Published : 30 Mar 2014 11:22 AM
Last Updated : 30 Mar 2014 11:22 AM
சென்னையில் உள்ள 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் முதல் நாளான நேற்று டிராபிக் ராமசாமி உட்பட 9 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் சனிக்கிழமையன்று தொடங்கியது. காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரையில் வேட்பாளர்களின் மனுக்கள் பெறப்பட்டன. சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் நேற்று மொத்தம் 9 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
வடசென்னை தொகுதி
சென்னை பேசின்பிரிட்ஜில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி லட்சுமியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை வேட்பாளர் நிஜாம் முகைதீன், சோசலிஸ்ட் யூனிடி சென்டர் ஆப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சி வேட்பாளர் வி.சிவக்குமார்(50) ஆகியோர் மனுதாக்கல் செய்தனர்.
தென் சென்னை தொகுதி
தென் சென்னை தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் அடையாரில் உள்ள தெற்கு வட்டார இணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. சோசலிஸ்ட் யுனிடி செண்டர் ஆஃப் இந்தியா (கம்யூனிஸ்ட்) கட்சியின் வேட்பாளர் எஸ்.கணேஷ், லோக் சத்தா கட்சியின் வேட்பாளர் ஏ.ஜெய்கணேஷ், சுயேச்சையாக போட்டியிடும் மக்கள் பாதுகாப்பு கழக தலைவர் டிராபிக் ராமசாமி மற்றும் ஜெய் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் குப்பல் ஜி.தேவதாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
மத்திய சென்னை
மத்திய சென்னை தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல், செனாய் நகரிலுள்ள சென்னை மாநகராட்சியின் மத்திய வட்டார அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கியது. தமிழக தலித் கட்சியைச் சேர்ந்த தயா. கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) எஸ்.டி. கிருஷ்ணகுமார், சுயேட்சை வேட்பாளராக எஸ். கந்தசாமி ஆகியோர் தேர்தல் அதிகாரியான ஜி.கே. அருண்சுந்தர் தயாளனிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
டெபாசிட் தொகையாக 5000 ஒரு ரூபாய் நாணயங்கள்
ஜெய் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் நிறுவனத் தலைவர் குப்பல் ஜி.தேவதாஸ் சுயேச்சை வேட்பாளராக தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். அடையாறில் உள்ள மாநகராட்சி தெற்கு வட்டார அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்திருந்தார். தனது டெபாசிட் தொகையில் ஒரு பகுதியாக 5000 ஒரு ரூபாய் நாணயங்களை ஒரு வாட்டர் கேனில் கொண்டு வந்திருந்தார். எல்லாம் புத்தம்புது நாணயங்கள். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திருப்பதிக்கு வேண்டி ஒவ்வொரு நாளாக சேர்த்ததாக கூறினார்.
ஒரு தனி அறையில் பெரிய மேசைக்கு நாணயங்களை அதிகாரிகள் கொண்டு சென்றனர். பரபரப்பான தேர்தல் பணிகளுக்கு நடுவில், 5000 ஒரு ரூபாய் நாணயங்களை சிரமப்பட்டு எண்ணி முடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT