Published : 21 Jun 2016 07:59 AM
Last Updated : 21 Jun 2016 07:59 AM

மதுரையில் 90 வயது முதியவரை பார்த்து கழிப்பறை கட்டிய கிராமம்: மத்திய அரசு செயலர் பாராட்டு

மதுரை அருகேயுள்ளது அச்சம்பட்டி கிராமம். இவ்வூரைச் சேர்ந்தவர் அழகு(90). இவரது மனைவி அங்கம்மாள்(82). 200 சதுர அடி வீட்டில் வசிக்கின்றனர். தனது வீடு அருகே கழிப்பறை கட்டும் அதிகாரிகள் முயற்சிக்கு அழகு உடனே சம்மதம் தெரிவித்தார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ.12 ஆயிரம் மதிப்பில் கழிப்பறை கட்டும் பணியை அழகு தம்பதியினர் ஈடுபாட்டுடன் மேற்கொண்டனர். பணி முடிந்து 4 மாதங்கள் ஆனதால் பயன்பாடு குறித்து அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அழகு தம்பதி கழிப்பறையை முழுமையாகவும், சுகாதாரமாகவும் பயன்படுத்தி வருவது தெரிந்தது. அழகுவின் ஆர்வத்தை அறிந்த அச்சம்பட்டி கிராமத்தினர் சம்மதித்ததால் ஒரே ஆண்டில் கழிப்பறை இல்லாத 141 வீடுகளில் கட்டப்பட்டுவிட்டது. மொத்தம் 373 வீடுகள் கொண்ட கிராமத்தில் தற்போது 369 வீடுகளில் கழிப்பறை கட்டி பயன்படுத்துகின்றனர். மிகச்சிறிய 4 வீடுகளில் இடம் இல்லாததால், பொதுக்கழிப்பறை அமைத்து தரப்பட்டுள் ளது. இதன்மூலம் 100 சதவீதம் கழிப்பறை பயன்படுத்தும் தூய்மை கிராம விருது இந்த கிராமத்துக்கு வழங்கப்பட்டது.

அழகு தம்பதியின் ஈடுபாடு தூய்மை பாரத திட்ட அதிகாரிகளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. கழிப்பறையுடன் அழகு தம்பதியின் படங்களை தங்கள் துறையின் செயல்பாட்டு குறிப்புகளில் அறிவிப்பாக வெளியிட்டு பாராட்டினர். இதை இத்திட்டத்தை நாடு முழுவதிலும் செயல்படுத்தும் பல்வேறு இயக்கத்தினர், அதிகாரிகள் பார்வையிட்டு அழகுவுக்கு ஒருவாரமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நேற்று அச்சம்பட்டி கிராமத்துக்கு மத்திய அரசின் குடிநீர் வடிகால் மற்றும் துப்புரவுத் துறை செயலர் பரமேஸ்வரன் ஐயர், இயக்குநர் டாக்டர் நீபூன் விநாயக் ஆகியோர் திட்டப்பணிகளை ஆய்வு செய்ய வந்தனர். இவர்கள் முதலில் அழகுவின் வீட்டுக்கு நேரில் சென்று பாராட்டினர்.

அப்போது பரமேஸ்வரன் ஐயர் கூறும்போது, ‘அழகுவின் ஆர்வத்தை வெகுவாகப் பாராட்டுகிறோம். மூத்தவர்களை இதுபோன்ற பழக்கங்களிலிருந்து மாற்றுவது மிக கடினம். ஆனால் அழகு சூழ்நிலையை நன்றாக உணர்ந்தவராக செயல்பட்டு, முன்மாதிரியாக திகழ்ந்தது மற்றவர்களையும் இத்திட்டத்தில் இணைக்க எளிதானது’ என்றார்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன் உள்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், கூடுதல் ஆட்சியர் ரோஹிணி ராம்தாஸ், பஞ்சாயத்து தலைவர் முருகன் ஆகியோர் கூறுகையில், ‘அழகு கழிப்பறையை பயன்படுத்த மாட்டார் எனக் கருதினோம். ஆனால் 100 சதவீதம் பயன்படுத்தி கிராமத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்கிறார். மதுரை மாவட்டத்தில் 220 கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாதவையாகவும் மாற்றியுள்ளோம். சிறப்பு குழுவினர் அதிகாலை 4 மணிக்கே கிராமங்களுக்கு சென்று விசில் அடித்து திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவோரை தடுக்கின்றனர்’ என்றனர்.

அழகு கூறுகையில், ‘கழிப்பறை கட்ட வேண்டும் என அதிகாரிகள் கூறியதும் வீடு அருகே உள்ள திண்ணையை இடித்து இடம் தந்தேன். அதிகாரிகள் கூறியபடி கழிப்பறையை சுத்தமாக பராமரித்து, முழுமையாக பயன்படுத்துகிறேன். இது எங்களுக்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x