Last Updated : 28 Mar, 2017 12:49 PM

 

Published : 28 Mar 2017 12:49 PM
Last Updated : 28 Mar 2017 12:49 PM

காமராஜர் பல்கலை. துணைவேந்தர் பதவி குறுக்கு வழியைக் கையாளும் முயற்சி? - பொறுப்புடன் செயல்படுமா தேர்வுக் குழு

ஒரு மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு மாநில ஆளுநரே வேந்தர் ஆக செயல்படுவார். கல்வி அமைச்சர் இணைவேந்தராகவும், பல்கலைக்கழகத் தலைவர் துணைவேந்தராகவும் செயல்படுவர்.

மத்திய, மாநில அரசுகள், பல்கலைக் கழக மானியக்குழு அளிக்கும் நிதியுதவியால் மாணவர்களுக்கு உயர் கல்வி, ஆராய்ச்சிப் படிப்பு, வேலைவாய்ப்பு கல்வியை அறிமுகப்படுத்துவது, பயன்தரும் பாடத் திட்டங்கள், ஆசிரியர், மாணவர்களுக்கு ஆக்கப்பூர்வ அறிவுரைகளை வழங்கி பல்கலைக்கழகத்தின் பெருமையை நிலை நாட்டுவதே துணைவேந்தரின் தலை யாய பொறுப்பாகும்.

தேர்வுமுறை

துணைவேந்தரின் பதவிக் காலம் மூன்றாண்டுகள். பதவிக் காலம் முடியும் முன்பே, அடுத்த துணைவேந்தரை தேர்வு செய்ய வரையறுக்கப்பட்ட விதி முறைகள் இல்லை என்றாலும், தகுதியான கல்வியாளர், மதிப்புமிக்க ஒருவரை தேர்ந்தெடுத்து துணைவேந்தர் தேர்வுக்குழு தலைவரை ஆளுநரே நியமிப்பார். தலைவருடன் பல்கலைக்கழக ஆட்சிக் குழு (சிண்டிக்கேட்), கல்விப் பேரவை (செனட்) பிரதிநிதிகள் புதிய துணைவேந்தருக்கான சிறந்த கல்வியாளர்கள் 3 பேரின் பெயர் பட்டியலை ஆளுநருக்கு பரிந்துரைக்க வேண்டும். இதில் தகுதி, நேர்மை, எதற்கும் விலைபோகாத பல்கலைக்கழக வளர்ச்சியில் முழு ஈடுபாடு கொண்டவர் என, ஆளுநர் கருதும் ஒருவர் துணைவேந்தராக நியமிக்கப்படுவார்.

மதுரை காமராஜர் பல்கலை க்கழகத்தில் 2014-ம் ஆண்டுக்குப் பின், புதிய துணைவேந்தர் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு பாதிப் புகள் ஏற்பட்டு வருகின்றன. பேரா சிரியர்கள், பல்கலை. ஊழியர்கள், மாணவர்களிடையே குழப்பம் நீடிக் கிறது.

இதுகுறித்து பல்கலைக்கழகத்தில் அலு வலகப் பணியில் சேர்ந்து, பேராசிரி யராக முன்னேறி ஓய்வுபெற்ற கே. கருணா கரபாண்டியன் கூறியது:

மதுரையைச் சேர்ந்த கல்வியாளர், புரவலர்களால் 1965-ம் ஆண்டில் காமராஜர் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இக்கல்வி நிலையம் உருவாக தமிழ்வேல் பிடி.ராஜன், ஏஜி. சுப்பாராம், மருத்துவர் வடம லையான், கருமுத்து தியாகராசர் போன்றோரின் பங்களிப்பு அதிகம். தெ.பொ. மீனாட்சிசுந்தரம், மு. வரதராசனார், பேராசிரியர்கள் சிட்டிபாபு, வி.சி. குழந்தைசாமி, வி.எஸ்பி. மாணிக்கம், கிருஷ்ணசாமி, இலக்குமணன் போன்றோர் இங்கு பணியாற்றிய சிறந்த துணைவேந்தர்கள். பல்கலை.யின் துணைவேந்தராக பொறுப்பேற்பவர்கள் புத்திக் கூர்மை, ஆங்கிலப்புலமை, நற்பண்பு, நிர்வாகத்திறன், சார்பற்ற நடுநிலை, மேலாண்மைத் திறன் கொண்டவராக இருக்கவேண்டும்.

கல்வித் தகுதி

உயர்கல்வி, குறைந்தது 10 ஆண்டுகள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல பொறுப்புகளில் பணியாற்றி இருத்தல், தரமான, சர்வதேச புத்தகக் குறியீட்டு எண் பெற்ற நூல்களை எழுதி இருத்தல், முனைவர் பட்டம் பெற அதிகமான மாணவர்களுக்கு வழிகாட்டி இருத்தல் போன்ற சில தகுதிகளை துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு பல்கலைக்கழக மானியக்குழு நிர் ணயித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக, காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு துணை வேந்தரைத் தேடும் பணியில், அதற்கான குழு ஈடுபட்டும் இன்னும் தேர்வாகவில்லை. தேவையற்ற தாமதத்தால் பல்கலைக்கழகத்தில் நிர்வாக பாதிப்புகளும் தொடர்கின்றன.

மதிப்புமிக்க இப்பதவிக்கு தகுதியற்ற, குறைந்த தகுதியை கொண்ட பலர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். எப்படியாவது துணைவேந்தர் பதவியைப் பிடிக்க, குறுக்கு வழியைக் கையாளும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

இது பல்கலைக்கழக வளர்ச்சிக்கு உகந்ததல்ல. ஒரு குடம் பாலில் துளி விஷம் போல தேர்வுக் குழு பல்கலை. எனும் பாலில் விஷம் கலக்காமல் பார்க்க வேண்டும். இருண்ட வீட்டுக்கு ஒரு விளக்கு போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு நிர்வாகத் திறன்மிக்க சிறந்த கல்வியாளரை துணைவேந்தராக தாமதமின்றி தேர்ந்தெடுக்கும் பொறுப்பு தேர்வுக்குழுவுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x