Published : 13 Mar 2014 01:40 PM
Last Updated : 13 Mar 2014 01:40 PM

அமைச்சர் ப.சிதம்பரம் வீடு அருகே பைப் வெடிகுண்டு வைத்தது ஏன்? தமிழர் விடுதலை படையினர் வாக்குமூலம்

தமிழர் விடுதலைப்படையைச் சேர்ந்த திருச்செல்வம் அளித்த தகவலின்படி மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீடு அருகே பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுச்சேரியிலுள்ள மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு முன் ஜன. 29-ம் தேதி சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து பிப். 11-ம் தேதி மதுரை உத்தங்குடி ரிலையன்ஸ் வளாகத்திலும் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி தேசிய புலனாய்வுப் பிரிவு (என்ஐஏ), தமிழக கியூ பிரிவு, மதுரை மாவட்ட போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது வெடிகுண்டு கிடந்த இடம் அருகே தமிழர் விடுதலைப்படை என்ற அமைப்பின் பெயரில் மத்திய அரசுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் கிடைத்தன. விசாரணையில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் புதுவை, மதுரையில் வெடிகுண்டு வைத்தது உறுதியானது. இவர்களைக் கைது செய்ய பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

உசிலம்பட்டி டிஎஸ்பி சரவணக்குமார் தலைமையிலான போலீஸார் இந்த இயக்கத்தின் முக்கிய நபரான சிவகங்கை மாவட்டம் பூவாச்சிபட்டி திருச்செல்வம் (33), பாவணக்கோட்டை தங்கராஜ் (எ) தமிழரசன் (37), ஆத்தாங்குடி கவியரசன் (எ) ராஜா (29) ஆகியோரைக் கைது செய்தனர்.

இதற்கிடையே 3 பேரிடமும் மதுரை எஸ்.பி. விஜயேந்திரபிதாரி மற்றும் போலீஸார் விசாரித்தபோது, புதுவை, மதுரை மட்டுமின்றி சிவகங்கை - மானகிரியிலுள்ள ப.சிதம்பரம் வீட்டு பகுதியிலும் பைப் வெடிகுண்டு வைத்ததாக திருச்செல்வம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த போலீஸார் ப.சிதம்பரத்தின் வீட்டு பகுதியில் ஒரு புதரிலிருந்து அந்த வெடிகுண்டடை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் டெல்லியிலிருந்து வந்து, கைதான மூவரிடமும் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

சிதம்பரம், நாராயணசாமியை குறி வைத்தது ஏன்?

கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். வியாபாரிகள் வாழ்வாதாரத்தைக் கெடுக்கும் வகையில் ப.சிதம்பரம் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தார். ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வந்தபிறகு சிறு வியாபாரிகளின் நிலை மிகவும் பரிதாபமாகிவிட்டது.

எனவே இவர்களுக்குப் பாடம் புகட்டவே ப.சிதம்பரம், நாராயணசாமி வீடுகள், ரிலையன்ஸ் வளாகத்தில் வெடிகுண்டுகள் வைத்தோம். ஆனால் தயாரிப்பு தொழில்நுட்பத்தில் செய்த சிறு தவறால் அவை வெடிக்காமல் போய்விட்டன என திருச்செல்வம் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x