Published : 07 Jan 2014 08:29 PM
Last Updated : 07 Jan 2014 08:29 PM
பேரறிவாளன் விடுதலைக்காக காத்திருப்பதாக அவரது தாயார் அற்புதம் தெரிவித்தார். தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவர் கூறியதாவது:
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எனது மகன் பேரறிவாளனுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் விசாரணை அதிகாரி தியாகராஜன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனை காலம் கூறி வந்தது உண்மை தான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.
சிறையில் இருந்து எனது மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காக காத்திருக்கிறேன். விசாரணை அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே எனது மகன் விடுதலை செய்யப்படுவான் என எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை. மக்கள் ஒன்று திரண்டு ஒற்றுமையாக குரல் கொடுத்தால் தான் பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவான். மக்களின் குரல் தான் அரசின் செவிக்கு எட்டும். அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
விசாரணை அதிகாரி தியாகராஜன் இத்தனை காலம் கழித்து உண்மையை கூறியிருக்கிறாரே என்ற வருத்தம் கிடையாது. இப்போதாவது உண்மையை வெளியிட்டாரே என்று மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற மற்றவர்களின் குடும்பத்தினரும் எங்களுடன் இணைந்திருந்தால் எப்போதோ விடுதலை கிடைத்திருக்கும் என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. ஆனால் அவர்கள் ஏன் போராட முன்வரவில்லை என என்னால் கூற முடியாது.
விசாரணை அதிகாரி உண்மையை வெளியிட்டதும் தமிழக முதல்வரை சந்திக்க மனு கொடுத்தேன். ஆனால், இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. இந்த விசயத்தில் தமிழக அரசு எங்களுக்கு நிறைய உதவி செய்துள்ளது. உலகில் எங்கேயும் இல்லாத வகையில் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் 2011 செப்டம்பரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நாங்கள் நன்றியோடு பார்க்கிறோம், என்றார்.
தொடர்ந்து உயிர் வலி என்ற தலைப்பில் மரண தண்டனைக்கு எதிரான இயக்கம் தயாரித்துள்ள குறும்படத்தை அவர் வெளியிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அ.மோகன்ராஜ், நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில துணைச் செயலாளர் மாரிச்செல்வம், அருள்தந்தை சுந்தரி மைந்தன், பேராசிரியை பாத்திமா பாபு, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT