Last Updated : 10 Dec, 2013 12:00 AM

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM

35 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டு மனைகளை விற்கிறது சிஎம்டிஏ

வீட்டு மனைகளின் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து விட்ட நிலையில், சென்னையில் மணலி மற்றும் மறைமலை நகரில் குறைந்த விலை வீட்டு மனைகளை விற்க சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முன்வந்துள்ளது. இது குறித்து அறிந்த பொதுமக்கள், அதற்கான மனுக்களை வாங்க அதன் தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை குவிந்தனர்.

இந்த வீட்டுமனைப் பிரிவுகளை வாங்குவதற்கு மனு செய்பவர்களுக்கு, குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும்.

சென்னையின் தெற்கு மற்றும் வடக்கு புறநகர் பகுதிகளில் புதிய துணை நகரங்களை அமைக்கும் வகையில், வீட்டுமனைகளை உருவாக்கி விற்பனை செய்ய சி.எம்.டி.ஏ. முடிவெடுத்துள்ளது.

இதற்காக, வீட்டு மனைகளை உருவாக்கி, அதை விற்பது பற்றிய அறிவிப்பை சி.எம்.டி.ஏ. வெளியிட்டுள்ளது. வட சென்னையில் மணலி புதுநகர் மற்றும் தென் சென்னை புறநகர் பகுதியில் மறைமலைநகர்/கூடலூர் பகுதிகளில் புதிய வீட்டுமனைகளை சி.எம்.டி.ஏ. உருவாக்கியுள்ளது.

இதில், பொருளாதாரத்தில்நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருவாய், நடுத்தர வருவாய் மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கென தனித்தனி மனைப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட இரண்டு இடங்களிலும் சுமார் 200 மனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறைமலை நகரில் 300 சதுர அடி (ஒரு சதுர அடி ரூ.417) தொடங்கி, 3 ஆயிரம் சதுர அடி வரையிலான மனைகளும், மணலியில் 420 சதுர அடி (ஒரு சதுர அடி ரூ.706) தொடங்கி 3600 சதுர அடி வரை மனைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மனைப் பிரிவுக்கு ஏற்ப விலை மாறும். ரூ.2.96 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் மனைகள் விற்பனைக்குத் தயாராக உள்ளன.

இது தவிர, சாத்தாங்காட்டிலும், இரும்பு மற்றும் எஃகு அங்காடியில் உள்ள மனைகளும் விற்பனைக்குத் தயாராக உள்ளன. மேலும், கோயம்பேடு அங்காடியில் உள்ள கடைகள் சிலவும் இந்த குலுக்கலில் விற்பனை செய்யப்படவுள்ளன.

மணலியில் புதிய குடியிருப்புக்கான மனை விற்பனையைத் தொடங்கி 35 ஆண்டுகளுக்குப் பின் இந்த மனைகளை சிஎம்டிஏ விற்க முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான மனுக்கள் சிஎம்டிஏ அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் இணையதளத்திலும் (www.cmdachennai.gov.in) மனுக்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த விற்பனை பற்றிய தகவல் கிடைத்ததும், எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ தலைமை அலுவலகத்தில் ஏராளமான பொதுமக்கள் திங்கள்கிழமை குவிந்துவிட்டனர்.

இது குறித்து சிஎம்டிஏ அதிகாரி ஒருவர் ‘தி இந்து’ நிருபரிடம் கூறுகையில், “இந்த மனைப் பிரிவுகளுக்குத் தேவையான சாலை, குடிநீர், கழிவுநீர் வடிகால் போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மனைப் பிரிவை வாங்குவோருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும். சிஎம்டிஏ வசம் உள்ள 60 சதவீத இடத்தில் வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடம் கட்டமைப்பு வசதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குலுக்கல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x