Published : 31 Mar 2017 11:04 AM
Last Updated : 31 Mar 2017 11:04 AM
மலைக் கிராமங்களில் காட்டுப் பன்றிகளை விரட்ட தடுப்பு வேலிகளில் வண்ணச் சேலைகள் மற்றும் வேட்டிகளை கட்டுகின்றனர் சாடிவயல் பகுதி பழங்குடி மக்கள்.
தமிழக-கேரள எல்லையான வாளையாறு முதல் சிறுமுகை காடுகள் வரையிலான பகுதியில் ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் ஆதிவாசிகள், அங்குள்ள செட்டில்மென்ட் நிலங்களில் பல்வேறு தானியங்களைப் பயிரிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கோவைக்கு மேற்கே உள்ள ஆனைகட்டி தூவைப்பதி, தூமனூர், சேம்புக்கரை, கோவை குற்றாலம் மற்றும் நரசீபுரம் சுற்றியுள்ள சீங்கம்பதி, கல்கொத்தி, மடக்காடு, பட்டியார்கோவில்பதி உள்ளிட்ட கிராமங்களில், அவரை, துவரை, உளுந்து, ராகி, சோளம், கம்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
காட்டு யானைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விளைச்சல் நிலங்களில் புகுந்து, பயிர்களை அழித்துவிடுவதால், அவற்றைத் தடுக்க வனத் துறை உதவியுடன் மின்வேலி அமைப்பது, அகழிகள் வெட்டுவது போன்றவற்றை மேற்கொண்டாலும், பெரிய அளவுக்குப் பயன் அளிக்கவில்லை.
எனவே, தற்போது பாதுகாப்பு வேலிக்கு மேல் சேலை மற்றும் வேட்டிகளைக் கட்டிப் பாதுகாத்து வருகிறார்கள். இந்த புதுமையான முறை பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இதுகுறித்து சீங்கம்பதி பழங்குடியின மக்கள் கூறியதாவது: இந்தப் பகுதியில் மழை பெய்தால்தான், பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால், மழைக் காலத்தில் உளுந்து, சாமை, ராகி, கம்பு ஆகியவற்றை விதைப்போம். முன்பு நெல் கூட சாகுபடி செய்துள்ளோம். அப்போது, சாடிவயல் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் பாயும். ஆனால், தற்போது குறைந்த அளவு தண்ணீரே இருப்பதால், உளுந்து, அவரை, துவரை பயிர்களை விதைக்கிறோம். அவற்றையும் காட்டுப் பன்றிகள் நாசம் செய்துவிடுகின்றன.
சோளப் பயிரை யானைகள் நாசம் செய்கின்றன. அதனால்தான், காக்காய்களை விரட்ட கருப்புத் துணி கட்டுவதுபோல, 2, 3 ஆண்டுகளுக்கு முன்னரே துணியைக் கட்டினோம். அவை காற்றில் அசையும்போது ஆட்கள் இருப்பதுபோல தெரியும். அதனால், யானைகள் வருவதில்லை. ஆனாலும், காட்டுப் பன்றி தொந்தரவு தொடர்ந்தது.
இதையடுத்து, வேலி முழுவதும் வீட்டில் உள்ள பழைய சேலை, வேட்டிகளைக் கட்டத் தொடங்கினோம். அது ஓரளவுக்குப் பயன்தந்தது. இதையடுத்து, விவசாயத் தோட்டங்களில் இந்த முறையைக் கையாண்டோம். இப்போதெல்லாம் வேலிக்கு துணி கட்டாமல் சாகுபடியில் ஈடுபடுவதில்லை. தற்போதுதான் உளுந்து அறுவடை செய்தோம். அதனால், வேலியில் வேட்டி, சேலை கட்டுவதில் கவனம் செலுத்தவில்லை. விதைப்பு தொடங்கிய உடனேயே வேலியில் சேலை, வேட்டி கட்டிவிடுவோம்.
கடந்த சில நாட்களாக கோவை நரசீபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள், சோளம், கரும்பு, வாழைப் பயிர்களை யானைக ளிடமிருந்து பாதுகாப்பதற்காக, வேலிகளில் வெள்ளைத் துணி கட்டி வருகின்றனர். காரமடை வனப் பகுதி விவசாயிகள் சிலர், யானைகள் வரும் பாதையில் துர்நாற்றம் வீசும் சாக்கடைக் கழிவுகளைக் கொட்டிவருகின்றனர். இந்த துர்நாற்றத்தால் யானைகள் தோட்டத்துக்குள் நுழைவதில்லை. ஆனால், நாங்கள் காட்டுப் பன்றி களை விரட்டும் புதிய முறையைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்துக்கு உள்ளாகின்றனர் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT