Published : 14 Dec 2013 11:23 AM
Last Updated : 14 Dec 2013 11:23 AM

கோவை மேயருக்கு எதிராக 75 கவுன்சிலர்கள்; பின்னணியில் 4 எம்.எல்.ஏ.க்கள்?

கோவை மேயர் வேலுச்சாமி மீது கவுன்சிலர்கள் புகார் கொடுக்கும் படலம் வெள்ளிக்கிழமையும் நீடித்தது. முதல் நாள் 15 என்ற எண்ணிக்கையில் இருந்த அதிருப்தி கவுன்சிலர்கள் 2-ம் நாள் 21 என்ற அளவுக்கு உயர்ந்தது. 3-வது நாள் இந்த அதிருப்திப் பட்டியலில் 75 கவுன்சிலர்கள் வந்துவிட்டதாக அ.தி.மு.க வட்டாரம் தெரிவித்துள்ளது.

சென்னை போயஸ் கார்டனில் வெள்ளிக்கிழமை காலை முதல்வரை இந்தக் குழுவினர் சந்திக்க முயற்சித்தாகவும் அவர் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொள்ள செல்லும்போது மனு வாங்க மாட்டார்; திரும்பி வரும்போது நிச்சயம் மனு வாங்குவார் என்று காத்திருப்பதாகவும் நம்பிக்கையோடு தெரிவித்த கவுன்சிலர்களுடன் பேசினோம். அவர்கள் கூறியது:

யார் மணி கட்டுவது

கடந்த இரு தினங்களாக எங்கள் புகார் மனு குறித்த செய்தி தொடர்ந்து பத்திரிகைகளில் வந்தது எங்களுக்கு சாதகமா பாதகமா என்று தெரியவில்லை. ஆனால் எங்கள் முயற்சிக்கு நிறைய கவுன்சிலர்களிடமிருந்து ஆதரவு வந்து கொண்டேயிருக்கிறது. போன் மூலமும், நேரடியாகவும் ''நாங்கள் வெளிப்படையாக உங்களுடன் இணைந்து போராட முடியவில்லையென்றாலும் எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான், யார் மணிகட்டுவது என்று எதிர்பார்த்திருந்தோம். இப்போது நீங்கள் கட்டி விட்டீர்கள்’ என்று வாழ்த்துக் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

அந்த கணக்குப்படி பார்த்தால், மொத்தமுள்ள 80 அ.தி.மு.க கவுன்சிலர்களில் 75 பேர் எங்கள் தரப்புக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். (கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் மொத்த எண்ணிக்கை 100 பேர்). ஆனால் அவர்கள் எல்லாம் தனித்தனி கோஷ்டியாக உள்ளனர். தனித்தனியே 4 எம்.எல்.ஏக்கள், அதிருப்தி கவுன்சிலர்களுக்கு ஆதரவாக உள்ளனர். என்ன ஆனாலும் புகார் மனுவை “அம்மா” வாங்கினதும் நிச்சயம் விசாரிக்க உத்தரவிடுவார்கள். அப்போது எல்லா விஷயங்களும் வெளியே வந்துவிடும்.

கே.வி.ராமலிங்கம் மீது நடவடிக்கை வந்தது போல் மேயர் மீதும் நடவடிக்கை வருவது உறுதி. குறிப்பாக அவரிடமிருந்து மாநகர் மாவட்டச் செயலாளர் பதவி பறிபோவது உறுதி’’ என்றனர்.

எனக்கு தொடர்பில்லை: எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

அதிருப்தி கவுன்சிலர்கள் இப்படி அதிரடி நடவடிக்கையில் இறங்கி யிருக்க வெள்ளிக்கிழமை நாம் வெளியிட்ட கவுன்சி லர்கள் குறித்த செய்தியில் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் தீவிர விசு வாசிதான் இந்த அதிருப்தி கவுன்சிலர்களில் ஒருவரான மாரிச்செல்வன் என்பதைக் குறிப்பிட்டு தி இந்து நாளிதழில் செய்தி வெளியானது. அதைப்பார்த்து எம்.எல்.ஏ ஆறுக்குட்டி நம்மிடம் பேசும்போது, ''எனக்கும் இப்போது சென்னை சென்றிருக்கும் கவுன்சிலர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. அந்த கவுன்சிலர்களுக்கு மாநகராட்சி பணிகளில் என்ன பிரச்சினை என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனால், நானும் கவுன்சிலர் மாரிசெல்வனும் இருக்கிற படத்தைப் போட்டு நான் ஏதோ இதன் பின்னால் இருந்து இயக்குகிற மாதிரி ஒரு தோற்றத்தை உருவாக்கி விட்டீர்கள். நான் என் கவுண்டம்பாளையம் தொகுதியில் உள்ள மக்கள் பணிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். என் தொகுதி பிரச்சினைகள் எத்தனையோ தீர்த்திருக்கிறேன். இன்னமும் எத்தனையோ வேலைகள் செய்து கொண்டிருக்கிறேன். அதைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதுங்கள். தயவு செய்து இந்த அரசியலில் என்னை இணைத்து விடாதீர்கள்’’ என்று கேட்டுக் கொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x