Published : 03 Jun 2016 03:10 PM
Last Updated : 03 Jun 2016 03:10 PM

நெல்லுக்கான ஆதரவு விலை: மத்திய அரசின் அறிவிப்பால் காவிரி டெல்டா விவசாயிகள் ஏமாற்றம்

நடப்பு காரீப் பருவத்துக்கு மத்திய அரசு அறிவித்துள்ள நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது, விவசாய விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் தேசிய விவசாயிகள் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையம் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை குறித்த பரிந்துரையை 2006-ல் அளித்தது.

அதில், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50 சதவீத லாபம் சேர்த்து கொள்முதல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தும், இந்த பரிந்துரையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செயல்படுத்தவில்லை.

இதைத் தொடர்ந்து 2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை செயல்படுத்துவோம் என அறிவித்தது. இந்நிலையில், நடப்பு காரீப் பருவத்துக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை சன்ன ரகத்துக்கு குவின்டாலுக்கு ரூ.1,450-ல் இருந்து ரூ.60 சேர்த்து ரூ.1,510 எனவும், பொது ரகத்துக்கு ரூ.1,410-ல் இருந்து ரூ.60 சேர்த்து ரூ.1,470 எனவும் கொள்முதல் விலையை நிர்ணயம் செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘தி இந்து’விடம் கூறியது: இந்தியாவில் அதிகபட்சமாக 440 லட்சம் ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெறுகிறது. மத்திய அரசு இலக்காக நிர்ணயித்துள்ள 2016-17-க்கான மொத்த உணவு தானிய உற்பத்தியான 270 லட்சம் டன்னில், அரிசி மட்டுமே 108 லட்சம் டன்.

பாஜக அரசு தனது தேர்தல் வாக்குறுதிப்படி நெல்லுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. தேசிய விவசாயிகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி, குறைந்தபட்சம் நெல்லுக்கு குவின்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். விலையை உயர்த்தினால், வெளி மார்க்கெட்டில் விலைவாசி உயரும் என அரசு கருதினால், நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மத்திய அரசு நேரடி மானியமாக ஏக்கருக்கு ரூ.20,000 வழங்கி, நெல்லுக்கான விலையை ஈடு செய்ய வேண்டும். ஆதாயமான விலை கிடைக்கவில்லையெனில் நெல் சாகுபடி தொடர்ந்து சரிவையே சந்திக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x