Published : 17 Jun 2017 12:31 PM
Last Updated : 17 Jun 2017 12:31 PM
கமுதி அருகே அதானி சோலார் மின்உற்பத்தி நிலையத்தில் தண்ணீர் பிரச்சினையால் சூரிய ஒளி தகடுகளை சுத்தம் செய்ய பரிசோதனை முறையில் ரோபோ இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
கமுதி அருகே உள்ள செங்கப் படை கிராமத்தில் அதானி குழுமம் ‘அதானி கிரீன் எனர்ஜி தமிழ்நாடு’ என்ற சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. இங்கு 72 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகள் மூன்று, 216 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகள் இரண்டு அமைக்கப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் 648 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி திட்டமாக இது அமை ந்துள்ளது.
இதற்காக 3,000 ஏக்கரில் ரூ.4,536 கோடி செலவில் 25 லட்சம் சூரிய ஒளி மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கி தமிழக மின்வாரிய தொகுப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் அதிகபட்சமாக 640 மெகாவாட் மின் உற்பத்தியாகி உள்ளது.
இங்குள்ள சூரிய ஒளி மின் தகடுகளை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் கழுவ வேண்டும். தற்போது கடும் வறட்சி நிலவியபோதிலும், குடிநீருக்கு பயன்படும் 2 லட்சம் தண்ணீரை பயன்படுத்தி தினமும் சூரிய மின் தகடுகளை சுத்தம் செய்கின்றனர். இதனால் குடிநீர் வீணடிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். அதை யடுத்து ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து குடிநீ ரை பயன்படுத்த தடை விதித்தது.
இதனால் இந்த மின்உற்பத்தி நிலையத்தில் பரிசோதனை முறையில் ஒரு மின் உற்பத்தி அலகில் சூரிய ஒளி மின் தகடுகளை சுத்தம் செய்ய ரோபோ இயந்திரங்கள் (ரோபோட்டிக் டிரை கிளீனர்) அமைக்கப்பட்டுள்ளன. இவை தண்ணீர் இன்றி ஒரு வரிசையில் 300 மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள 5,000 சூரிய மின் தகடுகளை 2 மணி நேரத்தில் சுத்தம் செய்துவிடும். தினமும் மாலை மின் உற்பத்தி முடிந்ததும் இந்த இயந்திரங்கள் தானாகவே சுத்தம் செய்யும்.
இது குறித்து கமுதி அதானி கிரீன் எனர்ஜி மின் உற்பத்தி தலைமை அதிகாரி சந்தோஷ்குமார் மல் கூறியதாவது:
இந்தியாவிலேயே சூரிய ஒளி அதிகம் வீசும் பகுதியாகவும், தூசி இல்லாத பகுதியாகவும் கமுதி அமைந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தூசி அதிகம் படிவதால் மாதத்துக்கு ஒருமுறை சூரிய ஒளி தகடுகளை கழுவ வேண்டும். ஆனால் கமுதி பகுதியில் 45 நாட்களுக்கு ஒருமுறை கழுவினால் போதுமானது. 45 நாட்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. எங்களது சுத்திகரிப்பு நிலையம் மற்றும் வெளியில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீர் வாங்குகிறோம்.
தற்போது தண்ணீர் பயன்பாட்டை தவிர்க்க டிரை கிளினீங் முறையில் சுத்தம் செய்யும், 24 ரோபோ இயந்திரங்கள் ஒரு அலகில் பரிசோதனை அடிப்படையில் அமைத்துள்ளோம். இது வெற்றி பெற்றால் படிப்படியாக அடுத்த அலகுகளிலும் ரோபோ இயந்திரங்கள் நிறுவப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT