Published : 18 Jun 2016 12:08 PM
Last Updated : 18 Jun 2016 12:08 PM
ஈரோடு மாவட்ட மலை கிராமங்களில் செயல்படும் 7 தொடக்கப்பள்ளிகளில் சத்துணவு திட்டம் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தப்படவில்லை. இதனால், இப்பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது காலை உணவும் வழங்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் செயல்படும் 7 தொடக்கப்பள்ளிகளுக்கு இதுவரை சத்துணவு திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படாத நிலை தொடர்கிறது.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாநிலம் முழுவதும் 128 புதிய தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என அரசு அறிவித்தது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 7 பள்ளிகள் தொடங்கப்பட்டன. சத்தியமங்கலம் ஒன்றியத்தில் திக்கரை, தாளவாடி ஒன்றியத்திற்குட்பட்ட செலுமிதொட்டி, அல்லபுர தொட்டி, வைத்தியநாதபுரம், தர்மபுரம், சோளக தொட்டி, ஜெ.ஆர்.எஸ்.புரம் ஆகிய 7 இடங்களில் தொடக்கப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன.
வனப்பகுதியில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் கல்வி பெறுவதற்கு உதவியாக இப்பள்ளிகள் அமைந்தன. இப்பள்ளிகளில் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில், இவை ஓராசிரியர் பள்ளிகளாகவே செயல்பட்டு வருகின்றன.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள் அதிக அளவில் பள்ளிக்கு வரும் நிலையில், அவர்களுக்கு சத்துணவு வழங்கப்படாததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மலைக்கிராம பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் உள்ள நிலையில், அரசின் சத்துணவு இவர்களுக்கு சென்று சேராத நிலை உள்ளது. 3 முதல் 5 கி.மீ தூரம் வரை நடந்து வந்து பாடம் படிக்கும் இப்பள்ளி மாணவர்கள், தங்களது மதிய உணவை வீட்டில் இருந்து காலையிலேயே எடுத்து வர வேண்டியுள்ளது.
இந்த 7 தொடக்கப்பள்ளிகளிலும் சத்துணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்தும் இதுவரை அதற்கு பலன் கிடைக்கவில்லை. பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா தேர்தலின் போது வாக்குறுதி அளித்துள்ள நிலையில், பின் தங்கிய பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு கிடைக்கவும், அதற்கான பணியாளர்களை நியமிக்கவும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது, ‘2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 128 பள்ளிகளிலும் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இரண்டு ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் சத்துணவு கிடைக்காமல் பாதிப்படைந்துள்ளனர். இது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அரசுக்கு அறிக்கை அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்காத நிலை தொடர்கிறது’ என்றனர்.
சத்துணவு மையங்கள் தொடங்கப்படாதது குறித்து தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, ‘தொடக்கப்பள்ளிகளில் சத்துணவு வழங்குவது தொடர்பாக அரசுக்கு தெரிவித்துள்ளோம். ஒப்புதல் கிடைத்ததும் இந்த பள்ளிகளில் சத்துணவு திட்டம் செயல்படுத்தப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT