Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM
திமுக கூட்டணியில் 5 தொகுதிகளைக் கேட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கியிருக்கும் விஷயம் தீக்குளிக்க துணியுமளவுக்கு அக்கட்சித் தொண்டர்களை உணர்ச்சி வசப்பட வைத்திருக்கிறது.
திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நீண்ட காலமாக இடம்பெற்று வருகிறது. ஈழத் தமிழர் பிரச்சினையில் திமுக-வின் நிலைப்பாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முரண்பாடு இருந்த நிலையிலும் கூட்டணியில் பங்கம் ஏற்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு சிதம்பரம், விழுப் புரம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இம் முறை அக்கட்சி திமுக-விடம் 5 தொகுதிகளை கேட்டது. ஆனால், ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இது அக்கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ’தி இந்து’விடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் நாங்கள் சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய தனித் தொகுதிகளையும் மயிலாடுதுறை அல்லது தருமபுரி மற்றும் தேனி என 5 தொகுதிகளை கேட்டோம்.
இதில் 3 தனித் தொகுதிகள் கட்டாயம் தேவை என்று வலியுறுத்தினோம். கடந்த 3-ம் தேதி இரவுகூட உங்களுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன என்றார்கள். இதனால், இருநாட்கள் நாங்கள் திமுக தரப்பினரிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால், இடையே சிலர் குழப்பம் ஏற்படுத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த 6-ம் தேதி என்னை அழைத்த திமுக தலைவர் கருணாநிதி, ‘ஒரு தொகுதி மட்டும்தான். சூழ்நிலை அப்படி. தயவுசெய்து ஒப்புக்கொள்ளுங்கள். முதலில் கையெழுத்திடுங்கள், பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று என்னிடம் வற்புறுத்தினார்.
மூத்த அரசியல் தலைவர் என்கிற முக நாகரிகத்துக்காகவும் கூட்டணி தர்மத்துக்காகவும் வேறு வழியின்றி கையெழுத்திட்டேன். மேலும், தனித்துப் போட்டியிடுவதால் எந்தப் பலனும் இல்லை.
ஓட்டுகள் சிதறுவது எதிரிகளுக் குதான் லாபம் என்பதால் ஒரு தொகுதியை ஏற்றுக்கொண்டோம்.
ஆனால், தொண்டர்கள், கட்சி நிர்வாகிகளிடம் கடுமையான அதிருப்தி நிலவுகிறது அவர்கள் அனைவரையும் சமாதானப்படுத்தி வருகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT