Published : 16 Oct 2014 08:29 AM
Last Updated : 16 Oct 2014 08:29 AM
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி. பட்டினம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுடும் அளவுக்கு சூழ்நிலை நிலவியதா என்றும், இதில் எஸ்.ஐ சட்டத்தை மீறியுள்ளாரா எனவும் மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெறுகிறது.
போலீஸார் துப்பாக்கியை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 95 முதல் 105 வரை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒருவர் தனது உயிருக்கோ, பொதுச் சொத்துக்களுக்கோ பெரிய அளவில் ஆபத்து ஏற்படும் எனக் கருதினால் துப்பாக்கியை பயன்படுத்தலாம். வேறு வழியே இல்லை என்ற சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்தலாம்.
இந்திய குற்றவியல் சட்டம் 46 (3)ன்படி ஆயுள் தண்டனை, மரண தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு குற்றத்தில் சம்பந்தப்பட்டிருப்பவரை கையாளும்போது அவரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்ற சூழ்நிலையில் துப்பாக்கியை பயன்படுத்தலாம்.
சையது முகம்மது கத்தியால் குத்தியதால் எஸ்.ஐ. சுட்டார் என்றால் கத்தியை அஜாக்கிரதை யாக வைத்திருந்தது எஸ்.ஐ.யின் தவறுதான்.
சையது முகம்மது கத்தியால் குத்த முயற்சிக்கும்போது இதர காவலர்கள் உதவியோடு தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருக்கலாம். அல்லது எதிராளியை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு மட்டுமே துப்பாக்கியை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் எஸ்.ஐ. காளிதாஸ் 3 ரவுண்டு சுட்டுள்ளார். அதில் 2 குண்டுகளில் மார்பை துளைத்துள்ளன. ஒரு குண்டு மார்பை துளைத்திருந்தாலும் சுருண்டு விழுந்துவிடுவர். ஆனால் எஸ்.ஐ, 3 குண்டுகளை பயன்படுத் தியுள்ளதும் பல்வேறு சந்தேகங்க ளுக்கு வழி வகுத்துள்ளது.
இதனால் தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கியை எஸ்.ஐ. சட்டத்தை மீறி பயன்படுத் தியுள்ளாரா என்பது குறித்தும் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி விசாரணை நடத்தி வருகிறார்.
இதுவே முதல்முறை
மதுரை எவிடென்ஸ் அமைப்பின் இயக்குநர் கதிர் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து எங்களது உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தி வருகிறது. எஸ்.ஐ.யின் செயல்பாடு குற்றவாளியை கொல்ல வேண்டும் என்ற மனநிலையில் இருந்துள்ளது தெரிகிறது. இதனால் அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளாரா என தெரியவில்லை. என்கவுண்டர்கள், காவல்நிலையத்தில் அடித்து கொல்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவது வாடிக்கை. ஆனால் தற்போது பணியில் இருந்த எஸ்.ஐ காவல்நிலையத்துக்குள்ளேயே தனது துப்பாக்கியை பயன்படுத்தி விசாரணைக்கு வந்தவரை சுட்டுக் கொன்றது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி முழு உண்மையை கொண்டு வர வேண்டும்.
மக்கள் கண்காணிப்பகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி பிரபாகர் கூறும்போது, ‘‘விசாரணைக்கு வந்தவரை காவல்நிலையத்துக்குள்ளே வைத்து எஸ்.ஐ தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் இதுவே முதல்முறை. இதில் நடந்துள்ள மனித உரிமை மீறல் குறித்து எங்களது குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT