Published : 16 May 2017 10:10 AM
Last Updated : 16 May 2017 10:10 AM

மதநல்லிணக்கத்தின் சுவை: ஸ்ரீரங்கத்தில் செயல்படும் கோபால ஐயங்கார் மெஸ்- ஆதரவு அளித்தவரை மறக்காத மனிதநேயம்

ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்துக்கு அருகே செயல்படும் கோபால ஐயங்கார் மெஸ்ஸை, ஹோட்டல் தொழிலில் 70 வருட அனுபவம் கொண்ட முதியவர் கோபாலன் நடத்தி வருகிறார். ரங்கநாதரைத் தரிசிக்க வரும் பெரும்பாலான பக்தர்கள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் இவருடைய மெஸ்ஸை மிஸ் பண்ணுவது இல்லை.

25 வயதில் ஹோட்டல் தொழில்

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் கோபாலன்(80). இவர் சிறுவயதாக இருக்கும்போது குடும்பம் வறுமையில் வாடியதால், தன் 11 வயதில் திருச்சியில் ஒரு ஹோட்டலில் இலை எடுக்கும் வேலை செய்து வந்தார். தொடர்ந்து, தஞ்சாவூரில் சமையல் உதவியாளர், பின்னர் மதுரை சென்ட்ரல் சினிமா அருகில் இருந்த உடுப்பி ஹோட்டலில் மாஸ்டர், அடுத்து மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர வாசலில் உள்ள ஹோட்டல் மனோரமாவில் சூபர்வைசர் என படிப்படியாக வாழ்க்கையில் வளர்ந்தவர்.

மதுரை காஜிமார் தெருவில் வசித்தபோது, இஸ்லாமியர்களே இவருக்கு உறவுகள். 25 வயதில் தனியாக ஹோட்டல் தொழில் தொடங்கும்போது, இவருக்கு பக்க பலமாக இருந்தவர் பாஹவுதீன் என்பவர். திருமணத்துக்குப் பின் இவர் பிள்ளைகள் அவர் வீட்டிலும், அவர்களின் குழந்தைகள் இவர் வீட்டிலும் வளர்ந்துள்ளனர்.

இதில், இஸ்லாமிய குடும்பத் தினருடன் நெருக்கமான உறவினர் போல் தொடர்ந்து பேசியும் பழகியும் வந்ததால் கோபாலனின் மூத்த மகன் ரமேஷூக்கு இஸ் லாமியர்கள் பேசும் உருது மொழியை அவரும் வெகுஇயல் பாக கற்றுக்கொண்டார்.

உதவிய இஸ்லாமிய தம்பதியர்

30 ஆண்டுகால மதுரை வாசத்துக்கு விடை கொடுத்து விட்டு, ரங்கத்துக்கு வந்த கோபாலன், ராகவேந்திரா மடத்துக்கு எதிரே ஒரு குடிசை வீட்டில் மெஸ் நடத்தி வந்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, அருகிலேயே 2012-ல் தற்போது இயங்கும் இடத்துக்கு மெஸ்ஸை விரிவு படுத்தியுள்ளார்.

உணவின் சுவை கடந்து, மதநல்லிணக்கத்துக்கு முன்னு தாரணமாக இருக்கும் இவர், தனக்கு உறுதுணையாக இருந்து உதவிய இஸ்லாமிய தம்பதியர் பாஹவுதீன் - சுபியாபேகம் ஆகியோரின் படத்தைத் தன்னு டைய மெஸ்ஸில் வைத்து தினமும் வழிபாடு செய்கிறார்.

80 வயதிலும் ஓய்வின்றி...

இதுகுறித்து ‘தி இந்து’விடம் கோபாலன் கூறியதாவது:

அறிமுகம் இல்லாத மதுரையில், எனக்கு ஆதரவு அளித்த பாஹவுதீனை வாழ்நாளில் எந்த ஒருகணமும் மறக்கவே மாட்டேன். நல்ல மனசு இருந்தால் போதும், மதம் எல்லாம் அப்புறம்தான்.

நான் எப்போதும் இரு குடும்பத்தையும் வேறுபடுத்திப் பார்த்ததில்லை. அவர்கள் மறை வுக்குப் பின்ன ரும் எங்களுடைய இரண்டு குடும்பங்களின் பந்தம் நீடிக்கிறது. 11 வயதில் உழைக்கத் தொடங்கிய நான் 55 வயது வரை வறுமை, கஷ்டத்தை மட்டுமே சந்தித்துள்ளேன்.

80 வயதாகியும் இப்போதும் ஓய்வின்றி உற்சாகமாக உழைக்கிறேன். மெஸ், வீடு எல்லாம் ஒரே இடம்தான். மகன், மகள், மருமகள், மருமகன், பேரன், பேத்தி எல்லோரும் ஒரே குடும்பமாக வசிக்கிறோம். வாடிக்கையாளர்களுக்கு சுவை யுடன், மனிதநேயத்தையும் வழங்கி வருகிறோம் என்றார்.

ஐந்து ரூபாய் நோட்டு…

பாஹவுதீன் சுபியாபேகம் தம்பதி யினர், கோபாலனின் மூத்த மகன் ரமேஷை தங்கள் பிள்ளையாகப் பாவித்து வளர்த்துள்ளனர். ஒரு ரம்ஜான் பண்டிகையின்போது, பாஹவுதீன் அன்பளிப்பாகக் கொடுத்த இரு ஐந்து ரூபாய் நோட்டுகளை ரமேஷ் பத்திரப் படுத்தி வைத்திருந்தார்.

பாஹவுதீன் மறைவுக்குப் பின் அவரது புகைப்படத்துடன், இரு 5 ரூபாய் நோட்டுகளையும் பிரேம் செய்து மெஸ்ஸில் கோபாலன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x