Published : 17 Mar 2014 02:54 PM
Last Updated : 17 Mar 2014 02:54 PM
திமுகவில் கட்சித் தலைவர் பணியை செய்யவிடாமல் கருணாநிதியை சில சக்திகள் கட்டுப்படுத்தி வருவதாக மு.க.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
அழகிரி புதுக் கட்சி குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அத்தகைய அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போலவே இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கும் அவரது ஆதரவாளர்கள் வெகுவாக குவிந்திருந்தனர்.
கூட்டத்தில் பேசிய அழகிரி, கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு நியாயமான காரணம் ஏதும் இல்லை என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "திமுகவில் உள்ள ஒரு சில சக்திகள் கருணாநிதியை ஒரு கட்சித் தலைவருக்கான கடமைகளை ஆற்றவிடாமல் கட்டுப்படுத்தி வருகின்றன" என்றார். இது, மு.க.ஸ்டாலின் மீதான மறைமுக தாக்குதல் என்றே கூறப்படுகிறது.
தொடர்ந்து பேசிய அழகிரி, கட்சியில் இருந்து தான் நீக்கப்பட்டதற்கு முன்னர் நடந்த நிகழ்வுகளை தொண்டர்கள் மத்தியில் பட்டியலிட்டார்.
மதுரை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் திமுக உட்கட்சித் தேர்தலில் நடந்த குளறுபடிகளை கட்சியின் ஒரு பொறுப்பாளராகவே தான் சுட்டிக்காட்டியதாகவும் கூறினார்.
கலைஞர் திமுக உதயமாக தயார்!
அழகிரியின் தீவிர ஆதரவாளர்கள், மதுரையில் பல்வேறு பகுதிகளிலும், 'கலைஞர் திமுக (கதிமுக) உதயமாக தயார்' என சுவரொட்டிகள் ஒட்டியிருந்தனர்.
கூட்டத்திற்கு வந்திருந்த ஆதரவாளர்கள், அழகிரியை கட்சியில் இருந்து நீக்கிய திமுகவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்களில் ஒருவர் கூறுகையில், "தனிக்கட்சி ஆரம்பிக்கும் முட்டாள்தனமான முடிவை அழகிரி ஒருநாளும் எடுக்க மாட்டார். மாறாக, அவரது முக்கியத்துவம் குறித்து கட்சி மேலிடத்தை உணரவைப்பார்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT