Published : 31 Jan 2014 09:00 AM
Last Updated : 31 Jan 2014 09:00 AM
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சாதனை படைத்த 10 பேராசிரியைகளுக்கு இளம் பெண் சாதனையாளர் விருது சென்னை அறிவியல் விழாவில் வழங்கப்பட்டது.
தமிழக அரசின் உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் நகரம், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அறிவியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் ஆண்டுதோறும் சென்னை அறிவியல் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டின் அறிவியல் விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா ஜெம் பூங்கா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் விழாவை தொடங்கி வைத்தார். 140 அரங்குகளுடன் கூடிய அறிவியல் கண்காட்சி அறிவியல் விழாவில் இடம்பெற்றுள்ளது.
விருது பெற்றோர்
அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியின்போது 2012-ம் ஆண்டுக்கான இளம் பெண் சாதனையாளர் விருதுகளையும், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கழக விருதுகளையும் அமைச்சர் பழனியப்பன் வழங்கினார். இளம் பெண் சாதனையாளர் விருது, ரூ.10 ஆயிரம் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். விருது பெற்ற 10 பேராசிரியர்கள் விவரம் வருமாறு:
1.விவசாயப் பிரிவு – டி.ஜெகதீஸ்வரி, உதவிப் பேராசிரியை, கிரிஷி விக்யான் கேந்திரா, அருப்புக்கோட்டை.
2.விவசாயப் பிரிவு – பி.ஜானகி, உதவிப் பேராசிரியை, வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை.
3.வேதியியல் – எஸ்.வேல்மதி, இணை பேராசிரியை, என்.ஐ.டி., திருச்சி.
4.பொறியியல், தொழில்நுட்பம் – ஜி.வைஸ்லின் ஜிஜி, பேராசிரியை, துறைத் தலைவர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி, திருச்செந்தூர்.
5.சுற்றுச்சூழல் – கே.ரமணி, உதவிப் பேராசிரியை, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், சென்னை.
6.வாழ்வியல் – பி.இந்திரா அருள்செல்வி, உதவிப் பேராசிரியை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
7.கணிதம் – ஜி.நாகமணி, உதவிப் பேராசிரியை காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்.
8.மருத்துவம் – எஸ்.லதா, உதவிப் பேராசிரியை, அண்ணா பல்கலைக்கழகம், திருச்சி.
9.இயற்பியல் - எம். உமாதேவி, இணை பேராசிரியை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல்
10.கால்நடை மருத்துவம் – வி.ஜெயலலிதா, உதவிப் பேராசிரியை, கால்நடை மருத்துவக் கல்லூரி, ஒரத்தநாடு, தஞ்சாவூர்.
நாளை முடிவடைகிறது
பள்ளி மாணவ-மாணவிகள் 82 பேர் அறிவியல் கழக விருதுகளை பெற்றனர். அறிவியல் விழா தொடக்க நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன், அறிவியல் நகரம் துணைத் தலைவர் எம்.குற்றாலிங்கம், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம், அறிவியல் விழாக் குழு தலைவர் முத்துக்குமரன், பேராசிரியர் அறிவொளி, மூத்த விஞ்ஞானி தேவசேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அறிவியல் விழா சனிக்கிழமை (நாளை) முடிவடைகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT