Last Updated : 16 Jul, 2016 01:00 PM

 

Published : 16 Jul 2016 01:00 PM
Last Updated : 16 Jul 2016 01:00 PM

இயந்திரங்கள் போல் நீதிபதிகள் செயல்படக் கூடாது: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

மதுரையைச் சேர்ந்த ஹரிகரன், இவரது மனைவி உமாமகேஸ்வரன் ஆகியோர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் குற்ற வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து 20.1.2015-ல் மாவட்ட அமர்வு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கணவன், மனைவி இருவரும் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்து நீதிபதி பி.தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்களுக்கு எந்தவித சட்ட உதவியும் வழங்காமல் கீழமை நீதிமன்றம் நேரடியாக ஜாமீனை ரத்து செய்தது தவறு. மனுதாரர்கள் தங்களுக்காக வாதாட வழக்கறிஞர்கள் நியமனம் செய்யாத நிலையில், சட்ட உதவி மையம் மூலம் வழக்கறிஞர்களை நியமனம் செய்து அவர்களை வாதாடச் செய்து, அதன் பிறகு தான் ஜாமீனை ரத்து செய்திருக்க வேண்டும். அப்படி வழக்கறிஞர் நியமனம் செய்திருந்தால், மனுதாரர்கள் எந்த காரணத்துக்காக ஜாமீன் நிபந்தனையை பின்பற்றவில்லை என்பது தெரிந்திருக்கும்.

ஒருவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்வது சாதாரணமானது அல்ல. ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களுக்காக மனுதாரர்கள் ஜாமீன் நிபந்தனையை கடைபிடிக்காமல் இருந்திருக்கலாம். குடும்ப பிரச்சினை, உடல் நலக்குறைவு, வேறு வழக்கில் கைதாகி இருத்தல் மற்றும் ஏழ்மை போன்ற காரணங்களால் அவர்களால் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட முடியாமல் போயிருக்கலாம். அல்லது எதிர்தரப்பினர் ரவுடிகளை வைத்து மிரட்டி அவர்களை கையெழுத்திட விடாமல் தடுத்திருக்கலாம். காரணங்களை தெரியாமல் ஜாமீனை ரத்து செய்வது தவறு. காரணங்களை தெரிவிக்க மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பித்துள்ளார். கம்ப்யூட்டர்களால் நீதிபதி பதவி வகிக்க முடியாது. நீதிபதிகள் என்பவர்கள் மனிதன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இந்த வழக்கில் மாவட்ட நீதிபதி அசைவற்ற இயந்திரம் போல் செயல்பட்டுள்ளார். கம்ப்யூட்டர்களுக்கு உணர்வு இருக்காது. நீதிபதிகள் அவ்வாறு இல்லை. இதனால் மனுதாரர்களின் ஜாமீனை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x