Published : 07 May 2017 12:24 PM
Last Updated : 07 May 2017 12:24 PM

கவனம் பெறாத உதகை சுற்றுலா தலங்கள்

கோடை சீசன் காலத்தில் உதகையில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடுகின்றனர். ஆண்டுதோறும் 25 லட்சம் சுற்றுலா பயணிகள் உதகைக்கு வருகின்றனர்.

உதகையின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்கள் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம், ரோஜா பூங்கா. ஒருமுறை வந்தவர்கள் மீண்டும் வரும்போது, அதே இடங்கள் தானா என சலிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், அமைதியாகவும், சிக்கனமாகவும் பொழுதைக்கழிக்க உதகையில் கவனம் பெறாத பல சுற்றுலா தலங்கள் உள்ளன.

மரவியல் பூங்கா

உதகை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ளது மரவியல் பூங்கா. தோட்டக்கலைத் துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காவில் 60 வகையான மரங்கள் உள்ளன. அமைதியாகவும், பச்சை பசேலென பரந்திருக்கும் புல்வெளியும் கோடை வெப்பத்தில் கண்களுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி தரக்கூடியது.

அமைதியான சூழ்நிலை நிலவுவதால் முதியோர் ஓய்வெடுக்கவும், புத்தகப் பிரியவர்கள் புத்தகங்கள் வாசிக்கவும் ஏற்ற இடம்.

தேயிலை பூங்கா

உதகை-கோத்தகிரி சாலையில் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது தேயிலை பூங்கா. தொட்டபெட்ட சிகரத்தின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா தேனிலவு தம்பதியினர் மட்டுமின்றி சுட்டிக்குழந்தைகள் உள்ள குடும்பத்தினருக்கும் நல்ல பொழுதுபோக்கு பூங்கா. சிறுவர்கள் விளையாட விளையாட்டு உபகரணங்கள். நடைபயிற்சி மேற்கொள்ள தேயிலைத் தோட்டத்தின் இடையே நடைபாதை என நேரம் போவதே தெரியாது.

கேர்ன் ஹில்

உதகை-பாலாடா சாலையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தூரமுள்ளது கேர்ன் ஹில். வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளது இந்த பகுதி. இயற்கையை ரசிக்க ஏற்ற இடம். அமைதியான சூழல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை அறிந்து கொள்ள வனத்துறை இங்கு தகவல் மையம் அமைத்துள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒளி, ஒலி அமைப்பில் பறவைகளின் புகைப்படத்துடன் அவை எழுப்பும் ஒலியை அனுபவிக்கலாம். இயற்கை மற்றும் வன ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம். அங்கு அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் பயணிப்பது பரவசம். வனத்தின் ஆங்காங்கே விலங்குகளின் மாதிரிகள், நாம் வனத்தினுள் இருக்கும் அனுபவத்தை கொடுக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x