Published : 12 Jul 2016 02:04 PM
Last Updated : 12 Jul 2016 02:04 PM

பச்சை நிறமாக மாறிய மதுரை மாநகராட்சி நீச்சல் குளம்: கற்கள் பெயர்ந்த தரைத்தளத்தால் குழந்தைகள் காயமடையும் அவலம்

கடந்த காலத்தில் நீச்சல் குளங்கள் வசதி படைத்த குழந்தைகளுக்கு மட்டுமே வாய்த்த வரமாக இருந்தன. இதையடுத்து நடுத்தர, ஏழைக் குழந்தைகளுக்கும் அந்த வாய்ப்பு கிட்ட உள்ளாட்சி அமைப்புகள், விளையாட்டுத் துறைகள் மூலம் மாவட்டம்தோறும் நீச்சல் குளங்களை அமைத்து பராமரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

பள்ளி விடுமுறை நாட்களில் சிறுவர், சிறுமிகள் நீச்சல் பழகவும், பொழுதுபோக்கவும் இந்த குளங்கள் உதவிகரமாக இருந்தன.

சமீப காலமாக, இந்த நீச்சல் குளங்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் தற்போது குழந்தைகள் பொழுதுபோக்க மால்களுக்கும், நீச்சல் பழக தனியார் நீச்சல் குளங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் காந்தி அருங்காட்சியகம் அருகே செயல்படும் நீச்சல் குளம், மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டு தனியாரால் நிர்வகிக்கப்படுகிறது. நீச்சல் குளத்தை நடத்தும் தனியார் மாதந்தோறும் 28 ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு கட்டணம் செலுத்துகின்றனர். இந்த நீச்சல் குளம், காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒரு மணி நேரத்துக்கு பெரியவர்களுக்கு 20 ரூபாயும், 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு 10 ரூபாய் கட்டணமும் பெறப்படுகிறது.

இந்நிலையில், இந்த மாநகராட்சி நீச்சல்குளம் சரியான பராமரிப்பு இல்லாமல் செயல்படுவதால் துர்நாற்றம் வீசும் தண்ணீரால் சிறுவர், சிறுமியருக்கு நோய் பரவும் அபாயமும், டைல்ஸ் தரைத்தளம் உடைந்து இருப்பதால் கால் விரல்களை பதம் பார்ப்பதும் தொடர்கிறது.

தனியார், அரசு நீச்சல் குளங்களில் முறையான பயிற்சியாளர், பராமரிப்பு, கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் பலர் பலியான சம்பவம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அதனால், மாநகராட்சி நீச்சல் குளத்தை முறையாக ஆய்வுசெய்து உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க தொடர் கண்காணிப்பில் நீச்சல்குளத்தை வைத்திருக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறியதாவது: சுழற்சி முறையில் நீச்சல் குளத்தில் மாசு அடைந்த தண்ணீர் வெளி யேற்றப்பட்டு, சுத்தமான தண்ணீரை நிரப்ப வேண்டும். வாரம் ஒருநாள் விடுமுறை விட்டு பராமரிக்க வேண்டும். ஆனால், இந்த முறை இங்கு பின்பற்றப்படுகிறதா எனத் தெரியவில்லை. பெரியவர்கள் நீச்சலடிக்கும் பகுதியில் குப்பைகள் தண்ணீரில் மிதக்கின்றன. தண்ணீர் மிகவும் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. சிறியவர்கள் நீச்சலடிக்கும் பகுதியில் தண்ணீர் பச்சை நிறமாக மாறி விட்டது. குளத்தில் டைல்ஸ் பொருத்தப்பட்ட தரைப்பகுதி ஆங்காங்கே உடைந்து கற்கள் பெயர்ந்து விட்டதால் இதை அறியாமல் குளிக்கும் சிறுவர்கள் பாதங்களை வெட்டி காயப்படுத்துகிறது. அதற்கான முதலுதவி கூட அளிப்பதில்லை.

அதனால், மாநகராட்சி குளத்துக்கு குழந்தைகளை அழைத்து வரவே பெற்றோர் அச்சப்படுகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சேதமடைந்த நீச்சல் குளத்தின் தரைப் பகுதியை பராமரிக்க 10 நாட்களாவது ஆகும். அந்த நாட்களின் வருவாய் பாதிக்கப்படும் என்பதால், டெண்டர் எடுத்தவர்கள் குளத்தை பராமரிக்காமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நீச்சல் குளத்தின் தரைப்பகுதி மட்டும் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவற்றை பராமரிக்கவும், தண்ணீர் அசுத்தமாவதை தடுக்கவும் உடனுக் குடன் அப்புறப்படுத்தி மாற்றவும் உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x