Published : 12 Jan 2016 12:02 PM
Last Updated : 12 Jan 2016 12:02 PM

உச்ச நீதிமன்ற நீதிபதி சுய விடுவிப்பு: ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிரான வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்

ஜல்லிக்கட்டு அனுமதிக்கு எதிரான வழக்கில் நீதிபதி ஒருவர் தன்னைத் தானே விடுவித்துக் கொண்டதால்,அதன் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு அமைப்புகள் தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கு தலைமை நீதிபதி சி.எஸ் தாகூர், நீதிபதிகள் பானுமதி, ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (செவ்வாய்கிழமை) விசாரணைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், இந்த அமர்வில் உள்ள நீதிபதி பானுமதி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதியாக பணியாற்றிய காலத்தில் ஒரு வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து தீர்ப்பளித்திருக்கிறார். எனவே, இந்த வழக்கு விசாரணையில் இருந்து அவர் தன்னை விடுவித்துக் கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து வழக்கு விசாரணை வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

தமிழக வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

விலங்குகள் நல வாரியம் மற்றும் பீட்டா சார்பில் இம்மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. ஜல்லிக்கட்டுக்கு நான்கு ஆண்டுகளாக விதிக்கப் பட்டிருந்த தடையை கடந்த 8-ம் தேதி மத்திய அரசு நீக்கியது.

‘கரடி, குரங்கு, புலி, சிறுத்தை, சிங்கம், காளை ஆகியவற்றை காட்சிப் பொருளாகவோ அல்லது அவற்றுக்கு பயிற்சி அளித்து வித்தை காட்டவோ பயன்படுத் தக்கூடாது. இருப்பினும், சமுதாய வழக்கம் மற்றும் பாரம்பரிய நடைமுறைகளின்படி தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கும், மகாராஷ்டிரம், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப், கேரளா, குஜராத் ஆகிய மாநிலங்களில் ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கும் காளைகளைப் பயன்படுத்த அனுமதி அளிக்கப் படுகிறது’ என அறிவித்த மத்திய அரசு, ஜல்லிக்கட்டு நடத்த நிபந்தனைகளையும் விதித்தது.

இந்நிலையில், உச்ச நீதி மன்றத்தில் தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழக அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. “ஜல்லிக் கட்டுக்கு தடைகோரி வழக்கு தொடரப்பட்டால் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் எவ்வித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது” என அம்மனுவில் தமிழக அரசு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x