Published : 10 Mar 2017 12:09 PM
Last Updated : 10 Mar 2017 12:09 PM

இடிந்து விழும் நிலையில் துணை மின்நிலைய கட்டிடங்கள்: மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம்

தமிழகத்தில் பெரும்பாலான துணை மின்நிலையங்களின் கட்டிடங்கள் விரிசல் ஏற்பட்டு பரா மரிப்பு இல்லாமல் இருப்பதால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் மின்விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

தமிழகத்தில் இரண்டரை கோடி மின் இணைப்புகள் உள்ளன. மின் உற்பத்தி, விநியோகம், மின் கட்டண கணக்கீடு, வசூல் மற்றும் பராமரிப்புப் பணிகளை 72 ஆயிரம் ஊழியர்கள் மேற்கொள்கின்றனர். தமிழகம் முழுவதும் 2,600-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள், 1,395 துணை மின்நிலையங்கள் உள்ளன. இதில், 40 சதவீத துணை மின்நிலையங்கள் 1980-க்கு முன்பு அமைக்கப்பட்டவை. இந்த துணை மின்நிலையங்கள் மூலமே வீடுகள், விவசாய தோட்டங்கள், நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த துணை மின்நிலையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், குடியிருப்பு கட்டிடங்கள் விரிசல் விழுந்துள்ளன. இவற்றை பரா மரிக்க மின்சார வாரியம் நிதி ஒதுக்காததால் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டலத் தலைவர் சசாங்கன் கூறியதாவது: பெரும் பாலான துணை மின் நிலையக் கட்டிடங்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளன. சில இடங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனால் பணியாளர்கள் மிகுந்த அச்சத்துடன் பணியாற்றுகின்றனர். புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றம் ஏற்பட்டால் கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதன் காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மின் நிலைய பணியாளர்களின் குடியிருப்புகளும் இதே நிலையில்தான் உள்ளன. பலர் குடியிருப்புகளில் தங்காமல், வேறு பகுதிகளில் குடியிருப்பதால், அவசரப்பணிகளுக்கு பணியா ளர்களை ஒருங்கிணைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

மின் நிலைய கட்டிடங்களை சீரமைத்து மின் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளவும், பணியாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிந்திடவும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2001-ம் ஆண்டுக்கு பிறகு தொடங்கப்பட்ட துணை மின் நிலைய அலுவலகங்களில் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப் படாததால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, சுகாதாரப் பணியாளர்களை நியமிக்கவும், குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையின்றி மின்சாரம் வழங்க, கூடுதல் மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானம் தொடர்பான கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மின்சாரத்துறை கட்டிட பராமரித்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “விரிசல் ஏற்பட்டுள்ள கட்டிடங்களை பராமரிக்க பட் ஜெட்டில் நிதி ஒதுக்குமாறு அரசிடம் கேட்டுள்ளோம். நிதி வந்ததும், பராமரிப்பு பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x