Published : 29 May 2017 08:31 AM
Last Updated : 29 May 2017 08:31 AM

ஓசூர் வனப்பகுதியில் தந்தத்துக்காக வேட்டையாடப்படும் ஆண் யானைகள்: காடுகள் அழிப்பால் கிராமங்களுக்குள் தறிகெட்டு அலையும் அவலம்

யானைக் கூட்டங்களின் படையெடுப்பால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஓசூர் மற்றும் கோவை வனப்பகுதிகளை ஒட்டிய கிராமங்கள் அல்லோலப் பட்டுக்கொண்டிருக்கின்றன. வன விலங்குகள் வலசை செல்லும் வழித்தடங்களை மனிதக் கூட்டங்கள் ஆக்கிரமித்ததாலும் வறட்சியால் வனங்களுக்குள் தங்களுக்கான உணவும் தண்ணீரும் அற்றுவிட்டதாலும் யானைக் கூட்டங்கள் இப்படி திக்குத் தெரியாமல் சுற்றி ஆளாய் பறக்கின்றன. இந்தச் சூழலில் தமிழக - கர்நாடக எல்லையான ஓசூர் வனப் பகுதிகளில் தந்தத்துக்காக யானைகளை வேட்டைக் குழுக்கள் குறிவைத்து தாக்குவதாக பதறுகிறார்கள் அப்பகுதியின் வன உயிரின ஆர்வலர்கள்.

காவிரியை ஒட்டி தருமபுரி, ஓசூர் வனக் கோட்டங்கள் அமைந்திருக்கின்றன. ஓசூர் வனக்கோட்டத்தில் மட்டும் 36 இடங்களில் யானை வாழ்விடங்கள் உள்ளன. ஒரு காலத்தில் வீரப்பனின் கோட்டையாக இருந்த இந்த வனப் பகுதிகளில் இன்னமும் மரக்கடத்தல்கள் தொடர்கின்றன; கள்ளத்தனமாக மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால் வனங்கள் பொட்டல்காடாகி யானைகள் கிராமங்களுக்குள் படையெடுக்கின்றன.

யானைகளின் தீனிக்காக கேரட்டி வனப் பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 2 ஏக் கரில் சோளம், கேழ்வரகு பயிரிட்ட வனத்துறை, இப்போது அதே இடத்தில், எதற்கும் உதவாத புங்கஞ்செடிகளை நட்டு காடுவளர்ப்புக் கணக்குக் காட்டி இருக்கிறது. யானைகளின் தண்ணீர் தேவைக்காக ஏற்படுத்தப்பட்ட குட்டைகளும் போதிய பராமரிப்பின்றி வறண்டு கிடக்கின்றன.

புளி வேட்டையில் பலியாகும் யானைகள்

புளி மகசூலுக்காக வனத்துக்குள் இருக்கும் புளிய மரங்களைத் தனியாருக்கு குத்தகைக்கு விடுகிறது வனத்துறை. தங்களுக்கு மிகவும் பிடித்தமான தீனி என்பதால் யானைகள் புளியை கொத்துக் கொத்தாக பறித்துத் தின்றுவிடும். இதைத் தடுப்பதற்காக குத்தகைதாரர்கள் துப்பாக்கியால் சுட்டு யானைகளை விரட்டுகிறார்கள். சில நேரங்களில், இப்படிச் சுடும்போது யானைகள் இறந்துவிடும். சில நேரங்களில், யானையை கொல்வதற்காகவே சுடப்படுவதும் உண்டு. இப்படிச் சாகடிக்கப்படும் ஆண் யானைகளில் இருந்து தந்தத்தை திருடி பெங்களூரு கள்ளச்சந்தைக்கு கொண்டுபோய் விடுகிறார்கள்.

ஓசூர் பகுதியில் யானைகளைத் துரத்தும் கிராம மக்கள்.

வேட்டையில் கொல்லப்படுவது ஒருபுற மிருக்க, கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாணமாவு காப்புக்காட்டுப் பகுதியில் இருந்து சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும் யானைகள் இறந்து போகின்றன. தற்சமயம் சாணமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட யானைகளைக் கொண்ட ஒரு கூட்டம் முகாம் போட்டிருக்கிறது. இவை ஊருக்குள்ளும் தோட்டங்களுக்குள்ளும் புகுந்துவிடாமல் இருக்க கிராம மக்கள் 60 பேர் ஷிஃப்ட் முறையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தங்களைப் பிடித்தால் ‘ரிவார்டு’

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு, நாட்ராம் பாளையத்தைச் சேர்ந்த சிலரை, யானை தந்தங்கள் வைத்திருந்ததாக கர்நாடக போலீஸ் பெங்களூருவில் வைத்து கைது செய்தது. ஆனால், இந்த தந்தங்கள் எடுக்கப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் விசாரணைகூட நடத்தவில்லை. இந்தக் கடத்தலில் தொடர்புடையவர்களுக்கு நெருக்கமானவர்கள் நம்மிடம் பேசும்போது, “கர்நாடக போலீஸ்தான் இங்குள்ளவர்களைக் கூலிக்கு அமர்த்தி முன்பணமும் கொடுத்து யானை தந்தத்தை கொண்டுவரச் சொன்னது. அதை நம்பித்தான் இங்குள்ளவர்கள் யானையை வேட்டையாடி தந்தத்தை எடுத்துச் சென்றனர். ஆனால் அங்கு போனதும், கடத்தல் தந்தங் களைப்பிடித்ததாகச் சொல்லி பிளேட்டை மாற்றிவிட்டனர். யானைத் தந்தங்களைப் பிடித்தால் ‘ரிவார்டு’ கிடைக்கும் என்பதால் கர்நாடக போலீஸார் சிலர் இந்த உத்தியையும் கையாள்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

சேற்றுக்குள் சிக்கிக் கொண்டாலும் சிக்கல்

உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அலைந்து பலவீனப்பட்டுப் போகும் யானைகள், தண்ணீர் தேடிச் செல்லும் இடங்களில் சேற்றுக்குள் சிக்கிக் கொள்வதும் உண்டு. இப்படிச் சிக்கிக்கொள்ளும் யானைகள் இறந்துவிடுவதும் உண்டு. சில நேரங்களில் இவை சமூக விரோதிகளால் தந்தத்துக்காக வேட்டையாடப்படுவதும் உண்டு. கோவை மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மட்டும் கடந்த 4 மாதங்களில், பலவீனமான 6 யானைகள் சகதிக்குள் சிக்கிக் காப்பாற்றப்பட்டுள்ளன.

யானைகள் நடந்து சென்ற கால் தடம்

அழிந்துவரும் ஆண் யானைகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆண் யானை - பெண் யானை விகிதாச்சாரமானது கர்நாடகத்தின் நாகர் ஹோலே சரணாலயத்தில் 1:5, தமிழகத்தின் முது மலை சரணாலயத்தில் 1:25, கேரளத்தின் பெரியார் சரணாலயத்தில் 1:90 என்ற அளவிலேயே இருந்தது. இப்படி, இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் ஆண் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக குறையக் காரணமே தந்த வேட்டைதான்.

காட்டுயிர் கள்ளச் சந்தையில் முதலிடம்

சர்வதேச கள்ள வணிகத்தில் போதைப் பொருட்கள், ராணுவ தளவாடங்கள் இவற்றுக்கு அடுத்தபடியாக காட்டுயிர் பொருட்கள் முக்கிய இடத்தில் உள்ளன. காட்டுயிர் பொருட்கள் கள்ளச் சந்தையில் யானைத் தந்தம் முதலிடத்தில் இருக்கிறது. தந்தம் வைத்திருப்பதே தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லப்பட்டாலும் பகட்டுக்காக இதை வாங்கி வைப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். முன்பு தந்தமாக வைத்திருந்தார்கள், இப்போது தந்தத்தை அழகிய கலைப்பொருட்களாக மாற்றி கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் வேட்டையாடப்படும் யானை களின் தந்தங்கள் அனைத்துமே வெளிநாடு களுக்கு கடத்தப்படுவதாகத்தான் முன்பு கணிக்கப் பட்டது. ஆனால், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரே சமயத்தில் 20 யானைகள் வேட்டையாடப்பட்ட சம்பவத்துக்கு பிறகு தான், தந்தம் வாங்குபவர்கள் இந்தியாவிலும் இருக் கிறார்கள் என்ற விவரம் தெரியவந்தது. இந்த வழக்கு தொடர் புலனாய்வு செய்யப்பட்டபோது டெல்லியில் மட்டுமே சுமார் 500 கிலோ அளவுக்கு தந்தம் பிடிபட்டது. இதில், தமிழகத்தில் கொல்லப் பட்ட யானைகளின் தந்தமும் இருந்தன.

கோவை பெத்தநாயக்கன்பாளையத்தில் சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் வனத்துறையினர்.

போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை

வேட்டைத் தடுப்பு முகாம்கள் மூலம் வனங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்தாலும் வேட்டைத் தடுப்பு முகாம்களை நவீனப்படுத்துவது, தண்ணீர் வசதிகளைச் செய்து கொடுப்பது உள்ளிட்டவற் றுக்கு போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. பெயரளவுக்கு ஒதுக்கப்படும் நிதியிலும் வனத் துறை அதிகாரிகள் சிலர் ஊடு பாய்ந்துவிடு கிறார்கள். அதேசமயம், கேரளத்தில் இந்த முகாம் கள் போதிய வசதிகளுடன் நவீனப்படுத்தப் பட்டுள்ளன.

மூங்கில், உன்னு, உசிலம், வெட் பாலை, மறுக்காரை, இருவாட்சி, வெட்டாலம், துடுஞ்சி, காட்டு வாழை, பலா, புளி உள்ளிட்ட வையும் புற்களும் யானையின் உணவு ஆதாரங் கள். கடந்த காலங்களில் வனத்துறையின் தவறான முடிவுகளால் நடப்பட்ட அன்னிய மரங்களான சீகை, வேலிக்காத்தான், பார்த்தீனியம், தைலம் ஆகிய மரங்களின் தீவிர விதைப் பரவலால், யானைக்கு தீனி போடும் நமது நாட்டு மரங்கள் பெரும்பாலும் அழிந்துவருகின்றன.

யானை இனத்தைக் காக்க..

வனவிலங்குகளுக்கான இந்திய அறக் கட்டளை அமைப்பு (WTI) நாடு முழுவதும் யானைகளுக்கான 166 வன இணைப்புப் பாதைகளை (elephant corridors) அடையாளம் கண்டுள்ளது. யானைகள் காலம்காலமாக வலசை செல்லும் மரபு வழிப் பாதைகள் இவை. இவற்றில் 88 இணைப்புப் பாதைகள் மட்டுமே தற்போது இருக்கின்றன. இதில் தமிழகம், கேரளா, கர்நாடக மாநிலங்களில் 20 இணைப்புப் பாதைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள யானைகளில் சரிபாதியானவை இந்த 20 பாதைகளைத்தான் வாழ்விடமாக கொண்டுள்ளன. இதில் வேதனை என்னவென்றால் இதிலும் 15 பாதைகள் பல்வேறு ஆக்கிரமிப்புகளில் சிக்கிக்கொண்டுள்ளன.

இத்தனையும் தாண்டி நமக்குக் கிடைக்கும் நல்ல சேதி என்னவென்றால், இப்போது தென் இந்திய யானைக் கூட்டங்களில் வளமான குட்டிகள் இருப்பது தான். யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்துக் கொடுப்பது, அவை வலசை செல்லும் பாதைகளைத் தொந்தரவு செய்யாமல் இருப்பது ஆகியவற்றை செய்தால் மட்டுமே யானை இனத்தை தொடர் அழிவில் இருந்து காக்கமுடியும்.

யானை வேட்டை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

“ஓசூர் வனக் கோட்டத்தில் யானைகள் வேட்டை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது” என்று திட்டவட்டமாக கூறும் கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், “கூடியமட்டும் யானைகளுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீரை வனங்களுக்குள்ளேயே உருவாக்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. வனத்தில் இருக்கும் யானைகள் கிராமங் களுக்குள் நுழைவதையும் சாலைகளைக் கடப்பதையும் மின்வேலிகள் அமைத்து தடுத்து வருகிறோம். அதையும் மீறி கிராமங்களுக்குள் வந்துவிடும் யானைகளை வன ஊழியர்களைக் கொண்டு மீண்டும் காடுகளுக்குள்ளேயே துரத்தி விடுகிறோம்” என்கிறார்.

மரக் கடத்தலையும் யானை வேட்டையையும் தடுக்க முடியாததற்கு வனத்துறை பணியாளர் பற்றாக்குறையும் முக்கியக் காரணம். இன்றைய தேதியில் தமிழக வனத்துறையில் சுமார் 50 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 25 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் இல்லாமல் இருந்த வனவர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தான் 80 பேர் நியமிக்கப்பட்டார்கள். காலியாக உள்ள வனக் காப்பாளர், காவலர் பணியிடங் களுக்கு அதுவும் இல்லை. வேட்டைத் தடுப்புக் காவலர்களாக 6,500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக பணியாளர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். வேட்டை தடுப்பு, தீ அணைப்பு, யானை விரட்டுதல், மரம் நடுதல் என ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளைத் திணிப்பதால் வேட்டைத் தடுப்புக் காவலர்களும் வேதனையில் இருக்கிறார்கள்.

16 மணி நேரம் உண்ணும் யானைகள்

யானைகள் உணவு தேடலுக்கும் அதை உண்டு முடிப்பதற்குமே தங்களது வாழ்நாளின் பெரும்பகுதியை செலவழிக்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு யானைக்கு தினமும் 250 - 300 கிலோ உணவு தேவைப்படுகிறது. இதை உண்டு முடிக்க 16 மணி நேரம் எடுத்துக்கொள்கின்றன.

கோடைகாலத்தில் புல்லின் வேரில் ஊட்டச்சத்து இருப்பதால் அதை விரும்பிச் சாப்பிடும். அதுவே மழைக்காலத்தில் வேரில் மண் இருக்கும். அதை உண்டால் பற்கள் பாதிக்கும் என்பதால் வேரை கத்தரித்துவிட்டு நுனிப் புல்லை மட்டும் உண்ணும். பொதுவாக கோடைகாலத்தில் அவ்வளவாக தீனி கிடைக்காது என்பதால் மரப்பட்டைகளை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்கின்றன. ஒரு நாளைக்கு ஒரு யானைக்கு அதிகபட்சம் 150 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

ஒரு யானையின் சராசரி ஆயுள் 60 - 70 ஆண்டுகள். யானைகள் சுமார் 60 சதவீதம் அளவுக்கு புல்லை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்கின்றன. ஆனால், அண்மைக் காலமாக யானைகளின் வாழ்விடங்களில் புற்கள் அரிதாகிவிட்டன. வனங்களை ஆக்கிரமித்து வரும் லேண்டனா கேமரா (Lantana Camara) எனும் உன்னிச்செடிகள், சீமைக் கருவேலம் உள்ளிட்டவை புற்கள் வளர்ச்சியை தடுத்துவிட்டன.

இதனால், யானைகள் தங்களின் உணவுத் தேவைக்காக விளைநிலங்கள் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்துவிடுகின்றன. வாழ்விடச் சுருக்கம், உணவுத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தாலும் கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் யானைகளின் எண்ணிக்கை ஓரளவுக்கு உயர்ந்திருக்கிறது. அதேசமயம், ஆண் யானைகளின் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது.

குடும்பத்தால் துரத்தப்படும் ஆண் யானைகள்

“மனித இயல்புகளைக் கொண்ட யானைகள், கூட்டம் கூட்டமாகவே வாழ்கின்றன. தாய் யானையும் அதன் குட்டிகளும் சேர்ந்தது ஒரு யானை குடும்பம். பல குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கூட்டம். பல கூட்டங்கள் சேர்ந்தது யானை பெருங்கூட்டம். சராசரியாக ஒரு யானைக் கூட்டம் அதன் இயல்பான வாழ்க்கையை வாழ்வதற்கு 600 - 700 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட காடு தேவைப்படுகிறது. யானைக் குடும்பத்தில் தாய் தான் குடும்பத் தலைவர். ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஆண் யானையானது 10 - 12 வயது வரை மட்டுமே குடும்பத்தோடு சேர்ந்திருக்கும். அதற்குப் பிறகு, அது சார்ந்த குடும்பமே அவற்றைத் துரத்திவிடும். அவை வேறு கூட்டத்தை நோக்கிப் போய்விடும். இப்படி இடம் மாறிப் போவதாலேயே யானைகளுக்குள் மரபணு பரிமாற்றங்கள் நடக்கின்றன” என்கிறார் யானை ஆராய்ச்சியாளரான முனைவர் சி.அறிவழகன்.

வேட்டை நடந்தால் மறைக்கக் கூடாது

“புலிகளைப் போகிற போக்கில் வேட்டையாடி அதன் தடயங்களை எளிதில் அழித்துவிட முடியும். ஆனால், யானைகளை அப்படி வேட்டையாடிவிட முடியாது. கொல்லப்பட்ட யானையின் உடலை மறைப்பது கடினம். கொல்லப்பட்டு 6 மாதங்கள் ஆன பிறகும்கூட அந்த யானையின் தந்தம் திருடப்பட்டதா என்பதைக் கண்டுபிடித்துவிட முடியும். ராஜஸ்தான் சரிஸ்கா சரணாலயத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வனத்துறையினர் ஒவ்வொரு ஆண்டும் பொய்யான தகவல்களைத் தந்து கொண்டிருந்தனர். வல்லுநர் குழு ஆய்வு மேற்கொண்டபோது அங்கே புலிகளே இல்லை என்ற விவரம் தெரியவந்தது. அதுபோல, யானை வேட்டை நடந்தால் வனத்துறையினர் அதை மறைக்காமல் வெளியில் சொல்லி, வேட்டையை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்” என்கிறார்

ஆசிய யானைகளில் சரிபாதி இந்தியாவில்

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள ஆசிய யானைகள் தற்போது இந்தியா உள்ளிட்ட 13 நாடுகளில் உள்ளன. உலகத்தில் உள்ள ஆசிய யானைகளின் மொத்த எண்ணிக்கையில் சரிபாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளன. இந்தியாவில் உள்ள ஆசிய யானைகளில் சரிபாதி தமிழகம், கேரளம், கர்நாடகத்தை உள்ளடக்கிய தென் இந்தியாவில் உள்ளன.

இந்திய மாநிலங்களில் அதிகபட்ச எண்ணிக்கையாக கர்நாடகத்தில் 5,648 6,488 யானைகள் இருப்பதாக 2012-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு சொல்கிறது. அதே ஆண்டில் கேரளத்தில் 5,942 6,422 யானைகளும் தமிழகத்தில் 4,015 யானைகளும் இருந்தன. தமிழகத்தில் உள்ள யானைகளில் பெரும்பகுதி கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி மாவட்ட வனங்களை வாழ்விடமாகக் கொண்டவை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x