Published : 01 Oct 2014 10:27 AM
Last Updated : 01 Oct 2014 10:27 AM
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள கால அட்டவணையில் டிக்கெட் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண விவரங்கள் நிறைய பிழைகளுடன் அச்சாகியுள்ளது. இதனால், 21 ஆயிரம் அட்டவணை புத்தகங்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே சார்பில் ஆண்டுதோறும் புறநகர் ரயில் களின் நேரம் குறித்த கால அட்ட வணையை வெளியிடுவது வழக்கம். இதில், புறநகர் ரயில் களின் வருகை, புறப்பாடு குறித்த நேரம், டிக்கெட் கட்டணம், மாதாந் திர சீசன் கட்டணம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை ஆக.30ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், பயணக் கட்டண விவரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட புறநகர் ரயில் ஒன்றின் விவரம் கால அட்டவணையில் இடம்பெறவில்லை. இதுகுறித்து, மண்டல ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பாஸ்கரன் `தி இந்து’விடம் கூறியதாவது:
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட ரயில்வே கால அட்டவணையில் பயணக் கட்டண விவரங்கள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன. தற்போது, ரயில்களில் குறைந்தபட்சக் கட்டணம் ஐந்து ரூபாயாக உள்ளது. ஆனால் கால அட்டவணையில் குறைந்தபட்ச ரயில் கட்டணம் மூன்று ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், மாதாந்திர சீசன் கட்டண விவரங்களும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது 21 ஆயிரம் கால அட்டவணை புத்தகங்கள் அச்சடித்து விற்பனைக்கு வந்துள்ளன. அனைத்துப் புத்தகங்களிலும் இந்தப் பிழைகள் உள்ளன. இதை வாங்கும் பொதுமக்கள் நிச்சயம் குழப்பத்துக்கு ஆளாவார்கள். எனவே, ரயில்வே நிர்வாகம் உடனடியாக இந்தக் கால அட்டவணை புத்தகங்களை திரும்பப் பெற்று, பிழைகளை திருத்தம் செய்து புதிய புத்தகங்களை அச்சடித்து விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு பாஸ்கரன் கூறினார்.
இதுகுறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, “கால அட்டவணை புத்தகத்தில் உள்ள புகார்களை உடனடியாக திருத்தி புதிய கால அட்டவணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT