Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

சேது சமுத்திர திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு செய்தது ஏன்?- திமுக தலைவர் கருணாநிதி கேள்வி

கடந்த 2004 நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் சேது திட்டத்தை அதிமுக வலியுறுத்தியது. எம்.ஜி.ஆரே சேது திட்டத்தை ஆதரித்தார். தற்போது இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு செய்துள்ளது. அப்படியானால் அதிமுக கொள்கையையே ஜெயலலிதா ஏற்கவில்லையா? என, திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் புதன்கிழமை வெளியிட்ட கேள்வி, பதில் அறிக்கை வருமாறு:

சிதம்பரம் நடராஜர் கோயில் வழக்கில், மூத்த வழக்கறிஞரை முறையாக வாதாட வைக்க முன்வராத அதிமுக அரசுதான், சேது திட்டத்தை, எந்த வழியிலும் துவக்கக் கூடாது என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்திருக்கிறது.

அதிமுக 2004ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில், சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமென்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு, தற்போது அதற்கு மாறான கருத்தை ஜெயலலிதா வலியுறுத்துகிறார் என்றால், அதிமுகவின் கொள்கையை அவர் ஏற்கவில்லையா அல்லது எம்ஜிஆர் ஆதரித்த திட்டத்தை, ஜெயலலிதா மறுக்கிறாரா?

அதிமுக அமைச்சர் ஒருவர் மீதான புகாரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் விசாரிப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதிமுக அரசின் போலீஸாரே விசாரித்தால், உண்மை வருமா என்பதே நடுநிலையாளர்களின் கேள்வி.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், தன் வீட்டுக்குள்ளேயே 2 முறை கொள்ளையர்கள் புகுந்து, திருடிச் சென்றதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு கொள்ளை நிகழ்வுகள் கேட்பாரற்றுப் போய்விட்டன என்பதற்கான உதாரணம் இது.

திருச்சியிலிருந்து காரைக்குடி வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்க, திமுக ஆட்சியில் அனுமதி கொடுத்தது. அதற்கு அதிமுக அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதில் அதிமுக அரசின் தடையை ரத்து செய்து, நீதிபதி ராஜா தீர்ப்பளித்துள்ளார். ஜெயா அரசுக்கு நேர்ந்த சரியான மூக்கறுப்பு இது. இனியாவது தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு முறையாக ஒத்துழைத்தால், மதுரவாயல் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவுபெறும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. அந்தத் திட்டம்தான் தற்போதும் தொடர்கிறது. திமுக ஆட்சியின் பல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தியதைப் போல இல்லாமல், இதையாவது தொடருகிறார்கள் என்பது மகிழ்ச்சிதான். திருச்சி மத்திய சிறையிலுள்ள நைஜீரியக் கைதிகள், சிறையில் காவல்துறையினரை சிறை பிடித்துக்கொண்டனர் என, ‘தி இந்து’வில் செய்தி வந்துள்ளது. அதிமுக ஆட்சியில் சிறைத்துறை பாதுகாப்பாக, சுதந்திரமாக செயல்படுவதற்கு இது உதாரணம்.

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்களை அதிமுக அரசு அலட்சியப்படுத்தியதால், நவம்பரில் வரவேண்டிய கூடுதல் மின்சாரம், புதிய திட்டங்கள் மூலம் தற்போதுதான் கிடைக்கிறது. திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களின் பணிநீக்க விவகாரத்தில், நடந்தது நடந்ததாக இருக்கட்டும். இனியாவது அதிமுக அரசு தெளிவு பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x