Published : 23 Jan 2014 12:34 PM
Last Updated : 23 Jan 2014 12:34 PM
மற்ற அரசு பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணச் சலுகையை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முறையாக நிர்வாகம் செய்யப்படுவதற்காகவும், பல்கலைக்கழகத்தின் நிதி நிர்வாகத்தினை சீரமைப்பதற்காகவும், பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை அரசே தன்னகத்தே எடுத்துக் கொண்டது.
இதன் காரணமாக, நடப்புக் கல்வியாண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு முற்றிலும் வெளிப்படையான முறையில், கல்வித் தகுதி மற்றும் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளின்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள மற்ற பல்கலைக்கழகங்களைப் போல மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, குறிப்பாக நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் குடும்பங்களிலிருந்து 1,150 மாணவ மாணவிகள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் முதல் தலைமுறை பட்டதாரிகள் என்ற வகையில் சேர்ந்துள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில், இது வரை மற்ற அரசுப் பல்கலைக்கழகங்களில் பின்பற்றுவது போல் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவியருக்கான கல்வி கட்டணச் சலுகை அளிக்கப்படவில்லை.
எனவே, மற்ற பல்கலைக்கழகங்களைப் போல சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களிலிருந்து பயிலும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவ மாணவியருக்கு கல்வி கட்டணச் சலுகை வழங்கப்படும். இதற்கென 1 கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT