Published : 11 Feb 2017 09:01 AM
Last Updated : 11 Feb 2017 09:01 AM
அதிமுக எம்எல்ஏ-க்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ‘உங்களது ஆதரவு யாருக்கு?’ என்பதை தெரிந்துகொள்ள ‘தி இந்து’ சார்பில் அவர்களின் அலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டோம். பெரும்பாலான எண்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன. பல எண்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தன. பலர் அலைபேசியை எடுக்கவில்லை. பட்டென துண்டித்தனர் பலர். விஷயத்தை சொன்னதும் ’ஹலோ... ஹலோ...’ என்றபடி அணைக்கப்பட்ட அலைபேசிகள் பல. சிலர் மட்டும் பேசினார்கள். அவர்களின் ரியாக்ஷன் இதோ..
விருகம்பாக்கம், வி.என்.ரவி:
அலைபேசியை எடுத்தவரிடம் விஷயத்தைச் சொன்னோம். “அண்ணே நான் எம்எல்ஏ இல்லைண்ணே; அவரது பி.ஏ.; 10 நிமிஷத்துல கூப்பிட சொல்றேன்” என்றார். 10 நிமிடங்களுக்கு பிறகு பலமுறை அழைத்தும் அலைபேசி எடுக்கவில்லை.
மயிலாப்பூர், ஆர்.நட்ராஜ்:
அலைபேசி அடிக்கும்போதே தொடர்பு துண்டிக்கப்பட்டது. ‘குறுந்தகவல் அனுப்பவும்’ என்று குறுந்தகவல் அனுப்பினார். அனுப்பினோம். கடைசி வரை பதில் வரவில்லை.
பெரம்பலூர், வெற்றிவேல்:
“எனது ஆதரவு கட்சிக்கே. கட்சி யார் வசம் உள்ளதோ அவர்கள் பக்கம்தான் நான்.” என்றார். பெயரைச் சொல்லுங்கள் என்ற பின்பு ‘பொதுச் செயலாளர் சின்னம்மா’ என்றார்.
மேட்டூர், செம்மலை:
“எம்ஜிஆர். கண்ட இயக்கம் இது. இதை வளர்த்தெடுத்தவர் அம்மா. இந்த கட்சி காப்பாற்றப்பட வேண்டும் என்றால், எனது ஆதரவு பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கே” என்றார்.
சேந்தமங்கலம், சி.சந்திரசேகரன்:
விஷயத்தை சொன்னதும் ‘ராங் நெம்பர்’ என்றவர் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டார். ஆனால், அந்த எண் அவரது பெயரில்தான் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வீரபாண்டி, மனோன்மணி:
‘சின்னம்மா’ என்று ஒரு வார்த்தையில் முடித்துக்கொண்டார்.
சேலம் தெற்கு, ஏ.பி.சக்திவேல்:
“அண்ணே எங்க ஆதரவு எப்பவும் இரட்டை இலைக்குதான். பொதுச் செயலாளர் சின்னம்மாவுக்கே என்னோட ஆதரவு” என்றார்.
ஈரோடு, தென்னரசு:
“வேற யாருக்குங்க, சின்னம்மாவுக்குதானுங்க..”
ஈரோடு மேற்கு, கே.வி.ராமலிங்கம்:
அலைபேசியை எடுத்தவர், சொன்னதை பொறுமையாக கேட்டுக்கொண்டார். வேறொரு எண்ணை குறிப்பிட்டு அதில் அழைக்கும்படி கேட்டுக்கொண்டார். நான்கைந்து முறை அழைத்தும் எடுக்கவில்லை.
அரக்கோணம், ரவி:
“கட்சி யாரிடம் இருக்கிறதோ அவருக்கே என் ஆதரவு.” என்றவரிடம் நேரடியாக பெயரைச் சொல்லுங்கள் என்றோம். “கட்சி சின்னம்மா விடம் இருக்கிறது” என்றார்.
பாலக்கோடு கே.பி.அன்பழகன் (அமைச்சர்):
“இது என்னங்க கேள்வி. தலைமை எங்கு இருக்கிறதோ அதற்குத்தான் என் ஆதரவு. பொதுச் செயலாளர் சின்னம்மாவிடம்தானே தலைமை இருக்கிறது” என்றார்.
நிலக்கோட்டை, தங்கதுரை:
“பி.ஏ. பேசறேன். எம்எல்ஏ வனத்துறை அமைச்சர்கூட இருக்காருங்க.” என்றார்.
அலைபேசி அடித்தும் எடுக்காதவர்கள்:
ஸ்ரீபெரும்புதூர், கே.பழனி:
(ரிங் டோன்: பூ மழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது..)
கும்மிடிப்பூண்டி, கே.எஸ்.விஜயகுமார்
(நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. இது ஊரறிந்த உண்மை..)
பூந்தமல்லி, டி.ஏ.ஏழுமலை
(அன்னையைப்போல் ஒரு தெய்வமில்லை..)
ஆத்தூர், சின்னத்தம்பி
(நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..)
சங்ககிரி, எஸ்.ராஜா
(நினைத்தேன் வந்தாய் நூறு வயது..)
ஏற்காடு, ஜி.சித்ரா. திருப்போருர், கோதண்டபாணி. திருத்தணி, பி.எம்.நரசிம்மன். அம்பத்தூர், வி.அலெக்சாண்டர். கெங்கவள்ளி, ஆ.மருதமுத்து. சேலம் மேற்கு, ஜி.வெங்கடாஜலம். நாமக்கல், கே.பி.பி.பாஸ்கர். திருச்செங்கோடு, சரஸ்வதி. வால்பாறை, கஸ்தூரி வாசு. அந்தியூர், இ.எம்.ஆர்.ராஜா. பவானிசாகர், ஈஸ்வரன். கோவை தெற்கு, கே.அர்ச்சுனன், கோவை வடக்கு, பி.ஆர்.ஜி.அருண்குமார், சூலூர், கனகராஜ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT