Published : 11 Feb 2014 12:00 AM
Last Updated : 11 Feb 2014 12:00 AM

காஞ்சிபுரத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- தி.மு.க-வினர் ஆட்சியரிடம் மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலர் நேரு கூறியதாவது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு பொய்த்து விட்டது. இதனால் ஆறுகளும், ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. அதனால் இந்த மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த முதியோர் ஓய்வூதியத்தை கடந்த 4 மாதங்களாக மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது. அதை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது’’ என்றார்.

விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாஸ்கரன், காஞ்சிபுரம் ஒன்றியச் செயலர் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க-வினர் மனு

காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரனிடம் மாவட்ட தி.மு.க-வினர் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட திமுக விவசாயிகள் அணி மற்றும் விவ சாயத் தொழிலாளர் அணி கூட்டம் கடந்த வாரம் காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி ஆட்சியரிடம் மனு அளிப்பது என்றும், அறிவிக்காவிட்டால் பிப்ரவரி 24-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்சியின் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமையில், மாவட்ட விவசாயிகள் அணித் தலைவர் ஏழுமலை, விவசாயத் தொழிலாளர் அணித் தலைவர் தசரதன் உள்ளிட்ட கட்சியினர் திரண்டு, மாவட்ட ஆட்சியர் கா.பாஸ்கரனை திங்கள்கிழமை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர் அன்பரசன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: “தஞ்சைக்கு அடுத்ததாக நெல் விளையும் பூமி காஞ்சிபுரம். இந்தமுறை பருவமழை பொய்த்ததால் இப்பகுதியில் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, காஞ்சி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து, அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்கவேண்டும். கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 100 நாள்களாக இருந்த வேலை நாள்களை, மத்திய அரசு 150 நாள்களாக உயர்த்தியுள்ளது. ரூ.100 கூலியை ரூ.148 ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. இதை தமிழக அரசு செயல்படுத்த வில்லை. வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், தொண்டர் களைத் திரட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிப்ரவரி 24-ம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம். என்றார் அவர். காஞ்சிபுரம் நகரச் செயலர் சி.வி.எம்.சேகர் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x