Published : 24 Oct 2013 10:13 AM
Last Updated : 24 Oct 2013 10:13 AM
கூடங்குளம் அணு உலை செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தனது மின் உற்பத்திப் பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்வுக்கும் அண்மையில் தூத்துக்குடி கடல் பகுதியில் வளைக்கப்பட்ட அமெரிக்க கப்பலுக்கும் சம்பந்தம் இருக்கலாம் என்பதுதான் ஐ.பி. வட்டாரத்தில் இப்போது ஆழமாக விசாரிக்கப்படும் அபாயச் செய்தி!
அமெரிக்காவின் அட்வன் போர்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான சீமேன் கார்டு ஓகியோ கப்பலை கடந்த 11-ம் தேதி சிறைபிடித்து தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இதிலிருந்த 12 இந்தியர்கள் உள்பட 35 பேரையும் பாளை சிறையில் அடைத்தது போலீஸ். கப்பல் எதற்காக இந்திய எல்லைக்குள் வந்தது என்பது குறித்து இதுவரை முழுமையான பதில் இல்லை. அதேநேரம், கப்பல் வந்ததன் நோக்கம் குறித்து க்யூ மற்றும் மத்திய உளவுப் பிரிவு (ஐ.பி) அதிகாரிகள் அதிதீவிரமாய் விசாரித்தபடி இருக்கிறார்கள்.
இதுகுறித்து உளவுத்துறை வட்டாரத்தில் கசிந்து கொண்டிருக்கும் செய்திகள் வேறுவிதமாய் போகிறது. ரஷ்ய தொழில் நுட்பத்துடன் உலகத் தரம் வாய்ந்த இரண்டு அணு உலைகளை கிட்டத்தட்ட 15 ஆயிரம் கோடி களுக்கு மேல் கொட்டி உருவாக்கி இருக்கிறது இந்தியா. இந்த அணு உலைகளை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டங்கள் ஒருபுறமிருக்க, ’அணு உலைக்கு எதிரான போராட்டங்களுக்கு தொண்டு நிறுவனங்கள் நிதி ஆதாரம் கொடுக்கின்றன’ என்று மத்திய அமைச்சர்கள் பகிரங்கமாகவே அறிக்கைகளை அள்ளி வீசினார்கள். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள தொண்டு நிறுவனங்களின் வரவு செலவுகளை கண்காணித்தது ஐ.பி. பின்னர், குறிப்பிட்ட சில தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதிவரும் வழிகளை அடைத்தது மத்திய அரசு.
கூடங்குளம் அணு உலை திட்டம் வெற்றிபெற்றால் அது இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கான முன்னோடியாக அமைந்துவிடும் என்பதால் அந்நிய சக்திகள், குறிப்பாக அமெரிக்கா போன்ற நாடுகள் கூடங்குளத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்த நிலையில், கூடங்குளத்துக்கு மிக அருகாமையில் அமெரிக்கக் கப்பல் சந்தேகத்திற்கிடமான வகையில் வலம் வந்திருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்புவதாகச் சொல்லும் உளவு அதிகாரிகள், ’’கூடங்குளம் அணு உலை இயங்கப் போகும் சமயம் பார்த்து, இந்திய பிரதமர் ரஷ்யா சென்று அடுத்த கட்ட அணு உலை திட்டங்கள் குறித்த ஒப்பந்தங்கள் குறித்து ரஷ்ய அதிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தக் கூடும் என்ற செய்திகள் சிறகடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அமெரிக்கக் கப்பல் கூடங்குளத்தை வட்டமடித்திருக்கிறது. அந்தக் கப்பலில் ஆயுதங்களைத் தவிர, கூடங்குளம் அணு உலைகளை வெளியில் இருந்தபடியே ஸ்கேன் செய்யக் கூடிய அதி நவீன கருவிகளும் இருக்கலாம் அல்லது இருந்திருக்கலாம் என்றும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
கூடங்குளத்துக்கு மிக அருகாமையில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்தில் அமெரிக்கக் கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள அதிநவீன கருவிகள் மூலமாக கூடங்குளம் அணு உலையின் செயல்பாடுகளை அமெரிக்காவில் இருப்பவர்கள் கண்காணிக்க முடியும் என்றும் சந்தேகிக்கிறார்கள். பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரை சந்திக்க தினமும் யார் யாரோ வந்து போகிறார்கள். அனைத்தையும் நாங்களும் கவனித்து வருகிறோம். தூத்துக்குடி துறைமுகத்தில் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்பதற்காகவே வலிய வந்து கப்பலை சிக்க வைத்திருப்பார்களோ என்றும் சந்தேகம் வருகிறது. எனவே, அந்தக் கப்பலை நவீன உத்திகளால் அணு உலையை உளவு பார்க்க முடியாத எல்லைக்கு அப்பால் கொண்டுபோய் நிறுத்த வேண்டும். அதேபோல், பாளை சிறையில் இருக்கும் கப்பலின் ஊழியர்களையும் அங்கிருந்து வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். என இதுகுறித்து விசாரித்திருக்கும் மத்திய உளவுத் துறையினர் முதல்கட்ட அறிக்கையை டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார்கள்’’ என்கிறார்கள்.
இந்த நிலையில், இந்தியர்களான கப்பலின் துணைக் கேப்டன் லிலித்கு மார் கவுரங், மாலுமி ரதேஷ்தர் திவேதி, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த செக்யூரிட்டி பால் டவர்ஸ் ஆகியோரை கஸ்டடி விசாரணைக்கு எடுக்க மனு செய்திருக்கிறது கியூ பிரிவு போலீஸ். அதேசமயம், பாளை சிறையிலிருந்து இந்தியர்களைத் தவிர வெளி நாட்டினர் 22 பேரையும் புழல் சிறைக்கு மாற்றி இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT