Published : 29 Jan 2014 12:00 AM
Last Updated : 29 Jan 2014 12:00 AM

தன்னாட்சி அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல்: மகேந்திரகிரி மைய விஞ்ஞானிகள் அதிருப்தி

திரவ திட்ட இயக்க மையத்துக்கு தன்னாட்சி அங்கீகாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தன்னாட்சி மையம் என்பதற்கு பதிலாக தன்னாட்சி பெற்ற யூனிட் என அங்கீகாரம் மட்டுமே அளிக்கப்படவுள்ளதாக கவலை தெரிவிக்கிறார்கள் மகேந்திரகிரி விஞ்ஞானிகள். இது கேரளாவில் உள்ள வலியமலா திரவ இயக்க திட்ட மையத்தின்

ஒரு கிளையாக மட்டுமே அமையும் என்கிறார்கள்.

இஸ்ரோவின் திரவ இயக்கத் திட்ட மையங்கள் தமிழகத்தின் மகேந்திரகிரி உட்பட 16 இடங்களில் உள்ளன. இவற்றில் ராக்கெட் இன்ஜின்களை வடிவமைத்தல், சோதனை ஓட்டம் உட்பட 70 சதவீத பணிகள் மகேந்திரகிரியில்தான் நடக்கிறது. இந்த நிலையில்தான் கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரகிரி மையத்துக்கு தன்னாட்சி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்தது.

கடந்த 10-ம் தேதி இதுகுறித்து ஊழியர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், ‘விரைவில் மகேந்திரகிரி அதன் மேம்படுத்தப்பட்ட அடுத்த கட்டத்துக்குச் செல்லவுள்ளது’என்றார். மேலும் தன்னாட்சி மையமாக்க மத்திய அமைச்சகமும் ஒப்புதல் அளித்துவிட்டது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜன.30 அல்லது 31-ம் தேதியில் மகேந்திரகிரியில் நடக்கும் விழாவில் வெளியாகவுள்ளது. இதில் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் நாராயணசாமி, மாநிலங்களவை எம்பி கனிமொழி, நெல்லை எம்பி ராமசுப்பு, எம்எல்ஏ-க்கள் விஜயதாரணி, மைக்கல் ராயப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரை அழைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்நிலையில் மகேந்திரகிரியை தன்னாட்சி மையமாக அங்கீகரிக்காமல் தன்னாட்சி பெற்ற யூனிட்டாக மட்டுமே அங்கீகரிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் விஞ்ஞானிகள் பேசியது:

தன்னாட்சி பெற்ற தனி மையம் என்பது முழுமையான அதிகாரம் பெற்ற மையம். சுயமாகப் பட்ஜெட் தயாரித்து, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம். பணியாளர்களை இங்கேயே தேர்வு செய்யலாம். ஆனால், யூனிட் என்பது வலியமலா திரவ இயக்கத் திட்ட மையத்தின் கிளை அமைப்பு போன்றது.

பட்ஜெட் இங்கு தயாரித்தாலும், பணியாளர்களை அங்குதான் தேர்வு செய்து, இங்கு இடமாற்றம் மூலம் நியமிப்பர். தற்போது உள்ள நிலைக்கும் வலியமலாவின் கிளை அமைப்பு போல் இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதுகுறித்து நாராயணசாமியிடம் பேசினோம். அவரும் யூனிட் என்றுதான் அறிவிக்கப்படும் என்கிறார்.

ஆனால், உரிமை பிரச்சினை வரும்போது நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். எத்தனை காலம் அவர் பார்த்துக்கொண்டிருக்க முடியும்?

ஆசியாவிலேயே அதிகபட்சமாக 6500 ஏக்கர் நிலம் விண்வெளி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டது தமிழகத்தின் மகேந்திரகிரியில் மட்டும்தான். அவ்வளவு இடமும் கொடுத்துவிட்டு, ஒரு பியூனைக் கூட வேலைக்கு எடுக்க அதிகாரம் இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மையங்களும் தன்னாட்சி அதிகாரம் பெற்றுள்ள நிலையில் அதிகப் பணிகள் நடக்கும் இம்மையத்துக்கு மட்டுமே தன்னாட்சி மறுக்கப்படுகிறது.

அதனாலேயே இந்திய விண்வெளி துறையில் தமிழகத்தில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்படுவது அரிதாக இருக்கிறது. இவ்வாறு கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x