Published : 29 Oct 2013 03:10 PM
Last Updated : 29 Oct 2013 03:10 PM

தாதுமணல் கொள்ளையை தடுக்க விரைவில் அரசு கொள்கை முடிவு - முதல்வர் உறுதி

தாதுமணல் கொள்ளையை தடுக்க விரைவில் அரசு கொள்கை முடிவை எடுக்கும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற, கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் தே.மு.தி.க. உறுப்பினர் அழகாபுரம் ஆர். மோகன் ராஜ் , தாது மணல் குறித்து எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார்.

அப்போது, தாது மணல் எடுக்கப்படுவது குறித்து சில புகார்கள் எழுந்ததால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் தாது மணல் எடுக்கப்படுவதே நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அந்த விசாரணைக் குழு தாது மணல் எடுக்கப்படும் இடங்களில் எல்லாம் ஆய்வுமேற்கொண்டு அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளித்த பின்னர் இந்த அரசு மேல் நடவடிக்கை எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது இயற்கை வளங்களான கனிமவளம், நீர் வளம், நில வளம், எரிபொருள் வளம், வன வளம் ஆகியவற்றை முறைப்படிபயன்படுத்திக் கொள்வதைப் பொருத்து அமையும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்கள் அரசின் முன் அனுமதியின்றியோ அல்லது அரசு அனுமதித்தஅளவுக்கு மேல் வரம்பு மீறியோ சுரண்டப்படுவது முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது.

எனவே முறைகேடுகள் குறித்து அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து, வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் அடிப்படையில் தாதுமணல் கொள்ளையை தடுப்பது குறித்து ஒரு கொள்கை முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x