Published : 07 Oct 2013 05:25 PM
Last Updated : 07 Oct 2013 05:25 PM
போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரைச் சந்திக்கும் முயற்சியில் இறங்கினோம். அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்ததாக கைது செய்யப்பட்டு சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்த அவரது சகோதரர் தர்வேஸ் மைதீன் செல்போனில் தொடர்புகொண்டோம். நெல்பேட்டை பள்ளிவாசல் அருகில் வந்து வீட்டுக்கு அழைத்து சென்றார். வீட்டில் அவரது வயதான தாயாரும், மனைவியும் ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ சொல்லி குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்.
பின்னர் பேசிய தர்வேஸ் மைதின், “போலீஸாரால் 15 வருடமாக சித்ரவதைக்கு ஆளாகியிருக்கிறோம். ஒரு மனிதன் துன்பப்படும்போது ஆறுதல் சொல்வதுதான் மிகப்பெரிய தர்மம் என்று முகம்மது நபி அவர்கள் குரானில் சொல்லியிருக்காங்க. நான் கஷ்டப்பட்ட போது, எந்த ஜமாத்தாரும் எங்களுக்கு ஆறுதல் சொல்ல வரவில்லை. உதவி கேட்டு இஸ்லாமிய கட்சி அலுவலகத்துக்கு நானும் என் தாயும் நடையாய் நடந்த போது, இங்கே வராதீர்கள் என்று விரட்டியடித்தார்கள்.
எங்களை இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்பவர்களுக்கு, எங்களை இஸ்லாமியர்களே ஒதுக்கித் தான் வைத்திருக்கிறார்கள் என்ற உண்மை தெரியுமா? இன்று எங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தி வீதியில் வீராவேசமாகப் பேசுபவர்கள், என் குடும்பத்தினர் சித்ரவதை செய்யப்பட்ட போது எங்கே போனார்கள்?
போலீஸ் பக்ருதீன் கைது செய்யப்பட்டு இருப்பது ஒரு வகையில் எங்களுக்குச் சந்தோஷம் தான். 3 நாட்களுக்கு முன்பு வரை போலீஸாரால் நாங்கள் கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறோம். இனிமேலும், எங்கள் குடும்பத்தினரை அவர்கள் துன்பப்படுத்த மாட்டார்கள்.
போலீஸ் பக்ருதீன் விவகாரத்தில் போலீஸார் சொல்வதில் கொஞ்சம் உண்மையும், நிறைய பொய்யும் இருக்கிறது. எங்கள் வாப்பா சிக்கந்தர் பாட்சா, உதவிக் காவல் ஆய்வாளராக இருந்து பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு 1989ல் இறந்துபோனார். நாங்கள் 3 மகன்கள். மூத்தவன் முகமது மைதீன், அடுத்து நான் (தர்வேஸ் மைதீன்), 3வது மகன் தான் போலீஸ் பக்ருதீன் என்று போலீஸாரால் அழைக்கப்படும் பக்ருதீன் அலி அகமது. எங்களைக் காப்பாற்றுவதற்காக அம்மா செய்யது மீரா, வெளிநாட்டுக்கு ஹவுஸ் கீப்பிங் வேலைக்குப் போய்விட்டார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தோம்.
நானும் 1993ல் சவுதி அரேபியாவுக்கு வேலைக்குப் போய்விட்டேன். இதனால் சேர்க்கை சரியில்லாமல் வம்பு, தும்பில் சிக்கி அவனை அடிக்கடி போலீஸார் பிடித்தனர். 18 வயதுக்குள் 5 வழக்குகள் பதிவாகிவிட்டது.
1995ம் ஆண்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் வெடிகுண்டு வைத்த வழக்கில் அவனை சம்பந்தமே இல்லாமல் கைது செய்தனர். அன்று முதல் அவனைத் தீவிரவாதி என போலீஸார் கூற தொடங்கினர். இதில் உண்மைக் குற்றவாளி வெங்கடேசன் என்ற முஸ்தபாதான் என்று தெரியவந்தது. இந்த வழக்கில் பக்ருதீன் உள்ளிட்டவர்களை பொய்யாக கைது செய்ததற்காக வெடிமருந்து வாங்கிய உதவி ஆய்வாளரை சி.பி.ஐ. கைது செய்தது. அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
கடந்த 1998ல், மதுரை மதிச்சியத்தில் பரமசிவம் என்பவர் கொலை வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றான். அங்குதான் தப்பான வழிக்கு போக காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். 2001ல் ஜாமீனில் வந்தவன், திருமங்கலம் கோர்ட்டில் போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையிட்டு, இமாம் அலியை மீட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்டு, எங்கள் நிம்மதிக்கு உலை வைத்தான். அந்த வழக்கில் 7 ஆண்டு சிறையில் இருந்தான்.
அவனுக்கு ‘நிக்காஹ்’ செய்து வைத்தால் சரியாகிவிடுவான் என்பதால் அதற்கான முயற்சியில் இறங்கினோம். அப்போது ஏ.சி. (உதவி ஆய்வாளர்) வெள்ளத்துரை பொது இடத்தில் என் தம்பியை தாக்கினார். இதில் தள்ளிவிட்டதில் அவர் கீழே விழுந்தது, அவருக்கு அவமானமாகிவிட்டது. உடனே, 3 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துவிட்டார்.
என் தம்பியின் திருமண முயற்சி தடைபட்டுப் போய்விட்டது. போலீஸ் மீது அவனுக்குப் கோபம் அதிகமாகிவிட்டது. நான் நல்லவனாகவே இருந்தாலும் கூட அவர்கள் என்னை நிம்மதியாக இருக்கவிட மாட்டார்கள் என்று கூறி ஊரைவிட்டே போய்விட்டான்.
28.10.11ல் சேலம் விரைவு நீதிமன்றத்தில் வாய்தாவுக்காக போனவன்தான், அதன் பிறகு அவனுடன் எந்தத் தொடர்பும் இல்லை. மறுநாள் அத்வானியை கொல்வதற்காக பாலம் அடியில் வெடிகுண்டு சிக்கியதாக செய்திகள் வந்தன. அன்று முதல் விசாரணை என்ற பெயரில் என்னையும், என் குடும்பத்தினரையும் போலீசார் துன்புறுத்தினர். அடித்தார்கள், தனி அறையில் அடைத்து வைத்தார்கள், அர்த்த ராத்திரியில் கதவைத் தட்டினார்கள், ரெய்டு என்று வீட்டைச் சூறையாடினார்கள், பெண்களைத் தரக்குறைவாகப் பேசினார்கள். அத்தனையையும் பொறுத்துக் கொண்டோம். ஊரைவிட்டு ஓடிப்போகவில்லை. போலீஸார் அழைக்கும்போதெல்லாம் போனேன்.
அத்வானிக்கு குண்டு வைத்த வழக்கில் என்னை கைது செய்தனர். இந்த வழக்கை ஜாமீன் கிடைக்க தன் தாலியை விற்று என் மனைவி வழக்கு நடத்தினாள். ஒருநாள் நீதிபதியிடம் அவள் கண்ணீர் விட்டுக் கதறிய பிறகே எனக்கு ஜாமீன் கிடைத்தது.
பக்ருதீனை கைது செய்துவிட்ட பிறகாவது, அப்பாவியான என்னையும், செய்யது சகாபுதீனையும் இந்த வழக்கில் இருந்து போலீஸார் விடுதலை செய்ய வேண்டும். என் 4 வயது பையனுக்கு முழு விவரம் தெரிவதற்குள், எனக்குப் போலீஸார் வைத்த தீவிரவாதி என்ற பெயரைத் துடைக்க வேண்டும்” என்றார்.
முதியோர் பென்ஷன் வேண்டும்
தாய் செய்யது மீரா கூறுகையில், “போலீஸார் படியில் இருந்து தள்ளிவிட்டதில் என் இடது தோள் பட்டை இறங்கிவிட்டது. ஏற்கனவே நான் சர்க்கரை, மூட்டு நோயாளி. என் பிள்ளை தப்பானவன் என்பதும், அவனால் எனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதும் உண்மையானால், எனக்கு முதியோர் பென்ஷன் வழங்குங்கள்” என்றார் கண்ணீருடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT