Published : 13 Nov 2013 07:48 AM Last Updated : 13 Nov 2013 07:48 AM
தமிழக பந்த் - 15,000 பேர் கைது; இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில், இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில், கடையடைப்பு மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் செவ்வாய்க்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 15,000 பேர் கைது செய்யப்பட்டனர். மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடத்திய ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட 21 அமைப்புகள் சேர்ந்து, செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டங்களை நடத்தின.
ம.தி.மு.க., பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையிலான ம.தி.மு.க.,வினர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்த போராட்டத்தில், மனிதநேய மக்கள் கட்சி மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கைது செய்யப்பட்டார்.
கடைகள் அடைப்பு...
வடசென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையினர் கடையடைப்பு போராட்டத்தில் முழுவதுமாக ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் வழக்கறிஞர்கள் ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று, மத்திய அரசைக் கண்டித்து மனு அளித்தனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர், மத்திய அரசையும், இலங்கை அரசையும் கண்டித்து, வள்ளுவர் கோட்டம் முன்பு ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.
சென்னையில் பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கின. திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன. நெல்லை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. குமரி மாவட்டத்தில் பஸ்கள், ஆட்டோக்கள், பள்ளி வாகனங்கள் வழக்கம் போல ஓடின.
நாகர்கோவில் கோர்ட்டு முன்பு வழக்கறிஞர்கள், கறுப்பு கொடி ஏந்தியும், கறுப்பு பேட்ஜ் அணிந்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஈரோட்டில், தமிழ் உணர்வாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கணேச மூர்த்தி எம்.பி. மற்றும் போராட்ட குழுவினர் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
WRITE A COMMENT