Published : 09 Sep 2016 02:32 PM
Last Updated : 09 Sep 2016 02:32 PM
தமிழகத்தில் மிக அதிக அளவில் சின்ன வெங்காயத்தை உற்பத்தி செய்யும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சரியான விலை கிடைக்காததால் வேதனையுடன் கண்ணீர் வடிக்கின்றனர். கரும்பு, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்திருப்பது போல, சின்ன வெங்காயத்துக்கும் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் சின்ன வெங்காயம் 12 மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இதில், பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. இம்மாவட்டத்தில் மட்டும் 22 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. திருச்சி மாவட்டம் 2-வது இடத்திலும், திருப்பூர் மாவட்டம் 3-வது இடத்திலும் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தின் மண் வளம், தட்பவெப்பநிலை ஆகியவை இந்த பயிருக்கு மிகவும் சாதகமாக உள்ளதால் மிக அதிக எண்ணிக்கையில் இம்மாவட்ட விவசாயிகள் வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர்.
சின்ன வெங்காயம் 70 நாள் பயிர் என்பதால் நவீன முறைகளை பின்பற்றி ஆண்டுக்கு 4 முறைகூட சிலர் இம்மாவட்டத்தில் வெங்காயம் பயிரிடுகின்றனர். ஆனால், உரிய விலை கிடைக்காததாலும், சேமித்து வைக்க இடமில்லாததால் எடை குறைந்துவிடும் வெங்காயத்தை குறைந்த விலைக்கு விற்பதாலும் லாபம் என்பதையே பார்க்க முடியாத நிலை உள்ளது என்று தெரிவிக்கும் சின்ன வெங்காய விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.
ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுமா?
இதுகுறித்து, முன்னோடி விவசாயி மணி கூறியதாவது: ஆடிப் பட்டத்துக்கு முந்தைய பருவ அறுவடை இப்போது முடிந்துள்ளது. வெங்காயத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகள் சோகத்தில் கண்ணீர் வடிக்கின்றனர். சராசரியாக ஒரு கிலோ ரூ.9-க்கு விலை போகிறது.
ஒரு ஏக்கர் சாகுபடிக்கு ரூ.45 ஆயிரம் செலவாகும். 5 டன் மகசூல் கிடைக்கும். கிலோ ஒன்றுக்கு சுமார் ரூ.15 கிடைத்தால் ஓரளவு விலை கட்டுப்படியாகும்.
இப்போது வியாபாரிகள் பேசி வைத்துக்கொண்டு விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாத விலைக்கு கேட்கின்றனர். போதிய விலை கிடைக்காமல்போனதால் பயிரிட்ட வெங்காயத்தை பார்க்கும்போதே எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது.
ஆகவே, நெல் மற்றும் கரும்பு ஆகிய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிப்பது போல அதிக அளவில் சின்ன வெங்காயம் பயிரிடும் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு, சின்ன வெங்காயத்துக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சின்ன வெங்காயம் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு பயிற்றுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாலர் ஆர்.ராஜா சிதம்பரம் கூறியதாவது: வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் பாரம்பரிய முறையிலான பட்டறைகளை அமைத்து அதில் வெங்காயத்தை சேமித்து வைக்கின்றனர். விலை மிகவும் குறைவாக இருப்பதால் இப்போது சேமித்துவைத்து சில மாதங்கள் கழித்து விலை அதிகமாக கிடைக்கும்போது விற்பதற்காக இப்படி செய்கின்றனர்.
இந்த பட்டறைகளில் 3 அல்லது 4 மாதங்கள் வரை மட்டுமே வெங்காயத்தை சேமித்து வைக்க முடியும். அதற்குமேல் சேமித்துவைத்தால் வெங்காயம் கெட்டுப்போய்விடும்.
இப்படி சேமித்துவைப்பதாலும் பெரிதாக லாபம் கிடைப்பதில்லை. பட்டறை அமைக்கும் செலவு, அதில் பத்திரப்படுத்துவதற்காக வெங்காயத்தை காயவைத்து சுத்தம் செய்வதற்கான செலவு, பட்டறையில் சேமித்துவைப்பதால் உலர்ந்துபோய் எடை குறைவதால் ஏற்படும் இழப்பு ஆகியவற்றையெல்லாம் கணக்கிட்டால், விலை உயர்ந்தாலும் பெரிதாக விவசாயிக்கு பயனில்லை. எனவே, வெங்காய விவசாயிகளின் பிரச்சினைக்கு ஒரே தீர்வு கட்டுப்படியாகக் கூடிய ஆதார விலையை அரசே நிர்ணயம் செய்வது மட்டும்தான் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT