Published : 19 Jun 2017 09:29 AM
Last Updated : 19 Jun 2017 09:29 AM
ஏகாம்பரநாதர் கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி ஏகாம்பரநாதர் சன்னதி நகராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அடுத்த 2 ஆண்டுகளில் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடவுள்ளது. தற்போது இப்பள்ளியில் சுமார் 70 மாணவர்களும், 5 ஆசிரியைகள், சத்துணவுத் திட்டத்தில் 2 பேர் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் புராதன நகரங்கள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் காஞ்சிபுரத்தில் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏகாம்பரநாதர் கோயிலைச் சுற்றி புதைவடிகால் அமைக் கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் மின்சாரம், தொலைபேசி உள்பட அனைத்து கேபிள்களையும் பூமிக்கு அடியில் கொண்டு செல்லும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளுக்காக இப்பள்ளியை இடிக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து நகராட்சி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இப்பள்ளியை வேறு சில பள்ளியுடன் இணைப்பது குறித்தும் பேச்சு நடைபெறுவதாகத் தெரிகிறது. அவ்வாறு வேறு பள்ளியுடன் இணைக்கப்பட்டால் மாணவர்கள் வேறு பள்ளிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்படும். இப்பள்ளியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
இன்னும் 2 ஆண்டுகளில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய நிலையில் பள்ளிக்கு வந்த இந்த சோதனை பெற்றோரையும் அப்பகுதி மக்களையும் கவலையடையச் செய்துள்ளது. பெற்றோர் தரப்பில் கூறும்போது, “பள்ளியை இடிக்காமல் அதன் சுவற்றை ஒட்டி பூமிக்கடியில் கேபிள்களை புதைக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.
இதுகுறித்து நகராட்சி தலைமைப் பொறியாளர் மகேந்திரனிடம் கேட்டபோது, “இது மத்திய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக கோயிலின் சுற்றுவட்டப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தச் சுற்றுவட்டப் பகுதியில் இப்பள்ளியும் வருகிறது. பள்ளி மாணவர்கள், அங்கு பணி செய்யபவர்கள் பாதிக்கப்படாதவாறு மாற்றுத் திட்டங்கள் வகுக்கப்படும்” என்றார்.
அண்ணா நேசித்த பள்ளி
இப்பள்ளி குறித்து இதில் படித்த பாபு என்பவர் கூறும்போது, “இப்பள்ளியில் படித்து பல மருத்துவர்கள், பொறியாளர்கள் உருவாகியுள்ளனர். பலர் வெளிநாட்டிலும் பணி செய்கின்றனர். இப்பள்ளியை வளர்க்க அறிஞர் அண்ணா பெரும் முயற்சி எடுத்தார். நாங்கள் படிக்கும்போது அடிக்கடி பள்ளிக்கு வந்து பள்ளியின் செயல்பாடுகளை கவனிப்பார். அண்ணா நேசித்த இந்தப் பள்ளியை இடிக்காமல் பாதுகாக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT