Published : 14 Jul 2016 01:51 PM
Last Updated : 14 Jul 2016 01:51 PM

துப்புரவு பணியாளர்களுக்கு தினமும் ஊக்கத் தொகை: குப்பை சேகரிப்பை ஊக்கப்படுத்த மதுரை மாநகராட்சி புதிய திட்டம்

மதுரை மாநகராட்சியில் குப்பை சேகரிப்பை ஊக்கப்படுத்த துப்புரவு பணியாளர்களுக்கு மக்கா குப்பையை விற்று, அதில் கிடைக்கும் பணத்தை ஊக்கத்தொகையாக வழங்கும் புது சுகாதாரத்திட்டம் விரைவில் அமல்படுத்தப் படுகிறது.

மக்கள்தொகை பெருக்கத்தால் குப்பை இன்று மிகப்பெரிய பிரச்சினையாக நாட்டில், சர்வதேச அளவில் உருவெடுத் துள்ளது. வீட்டில் 2 அல்லது 3 நாட்கள் குப்பைகள் தேங்கினால் வீடே துர்நாற்றம் வீசத் தொடங்கும். அதுவே ஒரு கிராமத்தில் அப்புறப்படுத்தாமல் இருந் தால் ஊரே அசுத்தமாகும்.

தற்போது நகர்புறங்களில் குப்பைகளைக் கொட்ட இடமின்றி தெருக்கள், சாலைகள் ஏரிகள், குளங்கள், ஆறுகள் மற்றும் காலி இடங்களில் கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் மாசடைந்து, எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், குப்பைகளை அப்புறப்படுத்த தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் புதிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மதுரை மாநகராட்சியில் குடியிருப்புச் சங்கங்களுடன் சேர்ந்து, ஜூலை 1 முதல் 15-ம் தேதி வரை குப்பைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. கோவை மாநகராட்சியில் குப்பையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க 2 வார்டுகளில் பரிசோதனை முறையில் மக்கும், மக்காத குப்பை களை தனித்தனியாக பிரித்து மக்காத குப்பைகளை விற்றும், மக்கும் குப்பை களை உரமாகவும், பயோ கேஸ் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. மக்கா குப்பையை விற்கும் தொகை, துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக பகிர்ந்து வழங்கப்படுகிறது.

அதேபோல, மதுரை மாநகராட்சியிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த அதிகாரிகள் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து கோவை மாநகராட்சியில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் தனியார் திட்ட ஆலோசகர் சுரேஷ் பண்டாரி கூறி யதாவது:

ஒரு நாளைக்கு ஒரு வீட்டில் 700 கிராம் முதல் 1.7 கிலோ குப்பைகள் சேகரமாகிறது. வீடுகளில் இந்த குப்பைகளை மக்கும், மக்கா குப்பையாக பிரித்துக் கொடுக்க மாட்டார்கள். அப்படியே பிரித்துக் கொடுத்தாலும் துப்புரவு பணியாளர்கள் குப்பை வண்டியில் மொத்தமாகத்தான் போடுவார்கள். இந்தக் குப்பைகளை மொத்தமாக உரக்கிடங்கில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. சேகரிக்கும்போது மக்கும் குப்பை, மக்கா குப்பையாக தனித்தனியாக பிரித்தே சேகரித்தால் மாநகராட்சிக்கு 50 சதவீதம் துப்புரவுச் செலவு குறைய வாய்ப்புள்ளது. குப்பைகளை பொறுத்தவரை காகிதம், பிளாஸ்டிக் குப்பை, துணி, பாட்டில், ரப்பர் மற்றும் நாப்கின் உள்ளிட்டவை முக்கியமானவை.

கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, வீடுகளில் வாங்கும்போதே இந்த குப்பைகளை 6 வகையாக பிரித்து தள்ளுவண்டியில் சேகரிக்கின்றனர். துப்புரவு பணியாளர்களை பார்த்து, தற்போது பொதுமக்களும் அங்கு குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பையாக பிரித்து வழங்க தொடங்கிவிட்டனர்.

வீடு, வீடாக துப்புரவு பணியாளர்கள் மூலம் பேட்டரி வாகனங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. மக்கா குப்பைகளில் பிளாஸ்டிக், பாட்டில், ரப்பர் மற்றும் பிற பொருட்களை மறு சுழற்சிக்கு விற்று அதில் கிடைக்கும் தொகையை, துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக பகிர்ந்து வழங்குகின்றனர்.

குப்பைகளை தனித்தனியாகப் பிரிக்க துப்புரவு பணியாளர்களுக்கு ரப்பரால் ஆன கையுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கையுறைகள் குப்பைகளின் ஈரத்தை உறிஞ்சாது. கைகள் வியர்த்துக் கொட்டாது. பாட்டில், ஊசி, பிளேடு போன்றவை கைகளில் பட்டாலும் காயம் ஏற்படுத்தாதது.

ஊக்கத் தொகை கிடைப்பதால் துப்புரவு பணியாளர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் பணிபுரிகின்றனர். அதனால், இந்த 2 வார்டுகளும் தூய்மையான குடியிருப்பு பகுதியாக மாறி உள்ளன. முதலில், இந்த திட்டம் சாத்தியமா என அனைவரும் யோசித்தனர்.

தற்போது வெற்றிகரமாகச் செயல்படுவதால் மதுரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மண்டலத்துக்கு ஒரு வார்டு தேர்வு

மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் யசோதா கூறியதாவது: தற்போது கோவையை போல மதுரை மாநகராட்சியிலும் பரிசோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மண்டலத்துக்கு ஒரு வார்டை தேர்வு செய்து, விருப்பமுள்ள குடியிருப்பு பகுதிகளில் தன்னார்வ நிறுவனங்களுடன் சேர்ந்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சியில் தினமும் 600 டன் குப்பைகள் சேகரமாகின்றன. இந்தத் திட்டம் சிறப்பாக, வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால் 100 வார்டுகளிலும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும். விரைவில் குப்பைகளை கையாளும் தொழில்நுட்பம், அதற்குத் தேவையான உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x