Last Updated : 17 Feb, 2017 11:36 AM

 

Published : 17 Feb 2017 11:36 AM
Last Updated : 17 Feb 2017 11:36 AM

பால் கொள்முதல் செய்ய தயக்கம் காட்டுவதேன்? - தரம் குறைந்ததால் கும்பகோணம் பால் கூட்டுறவு சங்கத்துக்கு ஆதரவு குறைந்தது

தங்களது தேவையை நிவர்த்தி செய்துகொண்டு, அதன் மூலம் முன்னேற்றத்தை அடையவும், தொலைநோக்குப் பார்வையுடன் அதே நேரத்தில் தரமான சேவையை பொதுமக்களுக்கு வழங்க தொடங்கப்பட்டதுதான் கூட்டுறவு சங்கம்.

இந்த கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி ஆண்டுதோறும் அதிகரித்தால்தான் அதில் அங்கத்தினர்களாக உள்ளவர்களுக்கு பலன் அளிக்கும்.

கும்பகோணத்தில் தொடங்கப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மட்டும் தன்னுடைய செயல்பாடுகளால் பொதுமக்களிடம் ஆதரவை ஆண்டுதோறும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.

கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் கடந்த 1941-ல் கும்பகோணத்தில் தொடங்கப்பட்டது. கால்நடைகள் மூலம் விவசாயிகள் வருவாய் பெற வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் விவகார எல்லையாக கும்பகோணம் நகரம், வலங்கைமான், நாச்சியார்கோவில், திருவிடைமருதூர், சோழபுரம், சுவாமிமலை, பாபநாசம், தாராசுரம் என 15 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களைக் கொண்டது.

இந்த சங்கத்தில் 34 ஆயிரம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால், தற்போது 1,200 உறுப்பினர்கள் மட்டும் சங்கத்துக்கு பால் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். விவசாயிகளான பால் உற்பத்தியாளர்களிடமிருந்து தினமும் காலை, மாலை இருவேளையும் பால் எடுத்து வர கடந்த 2010-ம் ஆண்டு 95 பால் அளவையாளர்கள் இருந்தனர். தற்போது 73 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பால் கும்பகோணம் கூட்டுறவு சங்கத்தில் குளிரூட்டப்பட்டு பின்னர் கூப்பன், ரொக்கம், நிறுவனங்களுக்கு மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

சிறப்பு தீர்மானம்…

பால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கொள்முதல் செய்யப்படும் பாலில் பத்து சதவீதம் உள்ளூர் விற்பனை செய்து கொள்ளலாம். மீதமுள்ள பாலை கட்டாயம் மாவட்ட கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், கும்பகோணம் பகுதியில் அதிகளவில் குறிப்பிட்ட பிரிவினர் இருப்பதால் பால் அதிகம் தேவைப்படும் என்பதற்காக சிறப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி கடந்த 1992-ல் கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் அனைத்தையும் சங்கத்தின் தேவைக்குப் போக மீதமுள்ள பாலை மட்டுமே மாவட்ட கூட்டுறவு சங்கத்துக்கு அனுப்பி வைக்கலாம் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் எந்த ஒரு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கமும் கொண்டு வராத தீர்மானத்தை கும்பகோணம் சங்கம் முன்மாதிரியாக கொண்டு வந்து திறம்பட செயல்படுத்தி வந்தது.

இதையடுத்து 2000-வது ஆண்டில் தொலைநோக்குப் பார்வையுடன் தினமும் பத்தாயிரம் லிட்டர் பாலைக் குளிரூட்டுவதற்கு வசதியாக குளிரூட்டும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டன.

கும்பகோணத்தில் கொள்முதல் செய்யப்படும் பால் நாட்டு கறவை மாடுகள் மூலம் கிடைக்கும் பாலுக்கு சுவை அதிகம் என்பதால் ஏராளமானோர் இதனை உபயோகப்படுத்தி வருகின்றனர். மேலும், கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிறைச்சாலை, அரசுப் போக்குவரத்துக் கழகம், இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட அனைத்து கோயில்கள், மதராஸாக்களுக்கு தினமும் இங்கிருந்து பால் மொத்த விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பெரும் வருவாய் இழப்பு…

ஆனால், கடந்த சில மாதங்களாக பாலின் தரம் குறையத் தொடங்கியதால் வாடிக்கையாளர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கூட்டுறவு சங்கத்தின் பால் மதிப்பிழந்து வருகிறது. இதற்கு ஆதாரமாக அரசு மருத்துவமனை, மதரஸாக்கள், அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆகியவை கும்பகோணம் கூட்டுறவு சங்கத்திலிருந்து கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திலிருந்து கொள்முதல் செய்துகொள்கின்றனர். இதனால் கும்பகோணம் பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாலின் தரம் குறைந்தது…

இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர்கள் சம்மேளனத்தின் சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.ஜி.ராஜாராமன் கூறியது: 2010-ல் நாள்தோறும் 10,500 லிட்டர் கொள்முதல் செய்து அதில் கும்பகோணம் பகுதியில் 8,500 லிட்டர் விற்பனை செய்தது போக மீதமுள்ள 2 ஆயிரம் லிட்டரை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தோம். பாலை உற்பத்தியாளர்களிடமிருந்து எடுத்து வருவதற்கு இருந்த 95 பேரில், தற்போது 73 பேர் மட்டுமே உள்ளனர். அதேபோல, கும்பகோணம் நகரில் 45 வார்டுகளிலும் பால் விற்பனை செய்ய 35 பேர் இருந்தனர், தற்போது 20 பேர் மட்டுமே உள்ளனர்.

உற்பத்தியாளர்களிடம் ஒரு லிட்டர் பாலை ரூ.26-க்கு வாங்கி, அதை கூப்பன் மூலம் ரூ.35-க்கும், ரொக்க விற்பனையாக ரூ.36-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பாலை தஞ்சாவூருக்கு அனுப்பி வைத்தால் அதே ரூ.26 தான் கிடைக்கும். இதில் லிட்டருக்கு கிடைக்கும் ரூ.9, 10-ல்தான் கூட்டுறவு சங்கத்தின் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதும், சங்கத்தின் வளர்ச்சியும் உள்ளது.

ஆனால், தற்போது உற்பத்தியாளர்களிடமிருந்து வெறும் 5,500 லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாக கணக்கு காட்டுகின்றனர். உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலில் அளவையர்கள் மூலம் தண்ணீர் கலக்கப்படுகிறது. இதனால் பாலின் தரம் குறைந்து வருவதாக கும்பகோணம் பகுதி மக்களும், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கமும் தொடர்ந்து புகார் தெரிவிக்கிறது. சில நேரங்களில் தஞ்சாவூர் சங்கம் பாலை திருப்பி அனுப்பி வைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது.

கணக்கில் காட்டாமல்…

காலையில் பால் கொள்முதல் செய்தால் மாலையில் கொள்முதல் செய்வதில்லை. ஒரு சில அளவையர்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பால், கூட்டுறவு சங்கக் கணக்கில் காட்டப்படாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சங்கத்துக்கு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் லிட்டர் இழப்பு ஏற்படுகிறது. நாளொன்றுக்கு ரூ.30 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.84 லட்சம் இழப்பை நிர்வாகம் ஏற்படுத்துகிறது. இதைக் கண்காணிக்க வேண்டிய பால்வளத் துறை இணை இயக்குநரகம் தஞ்சாவூரில் உள்ளது. அந்த அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் வேதனையைத் தருகிறது என்றார்.

நடவடிக்கை எடுத்து வருகிறோம்…

இதுகுறித்து கும்பகோணம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் என்ஆர்விஎஸ். செந்தில் கூறிய போது, “எங்களது நிர்வாகக் குழு பொறுப்பேற்ற பின்னர் இந்த சங்கத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறோம். அரசு மருத்துவமனையில் சில ஆண்டுகளாக பால் வாங்காமல் இருந்தனர். நிர்வாகக் குழுவினர் நேரில் சென்று இணை இயக்குநரிடம் பேசி மீண்டும் பால் வாங்க வைத்தோம்.

தற்போது அனைத்து மருத்துவமனைக்கும் ஆவின் மூலமே பால் வழங்க வேண்டும் என உத்தரவு வந்ததாகக் கூறி, எங்களிடம் பால் வாங்குவதை நிறுத்திவிட்டனர். இதனால் மருத்துவமனையில் வாங்காததால் மட்டுமே தினமும் ரூ.1000 வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் கடந்த ஆண்டு சங்கம் ரூ.15 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது” என்றார்.

20 டிகிரியைத் தாண்டாத பாலின் தரம்

நாட்டுக் கறவை மாடுகள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலை கும்பகோணம் சங்கத்துக்கு கொண்டுவருகின்றனர். அங்கு சோதனை செய்யப்படும் போது 26 டிகிரி இருக்கும். பின்னர் அந்த பாலை குளிரூட்டும்போது 5 டிகிரி கூடுதலாகி 31 டிகிரி கிடைக்கும். இதுதான் தரமான பால். ஆனால், தற்போது கும்பகோணம் கூட்டுறவு பால் சங்கத்திலிருந்து விற்பனை செய்யப்படும் பாலின் தரம் 20 டிகிரியைத் தாண்டுவதில்லை. உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்பட்டுவரும் பாலில் இடையிடையே தண்ணீர் கலக்கப்படுவதுதான், பொதுமக்கள் அதிருப்தி அடையக் காரணமாக உள்ளது.

சங்க செயல்பாடுகளில் அரசியல் தலையீடு

கறவை மாடு வளர்த்துவரும், பெயர் வெளியிட விரும்பாத விவசாயி கூறியபோது, “நான் 3 மாடுகளை வைத்துப் பராமரித்து வருகிறேன். காலை, மாலை இருவேளையும் பால் அளவையர்கள்தான் பாலைக் கறந்து செல்கின்றனர். காலையில் வந்தால் மாலையில் வருவதில்லை. மாலையில் வந்தால் காலையில் வருவதில்லை. இதனால், சில நேரம் பால் கறந்து வீணாகி வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

விவசாயிகளிடமிருந்து கூட்டுறவு சங்கம் பால் வாங்க அவ்வப்போது மறுக்கிறது. காரணம் கேட்டால் பாலின் தரம் குறைந்து வருகிறது என கூட்டுறவு சங்கத்தில் செல்வதாக பால் அளவையர்கள் கூறுகின்றனர். கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகளில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது. இந்த சங்கம் முறையாகச் செயல்பட்டால்தான் விவசாயிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதில், உள்ள முறைகேடுகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x