Published : 30 Aug 2016 12:10 PM
Last Updated : 30 Aug 2016 12:10 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நீண்ட காலமாக அப்புறப் படுத்தாமல் கிடக்கும் பழைய கழிவுப் பொருட்கள் குவியலால், நோயாளிகளுக்கு எலிகளின் சிறுநீரில் காணப்படும் லெப்டோ ஸ்பைரா பாக்டீரியா மூலம் பரவும் கல்லீரல், சிறுநீரக நோய் ஏற்படும் வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அரசு ராஜாஜி மருத்துவமனையில் புற்று நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை, மருந்தியல் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் வழங்கப்படுவதால், கேரளா மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் வருகை பல மடங்கு அதிகரித் துள்ளது.
இதுதவிர சிறுநீரகம், கல்லீரல், இதயம், எலும்பு அறுவை சிகிச்சை, தலைக்காய சிகிச்சை உள்ளிட்டவைகளுக்கும், இங்கு தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக உயர்தர சிகிச்சை வழங்கப்படுவதால், தென் மாவட்டங்களை சேர்ந்த ஏழை, நடுத்தர மக்களுடைய உயிர் நாடியாக அரசு ராஜாஜி மருத்துவமனை திகழ்கிறது.
இந்த மருத்துவமனையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடு, பழைய உடைந்த கழிவுப் பொருட்கள் மற்றும் குப்பைக் குவியலால், சமீப காலமாக கொசுத்தொல்லை, எலித்தொல்லை மற்றும் குரங்குகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. அதனால், நோயாளிகள் இரவு மட்டுமில்லாது பகல் நேரங்களிலும் நிம்மதியையும், தூக்கத்தையும் இழந்து தவித்து வருகின்றனர். மருத்துவமனை வார்டுகள், வளாகங்களில் பல இடங்களில் பழைய உடைந்த சேர், டேபிள், அட்டைப்பெட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆங்காங்கே நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் மலை போல கிடக்கின்றன. குறிப்பாக புற்று நோய் மருந்தியல் சிகிச்சைத் துறையில் தரைத்தளத்தில் கேண்டீன் எதிரே பல மாதங்களாக பழைய கழிவுப்பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதுபோல, மருத்துவமனை மாடியில் மருத்துவப் பயிற்சி மாணவர்கள் தங்கும் விடுதிக்குச் செல்லும் மாடிப்படிகள் அருகே பழைய பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த கழிவுப்பொருட்களின் மறை விடங்கள் எலிகளின் புகலிடமாக இருக்கின்றன. கொசுக்கள் உற்பத்தியாகவும் வசதியாக இருக்கிறது. அதனால், எலிகள், கொசுக்கள் மூலம் லெப்டோ ஸ்பைரோசிஸ், டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், நோய்கள் குணமாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், கொசுத் தொல்லையால் மீண்டும் நோய்களை பெற்றுச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்ஆர். வைரமுத்துராஜூவிடம் கேட்டபோது, பழைய பொருட்களை ஏலம் விடும் நடைமுறை இருக்கிறது. ஏலம்விட்ட பொருட்களை எடுத்துச் செல்லாமல் உள்ளனர். அவற்றை அப்புறப்படுத்தவும் முடியாது. ஏலம் எடுத்தவர்கள் விரைந்து எடுத்துச் செல்லும்படி எச்சரிக்கப்படுவர் என்றார்.
எலி கடித்து நோயாளி இறந்த அவலம் திரும்புமா?
இதுகுறித்து மருத்துவர்கள் சிலர் கூறியதாவது: நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் சிகிச்சை பெற வருகின்றனர். கழிவுப் பொருட்கள் குவிந்து கிடப்பதால் ஒட்டடை அதிகரித்து தூசி பரவும். இதனால், நுரையிரல் பாதிப்பு, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக வரும் நோயாளிகளுக்கு பாதிப்பு மேலும் தீவிரமடைகிறது. கழிவுப்பொருட்கள், குப்பைக் கூழங்களில் நன்னீர் தேங்கினால், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு பரவவும் வாய்ப்புள்ளது. எலியின் சிறுநீரில் லெப்டோ ஸ்பைரா என்னும் கல்லீரல், சிறுநீரகங்களை பாதிக்கும் பாக்டீரியா உள்ளது. கழிவுப் பொருட்களில் பதுங்கும் எலிகள் அதில் சிறுநீர் கழித்தால் நோயாளிகளுக்கு அந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. கடந்த காலத்தில் சென்னையில் எலி கடித்து நோயாளிகள் இறந்தது போன்ற நிலைமை ஏற்படும் முன், மருத்துவமனையில் எங்கெங்கு கழிவுப் பொருட்கள் குவிந்து இருக்கிறதோ அவற்றை அகற்ற மருத்துவமனை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT