Published : 17 Sep 2013 10:21 PM
Last Updated : 17 Sep 2013 10:21 PM
பெரியாரின் 135-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரியார் பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சிலையின் கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது படத்துக்கு முதல்வர் ஜெயலலிதா மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.
திமுக
சென்னை அண்ணா சாலை சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
தேமுதிக
தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள பெரியார் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் (தாயகம்) உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பாமக
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாமக தலைவர் ஜி.கே.மணி உடனிருந்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் சென்னை அண்ணா சாலையில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சென்னை வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்குள்ள பெரியார் நினைவிடத்துக்குச் சென்று மலர்வளையம் வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு அதன் நிறுவனத் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT