Last Updated : 18 Mar, 2017 12:51 PM

 

Published : 18 Mar 2017 12:51 PM
Last Updated : 18 Mar 2017 12:51 PM

மதுரையில் செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பு: தனிக்குழு அமைத்து கண்காணிக்க காவல்துறை நடவடிக்கை

மதுரையில் சமீப காலமாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இக்குற்றங்களில் ஈடுபடுவோரை பிடிக்க செல்போன் சர்வீஸ் மையம், முக்கிய பஜார்களில் பழைய செல்போன்களை விற்கும் நபர்கள் குறித்து தனிக்குழு அமைத்து கண்காணிக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மதுரை நகரில் அவசரம் என கூறி, அருகில் உள்ளவர்களின் செல் போனை வாங்கி பேசும் நபர்கள், அதை எடுத்துக்கொண்டு தப்பியோடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்று நூதன வழிப்பறியில் ஈடுபடும் கும்பல், நகையைவிட விலை உயர்ந்த செல்போன்களை பறிப்பதில்தான் தீவிரம் காட்டுகின்றனர். திருட்டு நகைகளை விற்கும்போது சிக்கிக்கொள்ளும் வாய்ப்பு அதிகம். அதேசமயம் செல்போன்களை எளிதாக விற்பனை செய்துவிடலாம் என்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அதோடு, பெரும்பாலும் செல்போன் பறி கொடுக்கும் நபர்கள் காவல்துறையிடம் புகார் தெரிவிப்பதில்லை. இதுவும் செல்போன் வழிப்பறி கும்பலுக்கு சாதகமாக உள்ளது.

செல்போன் வழிப்பறி புகார் கொடுக்க பலர் தயங்குவதன் காரணம், போலீஸாரின் அலட்சியப்போக்குதான் என்று கூறப்படுகிறது. புகார் கொடுக்க வந்தவர்களிடம், அவர்கள் செல்போன் வாங்கியதற்கான ஒரிஜினல் பில், ஐஎம்இஐ எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை கேட்டு போலீஸார் அலைக்கழிப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி இரவு மதுரை மகால் பகுதியில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் பிளஸ் 2 மாணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதே போன்று கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, மதுரை எல்லீஸ் நகரில் பிளஸ் 2 மாணவர் ஒருவரை வழிமறித்த மூவர், அவரது செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுத்து சத்தம்போட்டார். அக்கம், பக்கத்தினர் திரண்டதால் மூவரும் அந்த மாணவரை கீழே தள்ளிவிட்டு தப்பினர். இதில் மாணவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது.

மதுரை தோப்பூரைச் சேர்ந்த அய்யனார் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியார் பேருந்து நிலையத்திலுள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தார். அங்கு வந்த மூவர், அவசரமாக ஒருவருக்கு பேசவேண்டும் எனக் கூறி, அய்யனாரின் செல்போனை கேட்டனர். அவர் போனை கொடுத்தார்.

சிறிது நேரத்தில் செல்போனுடன் அங்கிருந்து தப்பியோட முயன்றனர். அருகிலிருந்தவர்கள் மூவரையும் விரட்டி பிடித்து, திடீர்நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், வாடிப் பட்டி பகுதியைச் சேர்ந்த கவுதம் (19) மற்றும் அவருடன் வந்த இரு சிறுவர்கள் என தெரியவந்தது.

இது போன்று செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் விலை உயர்ந்த செல்போனை கொண்டு செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், சில நேரங்களில் கிடைத்த பொருட்களை பறித்துக்கொண்டு தப்பியோடிவிடுகின்றனர். அவ்வாறுதான் செல்போன்களை பறித்துச் செல்கின்றனர்.

அறிமுகம் இல்லாத நபர்களிடம் யாரும் செல்போனை தரக்கூடாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம். செல்போன் சர்வீஸ் மையங்களிலும், முக்கிய பஜார்களிலும் பழைய செல்போன் விற்கும் நபர்கள் குறித்து காவல்துறை தனிக்குழு கண்காணித்து வருகிறது. உரிய ஆவணமின்றி செல்போன் விற்கவரும் நபர்கள் குறித்து, முகவரி, செல்போன் எண்களை சேகரிக்கிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x