Published : 22 Feb 2014 12:00 AM
Last Updated : 22 Feb 2014 12:00 AM
மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை தோண்டும்போது அண்ணாசாலையில் மட்டுமின்றி மண்ணடி, சிந்தாதிரிப்பேட்டையிலும் ரசாயன நீர் வெளியேறியதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும்போது, டனல் போரிங் மிஷினைக் கொண்டு சுரங்கம் தோண்டப்படுகிறது. முன்னதாக, மணல் பகுதியை லேசாக்குவதற்காக ரசாயனக் கலவையை வேகமாக பீய்ச்சியடிப்பார்கள். அப்படி அடிக்கும்போது ஏதாவது அந்தப் பகுதியில் சிறிய துவாரம் இருந்தால்கூட அதன்வழியே ரசாயன நீர் வெளியேறிவிடும்.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அண்ணா சாலை - வாலாஜா சாலை சந்திப்பில் வியாழக்கிழமை சுரங்கப் பாதை தோண்டியபோது திடீரென சாலையில் விரிசல் ஏற்பட்டது. அதன்வழியே ரசாயன நீர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.
தகவல் அறிந்து விரைந்து வந்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், ரசாயன நீர் வெளியேறிய இடத்தை ஆய்வு செய்தனர். அரை மணி நேரத்துக்குப் பிறகு போக்குவரத்து சீரடைந்தது. அண்ணாசாலையில் நிகழ்ந்ததைப் போல, ஏற்கெனவே மண்ணடியிலும் சிந்தாதிரிப்பேட்டையிலும் நிகழ்ந்திருக்கிறது. மண்ணடியில் சுரங்கப் பாதை தோண்டும் முன்பு, அந்தப் பகுதி
யில் உள்ள வீடுகள், கடைகள், திருமண மண்டபம், வணிக வளாகங்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளை தாங்களே மூடித் தருவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, அனைத்து ஆழ்குழாய் கிணறுகள், திறந்தவெளிக் கிணறுகள் மூடப்பட்டன.
பின்னர், சுரங்கப் பாதை தோண்டும் பணி தொடங்கியது. மண்ணடி அருகே சுரங்கம் தோண்டும்போது, ஒருவரது வீட்டுடன் இணைந்திருந்த கடைக்குள் ரசாயன நீர் புகுந்தது. அவரது வீட்டுக்குள் இருந்த ஆழ்குழாய் கிணறு, தண்ணீர் இல்லாததால் நீண்டகாலமாக மூடிக்கிடந்தது. அதன் வழியாக ரசாயன நீர் வீடு மற்றும் கடைக்குள் புகுந்தது தெரியவந்தது. ரசாயன நீர் வெளியேறிய சம்பவம் சிந்தாரிப்பேட்டையிலும் நிகழ்ந்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT