Published : 12 Feb 2014 12:00 AM
Last Updated : 12 Feb 2014 12:00 AM

திருச்சியில் வரும் 15, 16-ல் திமுக 10வது மாநில மாநாடு- கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்

வரும் 15 மற்றும் 16-ம் தேதிகளில் திமுகவின் பத்தாவது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் கருணாநிதியுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திமுகவின் பத்தாவது மாநில மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான திமுகவினரை மாநிலம் முழுவதுமிருந்து பங்கேற்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இம்மாநாடு இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

முதல்நாளான 15-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாநாட்டு முகப்பில், திமுக தலைவர் மு.கருணாநிதி கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். பின்னர் பெரியார், அண்ணா, பாரதிதாசன் மற்றும் மொழிப்போர் தியாகிகளின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பிற்பகல் மூன்று மணிக்கு இசை நிகழ்ச்சியும், நான்கு மணி முதல் பல்வேறு தலைப்புகளில் உரையும் நடக்கும். இரவு எட்டு மணிக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மாநாட்டு சிறப்புரையாற்றியதும், முதல் நாள் நிகழ்ச்சி முடிகிறது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு, நாகூர் இ.எம்.ஹனீபா மகன் நவ்ஷாத் அலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10 மணி முதல் பல்வேறு தலைப்புகளில் உரை நடக்கிறது. இதில் எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, செல்வகணபதி, வசந்தி ஸ்டான்லி, குஷ்பு, பழனி மாணிக்கம், ஜெகத்ரட்சகன், திமுக நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பலர் உரையாற்றுகின்றனர்.

காலை 11 மணிக்கு தீர்மானங்கள் நிறைவேற்றப் படுகின்றன. இதைத் தொடர்ந்து கட்சியின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு நா.வீராசாமி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்புரையாற்று கின்றனர்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், எம்.ஜி.ஆர்.கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டின் நிறைவாக திமுக தலைவர் மு.கருணாநிதி மாநாட்டுத் தலைவர் உரையாற்றுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x