Published : 09 Dec 2013 12:00 AM
Last Updated : 09 Dec 2013 12:00 AM

சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது இன்று முதல் நடவடிக்கை

சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது. நகரின் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தப்படும் என்று போக்குவரத்து கூடுதல் ஆணையர் கருணாசாகர் தெரிவித்துள்ளார்.

கார் ஓட்டுபவர்களும், முன் சீட்டில் இருப்பவர்களும் சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவதால் சிறிய விபத்துகளில் கூட காயம், உயிரிழப்பு ஏற்படுகிறது. அவரை நம்பி பயணம் செய்பவர்களுக்கும் பேராபத்து ஏற்படுகிறது. டெல்லி போன்ற நகரங்களில் சீட்பெல்ட் அணியாத ஓட்டுநர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னையிலும் இந்த நடைமுறையை கட்டாயமாக்க போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 2013-ம் ஆண்டில் சென்னையில் நடந்த கார் விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 11 பேர் ஓட்டுநர்கள். 6 பேர் முன்னால் அமர்ந்து பயணம் செய்தவர்கள். இதுபோன்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக சென்னையில் கார் ஓட்டுபவர்களும் முன்னாள் அமர்ந்து பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கருணாசாகர் கூறியதாவது:

கடந்த ஒரு மாதமாக சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். 100 இடங்களில் விழிப்புணர்வு டிஜிட்டல் போர்டுகளும் வைக்கப்பட்டுள்ளன.

இன்று முதல் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதிக்கப் போகிறோம். முதல்முறை சீட்பெல்ட் அணியாமல் கார் ஓட்டினால் ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும். அதன் பிறகும் சீட்பெல்ட் அணியாத ஓட்டுநர்கள் ஒவ்வொரு முறையும் ரூ.300 அபராதம் செலுத்த வேண்டும். சீட் பெல்ட் வசதி இல்லாத வாகனம் இருப்பதில்லை. அப்படி இருந்தால் உடனே வாங்கி மாட்டிக் கொள்ள வேண்டும்.

ரூ.150-க்கு கூட சீட் பெல்ட் கிடைக்கிறது. இந்த கண்டிப்பான நடவடிக்கைகள் தங்கள் பாதுகாப்புக்காகத்தான் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கெனவே பணியில் உள்ள போக்குவரத்து காவலர்கள்தான் சீட்பெல்ட் சோதனையிலும் ஈடுபடவுள்ளனர். இதற்காக கூடுதல் ஆட்கள் யாரும் நியமிக்கப் படவில்லை. காவல் துறையினர் சோதனை செய்யும் குறிப்பிட்ட சில இடங்களை பலர் அறிந்து வைத்துள்ளனர். அதில் மட்டும் விதிமுறைகளை பின்பற்றி விட்டு, மற்ற இடங்களில் சாதாரணமாக செல்கின்றனர். எனவே, எவரும் எதிர்பாராத இடத்திலும் வாகன சோதனை நடத்தப்படும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x