பெருமைக்குரிய விஷயம் என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

அரசு மருத்துவக் கல்லூரி போக ‘எய்ம்ஸ்’ல் கூடுதலாக எம்பிபிஎஸ் சீட்டுகளும், ஸ்பெஷாலிட்டி மற்றும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு சீட்டுகளும் கிடைக்க வாய்ப் புள்ளது. இங்கு படிக்க தனியாக நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மத்திய அரசு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஆண்டுதோறும் 170 மில்லியன் டாலர் (ரூ. 1096 கோடி) பணம் செலவழிக்கிறது.

அந்தளவுக்கு நிதி கிடைக்காவிட்டாலும், ஓரளவு நிதி மதுரை எய்ம்ஸுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளதால் தென் தமிழகத்தின் மருத்துவத் தரம் உயரும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை யில்தான் முதன்முதலாக இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வேணுகோபால் என்னும் தமிழர்தான் இந்த அறுவைச் சிகிச்சையை செ ய்தார். மூளையில் சிறிய வீக்கம் இருந் தாலோ, ரத்தக் குழாயில் வீக்கம் இருந்தாலோ உள்ளே போய் அடைக்கும் நவீன சிகிச்சையும் ‘எய்ம்ஸ்’ல் தான் நடைபெற்றது. அதேபோல, செயற்கை கருத்தரிப்பு மையமும் எய்ம்ஸ்-ல் தான் முதலில் தொடங்கியது, என எய்ம்ஸ் மருத்துவமனையின் பெருமைகளை விவரித்தார்.

இதய அறுவை சிகிச்சை இலவசம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ்.மணிமாறன் கூறுகையில்,

‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் ஒரு நோயாளி சிகிச்சை பெற ஒரு ஆண்டுக்கான நுழைவுக் கட்டணமாக 10 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆண்டு முழுவதும் இலவசமாக சிகிச்சை பெறலாம். தங்கியிருந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற அனுமதிக் கட்டணமாக 25 ரூபாயும், ஒரு நாளைக்கு 35 ரூபாயும் செலுத்த வேண்டும்.

அதேபோல வசதி படைத்தவர்கள், தனியார் மருத்து வமனையைப் போல வசதியாக அமர்ந்து சிகிச்சை பெற ரூ.1,700, ரூ.1,100 கட்டண அடிப்படையில் ‘ஏ’ கிளாஸ், ‘பி’ கிளாஸ் வார்டுகள் தனியாக இருக்கின்றன. இவர்களுக்கு அனுமதிக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும். மேலும், இவர்கள் உணவுச் செலவாக ஒரு நாளைக்கு ரூ.100 செலுத்த வேண்டும். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆண்டுக்கு 1.10 லட்சம் பேர் இதய சிகிச்சை பெறுகின்றனர். 4,600 பேர் இதய அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். தனியார் வார்டில் இதய அறுவை சிகிச்சைக்கு ரூ. 1.47 லட்சம் வாங்குகிறார்கள். ஏழை நோயாளிகளுக்கு இந்த அறுவைச் சிகிச்சை முழுவதும் இலவசம்தான். இப்படி, வசதி படைத்தவர்களும், ஏழை களும் பயன்பெறும் வகையில், எய்ம்ஸ் மருத்துவமனையின் செயல்பாடு இருக்கும் என்றார்.

பேராசிரியர்கள் கருத்து

சில மருத்துவப் பேராசிரியர்கள் கூறுகையில், எய்ம்ஸ் பிராக்டிஸ் குவாலிட்டியாக இருக்கும். ஆனா, கொள்ளளவு வாரியாக (quantity wise) பார்க்கும்போது நன்றாக இருக்காது. எய்ம்ஸ்-ல் இருக்கிற படுக்கை அடிப்படையிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். மற்றவர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவர்.

அமெரிக்கா, சுவீடன், டென்மார்க், நியூசிலாந்து போன்ற மக்கள் தொகை குறைவாக உள்ள வளர்ச்சி அடைந்த நாடுகளுக்குத்தான் ‘எய்ம்ஸ்’ சரிப்பட்டு வரும். இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட வளரும் நாடுகளில் உலக சுகாதாரத் துறையின் திட்டங்களும், கியூபா, ரஷ்யா நாடுகளில் பின்பற்றப்படும் மருத்துவ முறைகளும்தான் சரியாகும்.

ஒரு ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு செலவிடும் தொகையில் தமிழகத்தில் புதிதாக 5 மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை கட்டி விடலாம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x