Published : 09 Feb 2017 07:23 PM
Last Updated : 09 Feb 2017 07:23 PM
அதிமுகவில் சசிகலா, பன்னீர்செல்வம் மோதல் அரசியல் நோக்கர்கள் பலரையும் 1987-88 ஆம் ஆண்டு அரசியல் சூழ்நிலைக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் மறைவுக்கு பின்பு உருவான ஜா, ஜெ அணி கோஷ்டி விவகாரத்தில் ஜெயலலிதா மூப்பனாரை முதல்வராக்க திட்டமிட்டு செயலாற்றியதாகவும் காங்கிரஸார் தெரிவிக்கிறார்கள்.
எம்ஜிஆர் டிசம்பர் 24, 1987 அன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின் யார் முதல்வராவது என்று அதிமுகவில் சர்ச்சை எழுந்தது. ஆர். எம். வீரப்பனின் ஆதரவுடன் எம்ஜியாரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார். ஆனால் அதை ஜெ. ஜெயலலிதா ஏற்கவில்லை. 132 சட்ட மன்ற உறுப்பினர்கள் கொண்ட அதிமுகவில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர், மற்றவர்கள் ஜானகியை ஆதரித்தனர். 8 வது சட்டப்பேரவைத் தலைவர் பி. எச். பாண்டியனும் ஜானகியை ஆதரித்தார். ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையிலிருந்து நீக்கினார். இதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்னர் 1986 இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியலமைப்பு சட்ட நகலை எரித்தற்காக இதே போன்று அவையிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.
எனவே சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 234 இல் இருந்து 191 ஆகக் குறைந்ததிருந்தது. புதிய அரசின் மீது ஜனவரி 26, 1988 இல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. திமுக, இந்திரா காங்கிரசு உள்ளிட்ட எதிர்கட்சிகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களுக்கும் ஜானகி ஆதரவு உறுப்பினர்களுக்கும் இடையே சட்டமன்றத்தில சச்சரவு ஏற்பட்டது. அவைத் தலைவர் ஜெயலலிதா தரப்பு
உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். ஜானகி அதில் வெற்றி பெற்றார்.
இருந்தாலும் வாக்கெடுப்பின் போது அவையில் நடைபெற்ற குழப்பங்களை காரணம் காட்டி இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு ஜானகியின் அரசைக் கலைத்து தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியது. அதிமுக இரண்டாகப் பிளவு பட்டது. தேர்தல் ஆணையம் இரு கட்சிகளையும் அதிகாரப்பூர்வமான அதிமுகவாக ஏற்க மறுத்து, அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது. அதிமுக அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், அதிமுக (ஜெ) அணிக்கு சேவல் சின்னமும் வழங்கப்பட்டன.
எந்த அதிமுக அணிக்கு ஆதரவளிப்பது என்ற பிரச்சனையில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ஜி. கே. மூப்பனார் தலைமையில் செயல்பட்ட இந்திரா காங்கிரசிலிருந்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற புதுக் கட்சி தொடங்கினார். இதுவெல்லாம் அப்போது எழுதப்பட்ட தமிழக அரசியல் வரலாறு. இதையெல்லாம் தாண்டி உள்ளே மூப்பனாரை முதல்வராக்குவது என்ற திட்டத்துடனே ஜெ அணி செயல்பட்டது என்ற கருத்தை காங்கிரஸார் கூறுகின்றனர்.
காங்கிரஸின் முன்னாள் மூத்த நிர்வாகி ஒருவர் இது சம்பந்தமான விஷயங்களை தி இந்துவிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போதைய ஆளுநர் ஜானகி தனது ஆதரவாளர்கள் பட்டியலை கொடுத்த பின்பு சட்டப்பேரவையில் அவர் பெரும்பான்மை நிருபிக்குமாறு கூறியிருந்தார். அப்படி சட்டப்பேரவையில் பெரும்பான்மை நிருபிக்க வேண்டிய நாளுக்கு முந்தைய நாள் இரவு ஜெயலலிதா மூப்பனாரிடம் பேசி, என்னிடம் உள்ள 33 பேர் ஆதரவை உங்களுக்கு தந்து முதல்வர் நாற்காலியில் அமர்த்துகிறேன். அதற்காக நீங்கள் சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிராக வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விஷயம் ராஜீவ் காந்தியிடமும் தெரிவிக்கப்பட்டது.
நீண்டகாலத்திற்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் மந்திரிசபை வாய்ப்பு வருகிறது. எனவே இதை கவனத்தில் கொள்ளலாம் என்று மூத்த நிர்வாகிகளால்எடுத்து சொல்லப்பட இந்த முடிவினை ஏற்றுக் கொண்டு வாக்களிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ரகசிய கூட்டம் அன்றிரவே நடந்தது. இந்த விஷயத்தை வெளியில் தெரிவிக்கக்கூடாது என்பதும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. ஆனால் சிவாஜிகணேசனின் ஆதரவு 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு ஏற்பாட்டில் உடன்பாடில்லை.
குறிப்பாக அப்போதைய காங்கிரஸ் பிதாமகர்களான துளசி ஐயா வாண்டையார், ஆர்.வெங்கட்ராமன் போன்றோர் ‘மூப்பனார் எக்காரணம் கொண்டும் வரக்கூடாது; சிவாஜிகணேசன்தான் வரவேண்டும்!’ என்று தீர்மானமாக இருந்தார்கள். இதில் சிவாஜி கணேசனின் தீவிர விசுவாசியான இவிகேஎஸ் இளங்கோவன் (அப்போது எம்எல்ஏ) ஆர்.எம். வீரப்பன் அணியில் இருந்த தன் அன்னை சுலோசனா சம்பத்திடம் காங்கிரஸார் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்குப்போட உள்ள விஷயத்தை தெரிவித்துவிட்டார்.
இந்த தகவலை ஆர்எம்வீக்கு சுலோசனா தெரிவித்துவிட இந்த திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று திட்டமிடுகிறது ஜானகி அணி. அதன்படி சிவாஜிகணேசன் தலைமையில் உள்ள 10 எம்எல்ஏக்கள் ராஜினமா செய்தால் (அப்போது சபையில் காங்கிரஸ் பலம் 61 உறுப்பினர்கள்) அவையின் பலம் குன்றி நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெற்றுவிடும் என்று முடிவு செய்கிறார்கள். அப்போது ஜானகி அணியில் இருந்தவர்தான் சபாநாயகர் பி.எச். பாண்டியன். சபை கூடியதும் ராஜசேகர், வி.ஜி.செல்லப்பா உள்ளிட்ட 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதாகவும் அதை சபை ஏற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கிறார் சபாநாயகர்.
அப்போது காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் உ.சுப்பிரமணியம். அவர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பொறுப்புத் தலைவர் என்ற முறையில் எம்.எல்.ஏ யசோதா, ‘உங்களிடம் நேரில் வந்து குறிப்பிட்ட எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்தார்களா?’ என்ற கேள்வி எழுப்புகிறார். பதிலுக்கு சபாநாயகர், ‘அவர்கள் தந்தி கொடுத்துள்ளார்கள். அது காலை 7 மணிக்கு என் கையில் கிடைத்துள்ளது!’ என அறிவிக்கிறார். யசோதா விடாமல், ‘அரசியல் சாசனசட்டப்படி ராஜினாமா கடிதத்தை நேரில் வந்துதான் ஒரு எம்எல்ஏ கொடுக்க வேண்டும். தந்தியை ஏற்றுக் கொள்ளலாகாது!’ என குறிப்பிடுகிறார். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் எழுகிறது.
அதையடுத்து சபை கூடும் போது கூடும்போது, ‘தற்போது நேரில் வந்து குறிப்பிட்ட எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார்கள். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது!’ என அறிவிக்கிறார் சபாநாயகர். மீண்டும் சபையில் கூச்சல் குழப்பம் எழுகிறது. திரும்ப சபை மாலை 3.30 மணிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு வரப்பட்ட உணவை சாப்பிட்டு வெளியே செல்லாமல் காத்திருக்கிறார்கள். மதியம் 3 மணிக்கு முன்பே அதிமுக ஜானகி அணி எம்எல்ஏக்கள் பேரவைக்கு வந்துவிடுகிறார்கள்.
அதையடுத்து குறிப்பிட்ட மார்ஷல் யூனிபார்ம் அணிந்த காவலர்கள் கதவருகில் இறக்கப் படுகிறார்கள். சபைக்கதவுகள் மூடப்படுகிறது. அதற்குப்பிறகு உள்ளே வர முயற்சித்த எம்எல்ஏக்கள் தடுக்கப்படுகிறார்கள். 3.30 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. வெற்றியும் பெறுகிறது. அதில் வெளியே சென்ற எம்எல்ஏக்களை உள்ளே விடாதது குறித்து கேள்வி கேட்ட யசோதா எம்எல்ஏவுக்கு அடி விழுந்து மண்டை உடைகிறது. பிரச்சனை கிளம்புகிறது.
பேரவை மாடத்தில் பார்வையாளராக மூப்பனார் உள்ளிட்டவர்கள் இதைப்பார்த்து பதறுகிறார்கள். வெளியே இருந்த எம்எல்ஏக்களும் பிரச்சனையில் ஈடுபடுகிறார்கள். தொடர்ந்து நியாயம் கேட்டு சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள் எதிரணி எம்எல்ஏக்கள். தொடர்ந்து காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகைக்கு சென்று முறையிடுகிறார்கள். இரவு 10 மணிக்கு ஆளுநர் சட்டப்பேரவையில் நடந்த விவரங்களை குறிப்பிட்டு ரிப்போர்ட் அனுப்புகிறார். சட்டப்பிரிவு 356 பிரிவின்படி பேரவையை கலைக்க ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கிறார். சட்டப் பேரவை கலைக்கப்பட்டது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT