Published : 18 Jan 2017 02:27 PM
Last Updated : 18 Jan 2017 02:27 PM
தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி பாம்பன் ரயில் பாலத்தில் புதன்கிழமை திடீர் ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தும் இப்போராட்டத்துக்கு தமிழ் திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
புதன்கிழமை காலை 8 மணியளவில் பாம்பன் ரயில் பாலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் ஜெரோன் குமார் தலைமையில் முருகானந்தம், செல்வா திருமுருகன், மன்மதன், குட்டிமணி, பாலு ஆகிய ஏழு பேர் கட்சியின் கொடிகளுடன் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட்டோரை பாம்பன் காவல்துறையினர் கைது செய்ததும் அரை மணி நேரம் தாமதமாக பயணிகள் ரயில் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் காலை 11 மணியளவில் தமிழர் தேசிய முன்னனியின் பொதுச் செயலாளர் கண். இளங்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT