Published : 15 Nov 2013 12:00 AM
Last Updated : 15 Nov 2013 12:00 AM
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் வலுவடைந்து நாகப்பட்டினம் அருகே நாளை (16-ம் தேதி) மாலை கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் பலத்த காற்றுடன் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்தமான் அருகே வங்கக் கடலில் சில நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மெல்ல தீவிரமடைந்து, தமிழகத்தை நோக்கி நகர்ந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருக்கிறது. இது, மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் சின்னம், நாளை மாலை நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரையைக் கடக்கிறது
இதுகுறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது புதன்கிழமை சென்னைக்கு தென் கிழக்கே 650 கி.மீ தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே சுமார் 680 கி.மீ தூரத்திலும் மையம் கொண்டிருந்தது. இந்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி நகர்ந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு சென்னைக்கு தென்கிழக்கே 550 கி.மீ. தூரத்திலும் நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே 570 கி.மீ தூரத்திலும் உள்ளது. இது மேலும் தீவிரமடைந்து 16-ம் தேதி மாலை நாகப்பட்டினத்துக்கு அருகே கரையைக் கடக்கும். இதன் காரணமாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ கத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புயல் எச்சரிக்கை கூண்டு
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக 15-ம் தேதி முதல் பலத்த காற்று வீசக் கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மணிக்கு 55 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். தென் தமிழக கடலோரங்களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே சென்னை, கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்க ளில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கடலுக்கு சென்றவர்கள் உடனே கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டங்கள் உஷார்
இதற்கிடையே, புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ஆட்சியர்கள் தலை
மையில் அவசரக் கூட்டம் நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கப் பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர், காவல் கண்காணிப் பாளர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
‘‘புயல் சின்னம் கரையைக் கடக்கும் போது கனமழை பெய்யும் என்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் விடுப்பில் செல்லாமல் தலைமையிடத்தில் தங்கியிருக்க வேண்டும். திருமண மண்டபங்கள், பள்ளி வளாகங்கள் ஆகிய வற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று’ ஆட்சியர் ஆர்.கிர்லோஷ்குமார் அறிவுறுத்தினார்.
கடல் சீற்றம்
கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்
பட்டுள்ளது. 1077 என்ற இலவச தொலை பேசி எண் மற்றும் 04142-220655 என்ற எண்களில் தொடர்புகொண்டு மழை குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியலாம்.
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வியாழக்கிழமை கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மரக்காணம் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதன்கிழமை மாலை தண்டோரா போட்டு மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
காஞ்சிபுரத்தில் நடந்த அவசரக் கூட்டத்தில் பேசிய ஆட்சியர் கா.பாஸ்கரன், ‘‘மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பள்ளி மற்றும் சமுதாயக் கூடங்களில் பாதுகாப்புடன் தங்கவைக்க வேண்டும். அதிகாரிகள் அனைவரின் செல்போனும் அணைக்கப்படாமல் இருக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
புயல் சின்னம் காரணமாக, தமிழகத்தில் வெள்ளிக்கிழமை முதல் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT