Published : 21 May 2017 02:32 PM
Last Updated : 21 May 2017 02:32 PM
‘ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஆளுக்கு ஒரு மரம் நடவேண்டும். அதை சூழல் கெடாமல் பேணிக் காக்க வேண்டும்’ என்று அப்துல் கலாம் அறிவுறுத்தியதால் மரக் கன்றுகள் நடுவதற்கான மூங்கில் கூடைகள் உற்பத்தி பெருகியுள்ளது.
மரங்கள் நடுவது குறித்தும், சூழல் காப்பது குறித்தும் சமீப காலங்களில் மக்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அப்படி மரக்கன்றுகள் நடுபவர்கள் அதற்கான வேலியை பிளாஸ்டிக் இரும்புக் கம்பிகளால் போட்டு சூழல் கேட்டை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில் உருவாகி வருகிறது மூங்கிலால் செய்யப்பட்ட நாற்றுக்கூடைகள். இதன் பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கிறார்கள் கோவை, வடமதுரை அருகே இத்தகைய மூங்கில் கூடைகளை தயாரித்து விற்பனை செய்யும் கவிதா, வெங்கடேஷ். இவர்கள் நடத்தும் மூங்கில் கடையில் 12 பேர் வேலை செய்கிறார்கள். ஆயிரக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன மூங்கில் கூடைகள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மூங்கில் கூடை தொழிலை செய்தபோது கோழி அடைக்கும் கூடைகள், ஆடுகள் அடைக்கும் பட்டிக்கூடைகள், சாணம் அள்ளும் கூடைகள் போன்றவையே வாடிக்கையாளர்களால் வாங்கப் பட்டது. அப்போது செடிநாற்றுக் கூடை என்று ஒன்று இல்லை.
மரம் நட மக்களை அப்துல்கலாம் அறிவுறுத்திய பின்னர்தான் இந்த ரக கூடை உற்பத்தி பிரதான இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து கவிதா வெங்கடேஷ் கூறியதாவது: ‘அப்துல்கலாம், ஜெயலலிதா போன்ற தலைவர்கள் பிறந்த நாட்களில் செடிகள் நட, இந்த கூடைகளை ஆயிரக்கணக்கில் வாங்குகிறார்கள். இப்போது மழை இல்லாததால் பெரிதாக வியாபாரம் இல்லை. என்றாலும், இந்த ஆண்டு நல்ல மழை இருக்கும் என்று சொல்வதால்,
இந்த கூடைகளுக்கு ஏராளமானோர் ஆர்டர் கொடுத்து வருகிறார்கள். 3 அடி தொடங்கி 6.5 அடி உயரம் வரையுள்ள கூடைகள் ரூ.60 முதல் ரூ. 160 வரை விற்கிறது. இதில் 6.5 அடி உயரக் கூடையை பயன்படுத்தினால் ஒரு நாற்று வளர்ந்து மரம் ஆகும் வரை உபயோகமாக இருக்கும். தரமான தடுக்குக் கூடைகளாக இருப்பதால் திருப்பூர், ஈரோடு, சேலம், சங்ககிரி, தருமபுரி, சென்னை என வெளி மாவட்டங்களிலிருந்தும் வாங்கிச் செல்கிறார்கள். வாகன செலவு கட்டுப்படியாவதில்லை என்பதால், சென்னைக்கு வந்து செய்து தரச் சொல்லி ஆர்டர் தந்திருக்கிறார்கள் சிலர் என்றார்.
இந்த கூடைகள் ஓடை மூங்கில், கல்லு மூங்கில் எனப்படும் சிறிய மூங்கில் மர வகைகளால் தயாரிக்கப்படுகிறது. ஒரு கட்டு விலை ரூ. 600. கேரளாவின் அடிமாலி, பெரும்பாவூர், சாலக்குடி பகுதிகளிலிருந்து தருவிக்கப்படுகிறது. கேரள வனத்துறை மட்டுமே இந்த ரக மூங்கிலை ஏலம் விடுகிறது. தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு போளுவாம்பட்டி, ஆனைமலை, பரம்பிக்குளம் வனப் பகுதிகளில் இந்த மரங்களை வெட்ட ஏலம் விடப்பட்டது. பிறகு தடை செய்யப்பட்டுள்ளது. இங்கே முன்பு போல் மூங்கில்கள் கிடைத்தால் தொழில் சிறக்கும், உற்பத்தி பெருகும் என்று தெரிவிக்கிறார்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT