Published : 28 Sep 2016 09:17 AM
Last Updated : 28 Sep 2016 09:17 AM

உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்!

2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம். தூத்துக்குடி மாவட்டத்தில் அணைக்கட்டு ஒன்றின் அருகில் இருக்கும் கிராமப் பஞ்சாயத்து அது. உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே எஞ்சியிருந்தன. ஊர் மந்தையில் முக்கிய பிரமுகர்களும் பொது மக்களும் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் எதிர்பார்ப்பு. “பஞ்சாயத்துத் தலைவர் ஒரு லட்சம்... பஞ்சாயத்துத் தலைவர் ரெண்டு லட்சம்... பஞ்சாயத்துத் தலைவர் மூணு லட்சம்...” பரபரப்பாக நடந்துகொண்டிருந்தது பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான ஏலம்.

கடும்போட்டிகளுடன் நடந்த அந்த ஏலத்தில் 13 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி முடிக்கப்பட்டது பஞ்சாயத்துத் தலைவர் பதவி. அதாவது பணம் படைத்த தனிநபர் ஒருவர், பஞ்சாயத்துத் தலைவர் பதவியை விலைக்கு வாங்கிவிட்டார். அவர் நினைக்கும் பட்டியலினத்தவர் ஒருவரைப் பார்த்து விரல் சொடுக்கிக் கூப்பிட்டால் அவர்தான் பஞ்சாயத்துத் தலைவர். இனி, அவர் சொல்வதைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் கேட்க வேண்டும். இனி, அவர் சொல்வதைத்தான் பஞ்சாயத்துத் தலைவர் வழியாக அந்த ஊர் மக்கள் கேட்க வேண்டும்.

இந்தியாவில் அடிமை வியாபாரம் ஒழிக்கப் பட்டுவிட்டது என்று யார் சொன்னது? அன்றைய தினம் ஏலம் முடிந்ததும் ஊர் சந்தையில் கட்டுக் கட்டாகக் கொட்டப்பட்ட நோட்டுக்களில் தனது கனவு கலைக்கப்பட்டது தெரியாமலேயே சிரித்துக்கொண்டிருந்தார் காந்தி. கொன்றுப் புதைக்கப்பட்டது இந்திய ஜனநாயகம்!

பொது பஞ்சாயத்தாக இருந்த இந்தக் கிராமப் பஞ்சாயத்து, 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. அதுவரை ஜனநாயக முறையில் நடத்தப்பட்ட தேர்தல் அத்தோடு நின்றுபோனது. ஊரின் பெரும்பான்மை சமூகத்தினர் ஒன்றுகூடி தமக்கு வேண்டப்பட்ட பட்டியலினத்தவர் ஒருவரை தேர்வு செய்து பொம்மைத் தலைவராக அமர வைத்தனர்.

போட்டியின்றி ஒருமனதாக அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அந்த கொஞ்சநஞ்ச ஜனநாயகமும் செத்துப்போனது. பெரும்பான்மை சமூகத்தினருக்குள்ளேயே அதி காரத்தைக் கைப்பற்றுவதில் கடும்போட்டி ஏற் பட்டது. அப்போது நடந்ததுதான் மேற்கண்ட ஏலம்.

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டது. இந்த முறையும் பட்டியலினத்தவருக்கு பஞ்சாயத்து ஒதுக்கப்பட்டால் ஏலம்தான் நடக்கும் என்கிறார்கள் மக்கள். இந்தக் கிராமப் பஞ்சாயத்தின் தற்போதைய வருவாய் கையிருப்பு நிதி மட்டுமே சுமார் இரண்டரை கோடி ரூபாய்.

ஆனால், அடித்தட்டு மக்கள் ஒதுங்க ஒரு பொதுக்கழிப்பிடம்கூட இல்லை என்பதில் இருந்து ‘இது மக்களுக்கான பஞ்சாயத்து அல்ல’ என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இதோ 2016-ம் உள்ளாட்சித் தேர்தலிலும் இது தொடர்கிறது. அதிலும் எங்கே? குடவோலை முறையை உலகுக்கு அறிமுகம் செய்த உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்தியூர் மேல்தாளி ஊராட்சித் தலைவர் பதவி ரூ. 4.2 லட்சத்துக்கு ஏலம் போனதாக செய்திகள் வருகின்றன.

தமிழகத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் சிதைந்துப்போனதன் அறிகுறிகள்தான் இவை. பல பஞ்சாயத்துக்களில் நிலைமை இப்படிதான். சாதியம் மட்டுமே இங்கே பிரச்சினையில்லை. அரசு அதிகாரிகளின் ஆதிக்கம், அதிகாரத்தை பகிர விரும்பாத மாநில அரசுகளின் சுயநலம், மலிவான கட்சி மற்றும் தேர்தல் அரசியல், பணம், கனிம வளக் கொள்ளை, நில வணிகக் கும்பலின் அழுத்தங்கள் என உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பலமுனை தாக்குதல்கள் அதிகம்.

இன்றைய நடைமுறையில் தமிழகத்தில் நான்கு வகையான பஞ்சாயத்துத் தலைவர்கள் இருக்கி றார்கள். சாதிய ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர் அல்லது ஆணாதிக்கத்தால் முடங்கிப்போன பெண் தலைவர் முதல் வகை. அரசு இயந்திரத்தின் அதிகார அழுத்தங்களையும் மலிந்துப்போன ஊழலையும் எதிர்கொள்ள முடியாமல் சலிப்படைந்து தங்களின் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட தலைவர்கள் இரண்டாம் வகை. பஞ்சாயத்து பொறுப்புகளை மலிவான அரசியலாக பாவித்து, ஊழலை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்படும் தலைவர்கள் மூன்றாம் வகை. தங்களது பொறுப்பை உணர்ந்து, அனைத்து வகையான அழுத்தங்களையும் எதிர்கொண்டு தங்களது கிராமங்களை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் முன்மாதிரி தலைவர்கள் நான்காம் வகை. முதல் மூன்று வகை தலைவர்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் முடங்கிக் கிடக்கிறது பஞ்சாயத்துக்களின் செயல்பாடுகள்.

குறிப்பாக, சாதியம் ஆதிக்கம் செலுத்தும் பஞ்சாயத்துக்களில் எல்லாம் ஆட்டுவிக்கப்படும் அடிமைகளாக இருக்கிறார்கள் பஞ்சாயத்துத் தலைவர்கள். உட்கார சொன்னால் உட்கார வேண்டும்; எழச் சொன்னால் எழ வேண்டும். தோளில் துண்டு போடக் கூடாது. வேட்டியை மடித்துக்கட்டக் கூடாது. சொன்ன இடத்தில் கையெழுத்து போட வேண்டும். நிர்வாகக் கூட்டங்களில் கையைக் கட்டி வாயைப் பொத்தி வெளியே ஓரமாக நிற்க வேண்டும்.

முக்கியப் பிரமுகர்களே முடிவு செய்துகொள்வார்கள். பெண் பிரதிநிதிகளின் நிலைமை இன்னும் மோசம். இவை எல்லாம் மறைமுகமாக நடப்பதில்லை. சாதாரணமாகக் காணக்கூடிய பகிரங்கக் காட்சிகள் இவை. பல பஞ்சாயத்துகளில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள்கூட பஞ்சாயத்துத் தலைவரை தொடர்புகொள் வதில்லை. அவரை விலைக்கு வாங்கிய நபரைத்தான் தொடர்பு கொள்கிறார்கள். காந்தி கண்ட கனவுப் பஞ்சாயத்துக்கள் அல்ல இவை. அரசு இயந்திரத்தின் துணையோடு நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள்.

இங்கே அடிமைகளானது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மட்டுமல்ல; குடிமக்களாகிய நாம் ஒவ்வொருவரும்தான். இங்கே யாரேனும் உள்ளாட்சி என்கிற அமைப்பில் உங்களுக்கான அதிகாரத்தை அறிவீர்களா?

- பயணம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x